மகாராஷ்ட்ர மாநிலம் புனே நகரில் சுமார் 8000 சதுர அடி பரப்பளவுள்ள இடமொன்றில் இளம் பொறியியல் வல்லுநர்கள், குறைந்த செலவில் உயிர்காக்கும் வென்டிலேட்டர்களை (செயற்கை சுவாச கருவி) உருவாக்க காலத்தோடு போட்டி போட்டுகொண்டு கடுமையாக போராடி வருகிறார்கள்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகி, மருத்துவமனைகளில் ஏராளமான வென்டிலேட்டர்கள் தேவைப்படும் பட்சத்தில் தயராகும் வகையில் இவர்கள் மிக விரைவாக இவற்றை உருவாக்க போராடி வருகிறார்கள்.
இந்தியாவின் மிக சிறந்த பொறியியல் கல்லூரிகளில் தேர்ச்சிபெற்ற இந்த பொறியியல் வல்லுநர்கள், ரோபாட்கள் தயாரித்த இரண்டு ஆண்டுகள் மட்டுமே நிறைவு செய்த ஒரு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்கள் பணியாற்றும் நோக்கா ரோபாட்டிக்ஸ் கடந்த ஆண்டு, 27 லட்சம் ரூபாய் என மிக சாதாரண ஆண்டு வருவாயை மட்டுமே ஈட்டியது. அதேவேளையில் இந்த நிறுவனத்தில் பணியாற்றும் பொறியாளர்களின் சராசரி வயது 26 மட்டுமே.
இந்தியாவில் தற்போது 48000 வென்டிலேட்டர்கள் மட்டுமே உள்ள நிலையில், இதில் எவ்வளவு வென்டிலேட்டர்கள் நல்ல செயல்பாட்டில் உள்ளன என்பது யாருக்கும் சரியாக தெரியாது. இவை அனைத்தும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் பயன்பட்டு வருகின்றன என்பது அனுமானம் மட்டுமே.
கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் ஆறில் ஒருவர் மிகவும் பாதிப்படைகிறார். சுவாச பிரச்சனை உள்ளிட்ட தீவிர உடல்நலன் சார்ந்த பிரச்சனைகளும் இதில் அடங்கும்.
இந்நிலையில், பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட உதிரி பாகங்களை கொண்டு தற்போது இரண்டு இந்திய நிறுவனங்கள் வென்டிலேட்டர்களை தயாரித்து வருகின்றன. இவர்கள் தயாரிக்கும் வென்டிலேட்டர்கள் ஒவ்வொன்றும் தலா 1,50,000 ரூபாய் செலவாகிறது. அக்வா ஹெல்த்கேர் என்ற நிறுவனம் ஒரு மாதத்தில் சுமார் 20,000 வென்டிலேட்டர்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
மேலும் தேவைகளை சமாளிக்க சீனாவிடம் இருந்து 10,000 வென்டிலேட்டர்களை வரவழைக்க இந்தியா முடிவு செய்துள்ளது.
அதேவேளையில் நோக்கா ரோபாட்டிக்ஸ் பணியாளர்கள் உருவாக்கிவரும் வென்டிலேட்டர்களுக்கு 50,000 ரூபாய் மட்டுமே ஆகிறது. தங்களின் பணியை தொடங்கிய ஐந்தே நாட்களில் தாங்கள் தயாரித்து வரும் வென்டிலேட்டர்களின் 3 முன்மாதிரிகளை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.
செயற்கை நுரையீரல்களை கொண்டு இந்த முன்மாதிரி இயந்திரங்கள் பரிசோதிக்கப்பட்டன. ஏப்ரல் 7-ஆம் தேதியன்று, முறையான ஒப்புதல்கள் பெற்று நோயாளிகளிடம் இவற்றை கொண்டு பரிசோதனை செய்யப்படவுள்ளது.
பெங்களுரூவில் உள்ள ஜெயதேவா இதய சிசிச்சை ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த இருதய சிகிச்சை மருத்துவரும், இந்த திட்டத்தின் ஆலோசகருமான தீபக் பத்மநாபன் இது குறித்து கூறுகையில், ” இது நிச்சயம் சாத்தியமாக கூடிய ஒன்று. செயற்கை நுரையீரல்களை கொண்டு நடத்தப்பட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக நடந்தன” என்று கூறினார்.
நம்பிக்கையூட்டும் கதை
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயன்படக்கூடிய வகையில் குறைந்த செலவில் உருவாக்கப்படும் இந்த வென்டிலேட்டர்களை தயாரிக்க கடும் போராட்டம் நடந்து வருகிறது.
குறைந்த செலவில் வென்டிலேட்டர்களை தயாரிக்கும் இந்த திட்டத்தை ஊக்குவித்துவரும் கான்பூர் ஐஐடியை சேர்ந்த பேராசிரியர் அமித்தாபா, ”நான் சற்றும் எதிர்பார்க்காத வகையில் உலகை அச்சுறுத்தி வரும் இந்த தொற்று எங்கள் அனைவரையும் ஒருங்கிணைத்துள்ளது” என்று கூறினார்.
வென்டிலேட்டர்களை தயாரிப்பது தொடர்பாக ஏராளமான தகவல்களை தேடி பெற்ற இவர்கள், இதற்கு தேவையான அனுமதிகளை வாங்கிய பின்னர் வெறும் எட்டே மணி நேரத்தில் முதல் முன்மாதிரி வென்டிலேட்டரை உருவாக்கினார்கள். பல பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கருத்தில் கொண்டு இது உருவாக்கப்பட்டது.
மருத்துவ இயந்திரங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஒரு நிறுவனம் உள்பட சில முக்கிய இந்திய தொழிலதிபர்கள் தங்களின் தொழிற்சாலையை வென்டிலேட்டர்கள் தயாரிக்கும் பணிக்காக தர முன்வந்துள்ளனர்.
மே மாதம் மத்திக்குள், நாளொன்றுக்கு 150-200 வரை என்ற கணக்கில் 30,000 வென்டிலேட்டர்களை தயாரிப்பதே திட்டமாகும்.
தனித்துவமான இயந்திரம்
இந்தியாவின் மிகப் பெரிய பொறியியல் கல்வி நிறுவனமான ஐஐடியின் முன்னாள் மாணவர்களான பல்துறை வல்லுநர்கள், குறிப்பாக கூகுளின் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் காணொளி காட்சி வாயிலாக கண்டுபிடிப்பாளர்களுக்கு தங்களது பரிந்துரைகளை அளித்ததோடு, இயந்திரத்தின் செயல்பாடு குறித்த சந்தேகங்களுக்கு தெளிவு பெற்றனர்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட நிறுவனத்தின் தலைவர் ஒருவர் உற்பத்தியை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து 90 நிமிட விரிவுரை வழங்கினார். ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் தலைவர், மூலப்பொருட்களை எவ்வாறு பெறுவது என்று விளக்கினார்.
கடைசியாக, பல்வேறு மருத்துவர்கள் இயந்திரத்தின் ஒவ்வொரு செயல்பாட்டையும் சரிபார்த்து கடினமான கேள்விகளைக் கேட்டார்கள். முடிவில், நுரையீரல் நிபுணர்கள், இருதய மருத்துவர்கள், விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பல்துறையை சேர்ந்த வல்லுநர்கள் இளம் அணிக்கு வழிகாட்டியுள்ளனர்.
BBC