அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் நாளை திங்கட்கிழமை(6) தளர்த்தப்பட உள்ள நிலையில் கல்முனை பிராந்தியத்தில் எவ்வாறான நடைமுறைகளை வியாபாரிகள் பின்பற்ற வேண்டும் என்ற கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை(5) முற்பகல் கல்முனை மாநகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடல் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர் தலைமையில் இடம்பெற்றதுடன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணன் கல்முனை பிராந்திய காவல்துறை பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த, மாநகர முதல்வர் ஏ.எம் .ரஹீப் ,கல்முனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் தர்மசேன ,நுகர்வோர் அதிகார சபையினர், வர்த்தக சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது குறித்த கலந்துரையாடலில் அனைத்து கடைகள் ஹோட்டல்கள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும் போது உரிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றி வர்த்தகர்கள் செயற்பட வேண்டும் என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் இவ்வாறு திறக்கப்படும் வர்த்தக நிலையங்களுக்கு வருகைதரும் நுகர்வோருக்கு இடையில் சமூக இடைவெளி பேணப்பட வேண்டும், கை கழுவுதல் , முககவசம் அணிந்து கொண்டு வர வேண்டும்,இவ் உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்படும் என தீர்மானம் எடுக்கப்பட்டது.
மேலும் நாளை அனைத்து கடைகளும் திறக்க பட வேண்டும் ஆனால் கடை உரிமையாளர் உரிய சுகாதார முறைகளை பின்பற்ற தவறும் பட்சத்தில் உரிமம் ரத்து செய்யப்படும் என மாநகர முதல்வர் ஏ.எம் .ரஹீப் அழுத்தமாக தெரிவித்தார்.
இது தவிர அம்பாறை மாவட்டத்தில் பாவனையாளர்களைப் பாதுகாக்கும் வகையில் நிர்ணயவிலை தீர்மானம் ஏலவே எடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்நிர்ணய விலையை மீறி விலைக்கட்டுப்பாடு இன்றி விற்பனை செய்யும் வர்த்க நிலையங்களை சுற்றி வளைப்புகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுப்பது என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாரை மாவட்ட அலுவலக புலனாய்வு உத்தியோகத்தர்கள் குறிப்பிட்டனர். #அம்பாறை #ஊரடங்கு #கல்முனை #சுகாதார