இலங்கைத்தீவில் வாழும் மனிதர்களுக்கு அனர்த்தங்கள் புதியவையல்ல வரலாற்றில் பல்வேறு அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்து வாழ்ந்த அனுபவங்கள் பெற்றவர்கள். இயற்கையான அனர்த்தங்கள் ஏற்பட்ட போதும், செயற்கையான அனர்த்தங்கள் உருவான போதும் பாரதூரமான பட்டினியை எதிர்கொள்ளாததுடன் அதனால் வரும் போசாக்கின்மையால் பாதிக்கப்படாதவர்களாகவும் இலங்கைத் தீவின் மக்கள் கடந்த கால வரலாற்றில் இனங்காணப்பட்டுள்ளனர்.
தசாப்தகால உள்நாட்டுப் போர் நடைபெற்ற உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் போசாக்கின்மையால் பாதிக்கப்படாத மக்களைக் கொண்ட நாடாக இலங்கைத் தீவு தன்னை அடையாளப்படுத்தியது. இவ்வாறு கடந்த காலத்தில் அனர்த்தங்களின் போது பட்டினியையும் அதனால் வரும் போசாக்கின்மையையும் எதிர்கொள்ளாது இருந்தமைக்கு இலங்கைத்தீவில் வலுவாக இருந்த உள்ளூர்ப் பொருளாதார மூலங்களே அடிப்படையாக இருந்தது என்பது சமூக ஆய்வாளர்களின் கருத்தாகும்.
மதில் கட்டப்படாமல் மரங்கள், செடிகள், கொடிகளுடன் காணப்பட்ட வேலிகளும், மண்மூடி நிரப்பப்படாதிருந்த உள்ளூர்த் தோணாக்களும் அவற்றினை அண்டி வளர்ந்த தென்னை, பனை மரங்களும், சிறு சிறு தாழ்வான நிலப்பகுதிகளும், சதுர்ப்பு நிலங்களும் கண்டல் காடுகளும், சிறு சிறு பற்றைக்காடுகளும் பல்வேறு இலை குழைகளையும், நீர் வாழ் அங்கிகளையும் பல்கிப் பெருகச் செய்ததுடன் அனர்த்த காலங்களில் போசாக்கான உணவுத் தேவையினை ஈடு செய்யவும் வாய்ப்பினை வழங்கியிருந்தன. இவை உள்ளூர் மருத்துவத்திற்கான மூல வளங்களையும் வழங்கி வந்தன.
பெரும்பாலும் இயந்திரமயப்படுத்தப்படாது உள்ளூர் மனித வளத்தைப் பிரதானமாகக் கொண்டு இயக்கம் பெற்று வந்த வேளாண்மைச் செய்கையானது அவ்வுற்பத்தியுடன் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு மனிதரதும் வீடுகளில் நெல்லரிசியின் சேமிப்பினை உறுதிப்படுத்தியது. இதனால் எப்பேர்ப்பட்ட அனர்த்தங்களின் போதும் பட்டினியை எதிர்கொள்ளாது நமது நாட்டின் மக்கள் வாழ முடிந்தது.தேங்காய்ச் சம்பலோடோ அல்லது கீரைச் சுண்டலோடு மூன்று வேளையும் சாப்பிடும் நிலைமையினை இந்த உள்ளூர் வளங்கள் வலுவாக்கியிருந்தன.
இன்று கொரோனா வைரசின் தாக்கம் நம்மை வீடுகளுக்குள் முடக்கியுள்ளது. முடங்கிய சில தினங்களிலேயே உணவு இருப்பு பற்றிய பிரக்ஞை எம்மை பீதி கொள்ளச் செய்யத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் நாம் எமது உள்ளூர்ப் பொருளாதார வளங்கள் பற்றியும் அவற்றினை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரியமான கூட்டுறவு வாழ்வியல் முறைமைகள் குறித்தும் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியதன் அவசியம் எழுந்துள்ளது. அதாவது ஊரில் கிடைக்கும் வளங்களைப் பகிர்ந்துண்ட பாதீட்டுப் பண்பாடு பற்றியும் அவற்றின் மீளுருவாக்கம் குறித்தும் அக்கறை செலுத்த வேண்டியுள்ளது.
அதேவேளை நவீன நகரமயமாக்கமும் அதனோடிணைந்த நுகர்வுப் பொருளாதாரமும் அனர்த்த காலங்களில் எந்தளவு சாதகமானது என்பதையிட்டுச் சிந்திக்க வேண்டிய தேவைகளையும் எழுப்பியுள்ளது. இத்துடன் நகரமயமாக்கலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் செயற்பாடுகள் எந்தளவு நிலைபேறான அபிவிருத்திக்கு இட்டுச் செல்லக் கூடியது என்ற கேள்விகளையும் கேட்க வேண்டியுள்ளது. உதாரணமாக உல்லாசப்பயணத்தைப் பிரதானப்படுத்தி நமது உள்ளூர் வாவிகளை மாற்றியமைக்கும் போது உள்ளூர் நீர் வாழ் அங்கிகளைப் பற்றிய அக்கறை செலுத்தப்பட வேண்டியதன் அவசியம் உணரப்படுகின்றது. ‘சீ பிளேன் வருவதால மீன் பெருகுவது குறைகிறது என்று ஆதங்கப்பட்ட போது டொலரும் யூரோவும் வருகிறது இதுதான் பொருளியல் மாற்றம் பொருளாதார வளர்ச்சி என்று நியாயம் கூறினோம். ஆனால் இன்று சீ பிளேனும் வரவில்லை டொலருமில்ல யூரோவுமில்ல ஆத்துல மீனுமில்ல ஊராக்களுக்குச் சாப்பாடுமில்ல எனும் நிலைமை வந்துள்ளது’ இந்த அனுபவங்களை கருத்திற் கொண்டு நமது கடந்தகால அபிவிருத்திச் செயற்பாடுகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய தேவையினை கொரனா வைரஸ் நமக்கு ஏற்படுத்தியுள்ளது.
பணத்தை அல்லது மூலதனத்தை அதிகமாக்கிக் கொள்ளுதல் எனும் பொருளாதார கருத்தியல் ஆதிக்கம் பெற்று கிருமி நாசினிப் பாவனைகளையும், இயந்திரமயமாக்கலையும், பயன்பாட்டிற்குக் கொணர்ந்த விவசாய உற்பத்தி முறைமைகள், பொருத்தமற்ற மீன்பிடி முறைமைகளைப் பயன்படுத்தி நீர்வாழ் அங்கிகளின் இருப்பினை அச்சுறுத்தி வரும் நவீன தொழில்நுட்பப் பிரயோகங்கள் மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டியது அவசியமாகியுள்ளது.
அவ்வச் சூழல்களில் வாழும் மனிதர்கள் பகிர்ந்துண்டு ஆரோக்கியமாக உயிர் வாழ்வதற்கான பொருளாதார வளங்கள் அதற்கான உற்பத்தி நுட்பங்கள் எனும் கருத்து விளக்கத்துடன் உற்பத்தி முறைமைகள்; மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை கொரனா அனர்த்தம் நமக்குக் கற்றுத் தருகின்றது.
கொரனா வைரசின் உடனடி அச்சுறுத்தலிலிருந்தும் நீண்ட காலத்தாக்கத்திலிருந்தும் நம்மை நாம் விடுவித்து வாழ நமது உள்ளூர்ப் பொருளாதார வாழ்வியல் முறைமைகளை மீளவும் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவது அவசியமாகியுள்ளது. #அனர்த்தகாலம் #உள்ளூர் #பொருளாதாரம் #படிப்பினை #இலங்கை #போசாக்கின்மை