இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முயற்சிகளில் ஒரு பகுதியாக கைதிகள் அதிகம் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் தற்காலிகமாக விடுவிக்கப்படவுள்ளனர்.
மூன்றாண்டுக்கு குறைவான தண்டனை பெற்ற 11,000 கைதிகளை பரோலில் அனுப்ப முடிவு செய்துள்ளது மகாராஷ்டிர மாநில அரசு. இந்தியாவிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ள மாநிலம் மகாராஷ்டிரா.
அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட, இந்தியாவின் மிகப்பெரிய சிறைகளில் ஒன்றான டெல்லி திகார் சிறையில் இருக்கும் 3,000 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். இவர்களில் பரோலில் வெளியில் வருபவர்களும், வழக்கு விசாரணையில் இருக்கும்போது பிணையில் வெளியில் வருபவர்களும் அடக்கம்.
இந்தியா முழுவதும் உள்ள 1,300 சிறைகளில் மொத்தம் நான்கு லட்சம் சிறைக் கைதிகள் உள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.இவர்களில் பெரும்பாலானோர் விசாரணைக் கைதிகள்.
இந்த வாரத் தொடக்கத்தில் உச்ச நீதிமன்றம் அனைத்து மாநில அரசுகளையும் தங்கள் மாநிலத்தில் இருக்கும் சிறைகளில் கூட்டத்தை குறைக்கும் விதமாக ஏழு ஆண்டுகள் மற்றும் அதற்கு குறைவான தண்டனை பெற்றவர்களை பரோலில் விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதனால் கூட்ட நெரிசல் குறைந்து, சிறைகளில் கொரோனா வைரஸ் பரவுவது தடுக்கப்படலாம்.