கொழும்பு – வெள்ளவத்தையில் 84 வயதுடைய வயோதிப தம்பதியினர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
இந்தத் தம்பதியினர் தலைநகரின் 03 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்றுள்ளதாகவும், அவர்களது கொரோனா தொற்று அறிகுறிகளை அடையாளம் காணாது அந்த தம்பதியின் இரு வைத்தியர்களான பேரப்பிள்ளைகளே அவர்களை வைத்தியசாலைகளில் அனுமதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
84 வயதுடைய இந்தத் தம்பதியினர் சுமார் 45 பேருடன் நெருங்கி பழகியதாகவும், இந்நிலையில் அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த கொழும்பு மாநகர சபையின் மருத்துவ அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகளின் போது, அந்த வயோதிப தம்பதிகளின் இரு ஆண்பிள்ளைகள் இந்திய சுற்றுப் பயணத்தை நிறைவுசெய்து கடந்த 14 ஆம் திகதியே இலங்கை சென்றதாகவும், எனினும் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது இதுவரை உறுதியாகவில்லை எனவும் கூறப்பட்டள்ளது.
இந்நிலையில் வயோதிபத் தம்பதியினரின் பேரர்களான வைத்தியர்களால் உண்மைத் தண்மை மறைக்கப்பட்டு குறித்த வயோதிபத் தம்பதிகள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனரா எனவும் ஆராயப்பட்டு வருவதாக கொழும்பு மாநகர சபை மருத்துவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இருந்தபொதும் தற்போது, அந்த தம்பதிளினர் சிகிச்சைப் பெற்ற அனைத்து வைத்தியசாலைகளிலும் அவர்களை கவனித்த பணிக் குழுவினர்கள், வைத்தியர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.