சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 196 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்தக் கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளை உலுப்பி வருகிறது. குறிப்பாக இத்தாலியை இந்த வைரஸ் புரட்டி எடுத்து வருகிறது. இத்தாலியில் இதுவரை 69 ஆயிரத்து 176 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இந்நிலையில், கொரோனாவுக்கு அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் 743 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இத்தாலியில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 820 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இத்தாலியில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு மெசினாவில் உள்ள கிறிஸ்டோ ரேமேர்சிங் ஹோமில் சிகிச்சைபெற்றுவந்த 70 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மருத்துவ அறிக்கைகள் வெளிவரும் வரை அவர் உண்மையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இறந்தாரா என்பதை உறுதிப்படுத்த முடியாது என இலங்கை துணைத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
அத்துடன் இத்தாலியில் வசிக்கும் 8 இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.