சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 203 நாடுகளுக்கு பரவியுள்ள நிலையில் உலகம் முழுவதும் இதுவரை 47,256 பேர் உயிரிழந்துள்ளதுடன் 937,567 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 194,311 பேர் குணமடைந்து சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த சில நாட்களாக வைரஸ் பரவும் விகிதமும், உயிரிழப்பும் மிகப்பெரிய அளவில் ஏற்பட்டுவருகிறது.
இந்நிலையில், ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பு நேற்றையதினம் நடத்திய வீடியோ மூலமான செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாற்றிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் ஜெப்ரேயிசஸ் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி 4 வது மாதத்திற்குள் பயணித்துக்கொண்டிருக்கும் நிலையில், வைரஸ் அதிதீவிரமாக உலகம் முழுவதும் பரவும் நிலையால் தான் மிகவும் கவலைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக கிட்டத்தட்ட உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவும் வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளதை உணர்வதாக தெரிவித்த அவர் வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் இரட்டிப்பாகியுள்ளது எனவும் அடுத்து வரும் சில நாட்களில் 10 லட்சத்தை தாண்டிவிடுவது மட்டுமல்லாமல் உயிரிழப்பும் 50 ஆயிரத்தை தொட்டு விடும் எனத் தெரிவித்துள்ளார்.
பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது ஆபிரிக்கா, தெற்கு மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைவாக இருந்தபோதும் அப்பகுதிகளில் சமூகம், பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில் மிகவும் தீவிரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நாடுகளில் கொரோனாவை கண்டுபிடிக்கவும், பரிசோதனை செய்யவும், தனிமைப்படுத்தவும் தேவையான உபகரணங்கள் உள்ளது என்பதை உறுதி செய்வதில் சிக்கல் நிலவி வருகிறதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #கொரோனா #பாதிப்பு #உலகசுகாதாரஅமைப்பு