ஈழநாட்டிலே பல்லின சமூகத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வோருவரும் தமக்கென தனித்துவமான கலை வடிவங்களை கொண்டுள்ளனர். அவற்றிலே ஈழ தமிழ் நாடக மரபானது தமக்கென தனித்துவ பண்புகளுடன் வியாபித்துள்ளது. இவை தமிழர் வசிக்கும் பிரதேசத்துக்கு பிரதேசம்; வேறுபடுகின்றது.
ஈழத்துத் தமிழ் நாடக மரபிலே மன்னார் கூத்து மரபும் முக்கியமான ஓர் இடத்தைப் வகிக்கின்றது மன்னார் என்றாலே கத்தோலிக்கர்கள் அதிகம் வாழும் பூமி என்பார்கள். மன்னாரினை சிலர் குட்டி உரோம் என பேச்சு வழக்கிலே கதைப்பதைக் கேள்விப்பட்டிருக்கின்றேன். இற்றைக்கு நான்Çறு வருடங்களுக்கு மேலாக கத்தோலிக்கர்கள் இவ் நிலப்பரப்பில் செறிவாக வாழுகின்றனர். அதாவது 16ம் Áற்றாண்டில் போத்துக் கேயர் இலங்கைக்கு வந்த நாள் முதல் இன்று வரை கத்தோலிக்க மத செல்வாக்கு குறையாமல் இருப்பது மன்னார் மண்ணில் மட்டும்தான். இது காலனிய செயற்பாட்டாளர்களுக்கு கிடைத்த மிகப்பெரு வெற்றி என்றே கூறலாம். இவர்கள் மதத்தைப் பரப்புவதற்கு சிறந்த ஊடகமாக ‘கலைகளையே’ கையாண்டுள்ளனர்.
மன்னாரில் பாரம்பரியமாக ஆடப்பட்டு வரும் கூத்துக்களைப் பொறுத்தமட்டில் அக் கூத்துக்கள் பாடப்படுவதன் நோக்கம் பலவாறு காணப்படுகின்றது. மதத்துக்கான மதமாற்றம் அதாவது காலனிய வாதிகளின் ஆட்சிக் காலப்பகுதியில் இலங்கையில் கிறிஸ்தவ மதம் போதிக்கப்பட்டது. அப்போது வாழ்ந்த கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய மக்கள் மத்தியில் மதத்தின் சிறப்பு மகிமையை மக்களுக்கு இலகுவாக எடுத்துக் கூறுவதற்கு இக் கலை ஓர் கருவியாக அமைந்தது. அத்தோடு இதனை அக்காலப் புலவர்கள் தம் மக்கள், கிராமம் கொடிய கொள்ளை நோய்களில் இருந்து பாதுகாக்கப்படவும், வறட்சி நீங்கி கிராமம் செழித்தோங்கவும், சந்ததிகள் பெருகவும், தொழில் துறைகள் சிறந்தோங்கவும் இவற்றை பாடியுள்ளனர். அத்தோடு புலவர்கள் ஒவ்வோரு ஊருக்கும், சமூகத்திற்கும்(சாதி) பாடிக்கொடுத்துள்ளனர். இக் கூத்துக்கள் ஊருக்கு ஊர் வித்தியாசமான கதைப்போக்கினை கொண்டமைந்துள்ளது. நோய் நொடிகள் நீங்கியமைக்கான சான்றுகளும், பிள்ளைச் செல்வங்கள் கிடைத்தமைக்கான சான்றுகளும் இன்றும் ஊர்களில் காண முடியும்.
மன்னார் கூத்துக்களை வாசகப்பா, நாடகங்கள் என்றழைக்கும் மரபு உண்டு. வாசகப்பாவினை ஒரு இராக்கதை எனவும், நாடகத்தினை இரண்டுரா அல்லது மூன்றுரா கதை என்று அழைப்பது வழக்கம். இக் கலைகள் இற்றைவரை பரம்பரை பரம்பரையாக பேணிப் பாதுகாக்கப்பட்டு வருவது பாராட்டிற்கு உரியது. எனினும் சில ஏடுகள் அழிவடைந்தமையும், திருடப்பட்டமையும் பெரும் கவலைக்குரிய விடயமாகும். இன்று இக் கலைகளின் தனித்துவமானது ஒவ்வோரு கிராமங்களிலும் தனித்தனி மனிதர்களின் உணர்வுகளோடு கலந்திருப்பதே இக் கலைகள் தலை நிமிர்ந்து நிற்பதற்குக் காரணம். கலைகள் நம்மைத்தாண்டி நம் சந்ததியினை வாழவைக்கும் என்பதற்கு தமிழ் கூத்து மரபானது சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும்.
வாசகப்பாவும் நாட்டுக்கூத்தம் ஒன்றல்ல இரண்டும் வேறு வேறு. நாட்டுக்கூத்தின் சுருக்கமே வாசகப்பாவாகும் என்று கூறுவர். அது ஒரு விளக்தத்துக்காக மாத்திரம் சொல்லப்படுவதாகும். அதன் ஆழம் கண்டறிந்தவர்கள் அவ்வாறு கூற மாட்டார்கள். கூத்துக்களில் ஆடல், பாடல், இராக, தாளங்கள் பிரதானம். ஒவ்வோரு கூத்திலும் ஆடலில் வித்தியாசம் இருக்காது ஆனால் இராக,தாளங்களில் வித்தியாசங்கள் இருப்பதைக் கண்டு கொள்ளலாம்.
கூத்துக்களை ஒரு வைத்தியருக்கு ஒப்பிடலாம். ஏனெனில் ஒரு மனிதனின் உடல் உள ஆரோக்கியத்தில் கூத்தின் வகிபாகமானது மிகப்பெரும் பங்கினை வகிக்கின்றது. இதனை மருத்துவர்களும் ஏற்றுக்கொள்கின்றனர். எம் முன்னோர்கள் நோய் நொடிகள் இன்றி ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ்ந்துள்ளர். காரணம் ஆவர்களின் வாழ்க்கை முறை இயற்கையோடு இணைந்திருந்தது. வேளான்மை அறுவடை முடிந்தும், கடற்றொழில் ஓய்வு காலங்களிலும் இக் கலை செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். கூத்தை தம் உயிர் நாடியாகக் கொண்டு, அதற்கு வடிவம் கொடுத்துள்ளனர். இதனால் நீண்ட காலமாக தொழில், குடும்ப கஸ்டங்கள், பிரச்சினைகள், மாமன் மச்சான் சண்டைகள் எல்லாவற்றையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, ஆண்டுக்கு ஒரு முறை நம்மவர்கள் கூத்துக்களை போட்டுள்ளனர். இதனால் நீண்டநாள் பகைகள், குரோதங்கள் என்பன தீர்க்கப்படுகின்றது. மன இறுக்கங்களில் இருந்து விடுதலை பெற்று உடல் உள விடுதலை கிடைக்கின்றது. ஊர் கூடி எல்லோரும் இச் செயற்பாட்டில் ஈடுபடுவதனால் ஒவ்வோருவரும் தம் வீட்டு நிகழ்வு என்னும் எண்ணத்துடன் மன நிறைவுடன் நிகழ்த்தி முடிப்பர்.
குறைந்தது ஆறு மாதம் பயிற்சிகள் இடம் பெறுவதால் இதில் பங்குபெற்றும் கூத்தர்களுக்கு நிறைந்த உடற்பயிற்சி கிடைக்கப் பெறுவது உண்மை. இதனால் இன்று மக்களை வாட்டி வதைக்கும் உயர்குருதியமுக்கம், மாரடைப்பு, கொலஸ்ரோல் போன்ற நோய்களை நெருங்க விடாமல் உடலை கட்டிறுக்கமாக வைத்துக்கொள்ளலாம். அத்தோடு இக் காலப்பகுதியில் உபவாசங்கள் இருந்து (மாமிசம், போதைப் பொருள் பாவனை முற்றாக தவிர்க்கப்படும்) கூத்தை பழகும் போது உடல் ஆரோக்கியம் பெறுவதாகவும் கூத்தர்கள் சான்று பகர்கின்றனர். ஆனால் நம்மவர்களுக்கு இது சரிவராது கிளினிக்கு கொப்பிகளை கொண்டு வைத்தியசாலையில் வரிசையில் நிற்பதையே விரும்புகின்றனர், அதனையே பழக்கப்படுத்தியும் கொண்டனர்.
கூத்தானது உளச்சிகிச்சை அரங்காகத் தொழிற்படுகின்றது. இதில் இசையின் பங்கானது அளப்பெரிய சேவையாகும். பொதுவாக இசைக்கு மயங்காத உள்ளங்களும் இல்லை உயிரினங்களுமில்லை. இசையினால் மனநோயாளிகளையும், பல தீராத நோய்களினையும் குணப்படுத்த முடியுமென உளவியல் நிபுர்கள் நிரூபித்துக்காட்டியுள்ளனர். அப்படியென்றால் நம் பாரம்ரியக் கூத்துக்களிலே எத்தனை எத்தனையாயிரம் ‘பா’ வகைகள் கொட்டிக்கிடக்கின்றன. எடுத்துக்காட்டாக வெண்பா, தார்க்கவி, வரகவி, சிந்து, பரயிரம், தரு, இன்னிசை, களிநெடில், வண்ணம், காதல், அகவல், விருத்தம், உலா, தோடையம், கூறல், கலித்துறை, கலிப்பா போன்ற பலவற்றைக் அடுக்கிக் கொண்டே போகலாம். இவற்றைக் கொண்டு ஆராய்கின்ற போது அக்கால புலவர்கள் தமிழ் இசையின் தொடர்ச்சியாக கூத்துப்பாடல்களை ஆக்கியுள்ளமை புலனாகின்றது. இப் பாவகைகள் நம் உள்ளங்களில் மோதுகின்ற போது நாமும் நம் உள்ளமும் தேக ஆரோக்கியம் பெறுகின்றோம் என்பதை நாம் உணர வேண்டும்.
இன்று நவீன சிந்தனையின் விளைவாக சினிமா, சின்னத்திரைகளின் ஆக்கிரமிப்பு இக் கலைகளுக்கு சவாலாக மேற்கிழம்பியுள்ளது. எனினும் மன்னாரைப் பொறுத்த வரையில் இது செல்வாக்கு செலுத்துகின்ற போதிலும், கூத்துத் தொடங்கி அரங்கேற்றம் வரை தமது முழுமையான பங்களிப்பைக் கொடுப்பது அக் கிராம மக்கள் இக் கலையின் மேல் கொண்டுள்ள பற்றினை பறைசாற்றுகின்றது. இரண்டு, மூன்றுரா கதையாக இருந்தாலும் சலிப்பின்றி ஒரே மன நிலையுடன் மக்கள் பங்கு கொள்ளும் அழகை சொல்ல வார்த்தை இல்லை.
இங்கனம் நோக்குகின்ற போது இக் கலை வடிவங்கள் கலையுலகில் மாத்திரமன்றி இலக்கிய உலகிலும் அறியப்பட வேண்டிய பொக்கிசமாக எம் கரங்களில் உள்ளது. அதனை சரியான முறையில் எடுத்துச் செல்வது ஆய்வாளர்களின் கடமையாக உள்ளது. இவ்வாறான ஒரு கிராமியக் கலைக்குள் இலக்கண, இலக்கியச் சிறப்புக்கள் காணுமிடத்து ஏன் நாம் நம் கலைகளைப் பயிலாமல் எங்கிருந்தோ வந்த கர்னாடக இசையையும் பரத நாட்டியத்தையும் விழுந்து விழுந்து கற்க வேண்டும் என்ற வினா என்னுள்ளே தோன்றுகிறது. பாடசாலைகளிலும் சரி பல்களைக்கழகங்களிலும் சரி ஏன் நாம் நமக்கு பிரயோசனம் இல்லாத கலையைக் கற்க வேண்டும்? இதனால் நம் பாரம்பரியம் சிதைக்கப்படுகின்றது. இதனை நாம் உணர வேண்டும்.
கூத்துக்களை ஒரு சமாந்தர பள்ளிக் கூடத்திற்கு ஒப்பிடலாம். ஏனெனில் இதில் ஈடுபடுகின்றவர்கள் தம்முள்ளே பல திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும், பண்புகளை விருத்தி செய்வதற்கும் (சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுப்பு, ஆற்றல்விருத்தி, பணிவு, ஒற்றுமை, கடமை, ……), தலைமைத்துவத்தை வளர்த்துக் கௌ;ளவும், நிர்வாகத்தை சிறப்பாக நடத்தவும் (நிதி குழு,கலைக் குழு,உபசரணைக் குழு, ஆலோசனைக் குழு), தெய்வபக்தியினை வளர்த்துக் கொள்ளவும் முடியும். அத்தோடு வயது வித்தியாசம் இன்றி தோழமை உறவுடன் செயற்படுவது மேற் கூறிய கூற்றை நிரூபிக்கின்றது.
பொதுவாக கூத்துக்களில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதை காண முடிகின்றது. கூத்துக்களில் பெண்கள் நடிப்பது, களரிக்குள் பெண்கள் வருவது தடை போன்ற பெண்களை ஒடுக்கி வைக்கும் போக்கினை காண முடிகின்றது. பெண்களுக்குரிய பாத்திரங்கள் ஆண்கள் விரும்பியோ விரும்பாமலோ ஏற்று நடிக்கும் போக்கு உண்டு. இதனை பெண்கள் நடித்தால் அதற்குரிய நளினமும், பாத்திரப் பொருத்தப்பாடும் உண்மைத்தன்மையும் நாடகங்களில் கிடைக்கப் பெறும்தானே? காலங்களுக்கு தகுந்தவாறு நம் கலைகளில் ஒப்பனை உடையமைப்புக்களில் மாற்றுதல்கள் தோன்றுவது போல் ஏன் பாத்திரங்களில் மாற்றங்களினை கொண்டுவர முடியாது? இற்றை வரை ஆண் கலைஞர்கள், புலவர்கள் தோன்றி மறைந்த மண்ணில் பெண் புலவர்கள் இல்லாமல் போனமைக்குரிய பின்புலத்தினை நோக்குகையில், அவர்களுக்கான சுதந்திரம் வளங்கப்படாமை ஒரு காரணமாக இருக்கலாம். இன்றைய சமத்துவமான உலகில் பெண்களுக்கு சந்தர்ப்பம் கொடுப்படு கலையை மதிக்கும் ஒவ்வோருவரின் கடமையாக உள்ளது. ஆண்,பெண் இருபாலாருக்கும் உரிய கலையாக இதனை கொள்ளுதல் மனங்கொள்ளத்தக்கது.
மன்னார் கூத்துப் பாரம்பரியக் கலைகளை உற்று நோக்கும் போது, ஈழத்துத் தமிழ் நாடக வரலாற்றினையும், ஈழத்து இலக்கிய வரலாற்றினையும் மீள் பார்வை செய்ய வேண்டிய ஒரு தேவை இனி வரும் காலங்களில் ஏற்படலாம். இலக்கியச் செழுமை கொண்ட இக் கலைகள் இலக்கிய பார்வையில் இடம் பெறாமைக்குரிய பின்னணி நோக்கப்பட வேண்டும். அத்தோடு கூத்துக்களையும் மீள் பார்வை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளமை குறிப்பிடத்தக்கது. பாரம்பரியக் கலைகள் காலவோட்டத்துக்கேற்ப மக்களின் வாழ்வியலோடு புத்துயிர் பெறுகின்றது. கூத்துக்கள் மக்களின் கலை, மக்களின் உரிமம் என்பதை மனதில் இருத்தி நம் கலைப் பயணத்தைத் தொடர்வோம்.
அ.ஆன் நிவேத்திகா,
கிழ.பல்கலைக்கழகம்.