சட்டரீதியான தர்க்கங்களைக் கொண்டு அரசாங்கத்தின் பணத்தை முடக்கி கொரோனா ஒழிப்புத் திட்டத்தைச் சீர்குலைக்கும் மோசமான முயற்சியைக் கண்டிக்கிறோம் என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ
விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்
கொரோனா வைரஸ் இலங்கையில் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட தினத்திலேயே, அதாவது 2020 மார்ச் 20 ஆந் திகதி வெள்ளிக்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு, தான் தலைமை தாங்கிய கடந்த அரசாங்கம் 2020 ஆம் ஆண்டுக்காக வரவுசெலவுத்திட்டமொன்றை நிறைவேற்றாமல், 2020 ஏப்ரல் 30 ஆந் திகதி வரை மாத்திரம் வலுப்பெறும் இடைக்காலக் கணக்கறிக்கையொன்றை நிறைவேற்றியுள்ளமையினால் ஏப்ரல் 30 ஆந் திகதியின் பின்பு எந்தவொன்றுக்கும் பணம் செலவு செய்வதற்கு அரசாங்கத்திற்கு சட்டரீதியான அதிகாரம் இல்லாமற் போவதாக தெரிவித்திருந்தார். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களும் முகநூல் ஊடாக இதே தர்க்கத்தினை முன்வைத்து வருகிறார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அரச சேவைகளை நடாத்திச் செல்வதற்குத் தேவையான நிதியைத் திரட்டு நிதியத்திலிருந்து வழங்குவதற்கு இலங்கை அரசியலமைப்பின் 150(3) ஆம் உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு அதிகாரம் ஒப்படைக்கப்படுகிறது. இதனால் கொரோனா வைரஸ் ஒழிப்புத் திட்டம் மற்றும் அரசின் ஏனைய சேவைகளை நடாத்திச் செல்வதற்கான நிதி ஒதுக்கீடு உள்ளதா இல்லையா என்பது தொடர்பாக பொதுமக்கள் எவ்விதமான அச்சத்தையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை. கடந்த பெப்ரவரி 20 ஆந் திகதி நல்லாட்சி அரசாங்கத்தின் மருந்து, உரம் போன்ற அத்தியாவசியப் பொருள் வழங்குனர்களுக்கான நிலுவைப் பணத்தைச் செலுத்தி அவற்றைத் தொடர்வதற்கு நாம் பிரேரணையொன்றைச் சமர்ப்பித்த போதிலும், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட தரப்பினர் புதிய அரசாங்கத்தினை அசௌகரியத்துக்கு உட்படுத்தி அரசியல் இலாபம் பெறுவதற்காக அதனை எதிர்த்தனர்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்பு, அரசியலமைப்பின் 150(3) ஆம் உறுப்புரை மூலம் ஜனாதிபதிக்கு கிடைக்கும் நிதியதிகாரம் காரணமாக நாட்டின் அத்தியாவசிய சேவைகளை நடாத்திச் செல்வதற்கான பணத்தை எம்மால் பெற்றுக்கொள்ள முடிந்தது. இந்த நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் இல்லாத சந்தர்ப்பத்தில் 2020 மார்ச் 02 ஆந் திகதி அரசியலமைப்பின் 70(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தார். அதன் பின்னர் 10 நாட்களின் பின்பு இலங்கையில் முதலாவது கொரோனா நோயாளி கண்டறியப்பட்டவுடன் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் எனக் குரலெழுப்பத் தொடங்கினர். எமது அரசியலமைப்பின் 70(5) (அ) உறுப்புரைக்கு ஏற்ப பாராளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானியிலேயே பாராளுமன்றத் தேர்தல் நடாத்தப்படும் திகதியும், புதிய பாராளுமன்றம் முதலாவது கூடும் திகதியும் குறித்துரைக்கப்பட வேண்டும். அந்த அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்பு எந்த நிலைமையிலும் தேர்தல் நடாத்தப்படும் திகதியை ஒத்திவைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 24(3) ஆம் அத்தியாயத்திற்கு ஏற்ப ஏதாவது எதிர்பாராத அல்லது அவசர நிலைமை காரணமாக தேர்தல் நடாத்தப்படும் திகதியை ஒத்திவைக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கிறது. அதற்கேற்ப தேர்தல் ஆணைக்குழு தேர்தல் நடாத்தப்படும் திகதியை ஒத்திவைத்துள்ளது.
இவ்வாறு தேர்தல் நடாத்தப்படும் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளமையினால்;, அரசியலமைப்பின் 150(3) ஆம் உறுப்புரையின் கீழ் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் ஜனாதிபதிக்கு கிடைக்கும் நிதியதிகாரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் இரு தரப்பினரும் போட்டியிட்டுக் கொண்டு கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மூலம் அரசியல் இலாபம் பெற முயற்சிப்பதாகவே தெரிகிறது. அண்மையில் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து, தனிமைப்படுத்தி அவதானிப்புக்குச் செல்ல முடியாது என விமானநிலையத்தில் வைத்து குழப்பம் ஏற்படுத்திய குழுவினரை ஊக்குவிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்கள் அரசாங்கத்தின் தனிமைப்படுத்தி அவதானிக்கும் வேலைத்திட்டத்திற்கு இடையுறு10 விளைவித்தமையினை முழு நாடும் கண்டுகொண்டது. புதிய அரசாங்கத்தின் நிதி வழங்கலைத் தடுப்பதற்கு நல்லாட்சித் தரப்பினர் கடந்த மாதம் பாராளுமன்றத்தில் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்த பின்பு, தற்போது ஜனாதிபதிக்கு அரசியலமைப்பு ஊடாகவே வழங்கப்பட்டுள்ள நிதியதிகாரம் தொடர்பாக சட்டரீதியான தர்க்கங்களை முன்வைத்து கொடிய தொற்றுநோயொன்றின் மத்தியில் நாட்டைச் செயலிழக்கச் செய்ய மேற்கொள்ளும் இந்த முயற்சியைக் கண்டிக்கிறோம்.
சந்தர்ப்பவாத தரப்பினர் நாட்டிற்கு எதிராக முன்னெடுக்கும் இவ்வாறான சூழ்ச்சிகளின் மத்தியிலும் மக்களைக் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலிலிருந்து மீட்டெடுப்பதற்குத் தமது உயிர்களைப் பணயம் வைத்து இரவு பகலாகப் போராடும் மருத்துவர்கள், தாதிமார் உள்ளிட்ட அனைத்து சுகாதாரப் பணியாட்தொகுதியினருக்கும், முப்படையினருக்கும், அத்தியாவசிய சேவைகளை வழங்கும் ஏனையோருக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். #அரசாங்கத்தின் #கொரோனா #ஒழிப்புத்திட்டம் #சீர்குலைக்கும் #மகிந்தராஜபக்ஸ