காலம் சிறகுக் கொண்டு பறக்கும் வல்லமை உடையது ; காலத்திற்கு ஏற்ப மனிதர்கள் உருவாக்கப்பட வேண்டும் ; பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் கட்டாயத் தேவை. என பல்வேறு வகையிலும் காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் நிகழ வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டாலும், காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து இன்னும் முழுமையாக விடுபடாத நிலையில், நமது கல்விமுறையிலும் இன்னும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வடித்து தந்ததையே பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்பது ஏற்கப்பட வேண்டியதே.
ஏனெனில், காலனித்துவ அறிவு முறைமை எவ்வாறு படித்தவர், பாமரர் என்ற பிரிவினையை வலுவாக நிலைப்பெறச் செய்து வருகிறதோ, அவ்வாறு தான் மருத்துவவியல், இயந்திரவியல் ஆகியவற்றை முதன்மை நிலையில் வைத்து, ஏனைய துறைகளை விசேடமாக, கலைத்துறையை அடிமட்ட கல்விநிலைக்கு உரியதாகப் பார்க்கின்ற போக்கு, இன்னும் வலுவாகப் பிரயோகிக்கப்படுகின்ற நிலை காலாகாலமாக நிகழ்ந்தேறிய வண்ணம் இருக்கிறது. இந்நிலையின் மாற்றீடு சக்தியாக, நிச்சயம் ‘புழுவாய் மரமாகி’ நாடக எழுத்துரு அமைவதோடு நடைமுறை கல்வியினை காலத்தின் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்படவும் வாய்ப்பாக அமையக்கூடும்.
ஈழத்து தமிழ் நாடக ஆசிரியர் வரிசையில், முன்னிலையில் வைத்து நோக்கப்படும், குழந்தை. ம. சண்முகலிங்கம் அவர்களால், 1985 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ‘புழுவாய் மரமாகி’ நாடக எழுத்துரு, சமுகத்தின் கல்வி நிலைக்குறித்தான பார்வையை விசேடமாக, விஞ்ஞான, கணிதப் பாடங்களை மாத்திரம் பாடங்களாகவும், மருத்துவவியல், இயந்திரவியல் ஆகியவற்றையே துறைகளாகவும் கௌரவிக்கும் ஒருவித சமரசமற்ற பார்வையை, கேள்விக்கிடமாக்குவதாகவே, அமையப் பெறுகிறது.
ஏழு பிள்ளைகளை உடைய நடுத்தரக் கூட்டுக்குடும்பமொன்றில், ( கமலாம்பிகை – தாய் வீட்டோடு இருப்பவர், தந்தை – பரமேஸ்வரன் கச்சேரியில் இலிகதர், கவிதா- மூத்தமகள் மெடிசின் எடுத்துத் தோற்று, எக்கவுண்டன்சி செய்கிறாள். இசையில் விருப்பம் ஆதரிப்பார் இல்லை, இரண்டாவது மகள்- யோகா கடைசி முறையாக மெடிசின் எடுக்க முயற்சி செய்கிறாள், சமையலிலும், அழகுக்கலையிலும் ஆர்வம் ஆதரிப்பார் இல்லை, மூன்றாவது மகள்- வித்யா வர்த்தகம் இரண்டாவது முறை எடுக்கிறாள.; நடனத்தில் ஆர்வம் இடையில் நிறுத்தப்பட்டு விட்டது, நான்காவது மகள் – வனிதா மெடிசினுக்கு கன்னி முயற்சி செய்கிறாள். சித்திரம் வரைவதில், நடிப்பில் நாட்டம் ஆதரிப்பார் யாருமில்லை, ஐந்தாவது மகள்- வசந்தா பெற்றோரின் விருப்பமே பிள்ளையின் விருப்பம் மருத்துத்துறையில் ஆர்வம், ஆறாவது மகள் – மங்களா சமுகவியலில் ஆர்வம் ஆதரிப்பார் யாருமில்லை, மகன்- வினோதன் தரம் 11 இல் பயில்கிறான் விளையாட்டில் மிக்க ஆர்வம், சித்தப்பா- வைத்தியநாதன் வைத்தியர் என்ற நினைப்பிலேயே என்றும் வாழ்பவர், சித்தி- திருமதி.சுபோதினி வைத்தியநாதன், வைத்தியர் சாதியே உயர்சாதி எனக் கருதுபவர், தாய்மாமன்- சரவணபவன் சரியான சிந்தனையுள்ள மனிதர், மாமி- திருமதி.கௌசல்யா சரவணபவன் விஞ்ஞான ஆசிரியை, கணிதம், விஞ்ஞானப் பாடங்களையே பாடங்களாகக் கருதுபவர், அயலவர்- கலாநிதி மாணிக்கலிங்கம், அறிவுள்ள மனிதன்.)
பிள்ளைகளின் விருப்பத் தெரிவிற்கு இடமளிக்கப்படாமல், கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களை மாத்திரமே, பாடங்களாகக்கருதி, மருத்துவராக வருவதையே தன் உயர் இலட்சியமாகக் கொண்டு பிள்ளைகள் உயர்தரக் கற்கைப்பிரிவினை தெரிவு செய்தல் பெற்றோர்களால் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் நிலையினையும், இயலாத சந்தர்ப்பங்களில் ஏனைய துறைகளை (வணிகத்துறை) தெரிவு செய்யுமிடத்து, குடும்ப அங்கத்தவர்களாலேயே கேலிக்கு உட்படுத்தப்படும் அவலநிலையையும் எடுத்துக்காட்டும் நாடகம், ‘ படிப்பது பட்டங்கட்டிப் பறப்பதற்கல்ல.’ என்பதையும், ‘மொக்கன், கெட்டிக்காரன் என்று ஒருவரும் இல்லை.’ என்பதையும் எடுத்துக்காட்டுவதன் ஊடாக, கல்வியியல் தொடர்பான, சமுகத்தின் சமரசமற்ற நோக்கினை கேள்விக்குட்படுத்துகிறது.
அந்த அடிப்படையில், இன்றளவும் பாடசாலை சென்று, உயர்தரம் வரை கல்விப்பயில்பவர்களை, பல்கலைச் சென்று பட்டம் பெறுபவர்களை படித்தவர் என்றும், பாடசாலை இடைவிலகல் நபர்களை, பரீட்சையில் தோற்றவர்களை, ஏனைய துறைசார்ந்த அனுபவ அறிவுடையவர்களை படிக்கதாவர் என்றும் வரையறுக்கும் போக்கே நிலவுகிறது. அதற்கும் மாறாக, இன்றைய கல்வி முறைமை என்பது, சமுகத்தினைப் பிரதிபலித்து, அதற்கு எதிர்வினையாற்றுவதாக, அமையப் பெறாத நிலையையே காணமுடிகிறது. சுருக்கமாகச் சொன்னால், கல்விக்கும் நடைமுறை வாழ்விற்கும் எந்தவித தொடர்பும் இல்லாத நிலையே காணப்படுவதுடன். கற்ற கல்விக்கு எற்ப செயல் அறிவு இடம்பெறாத நிலை எனலாம்.
இவ்வாறு கல்வி முறையிலேயே பல்வேறு மாற்றங்கள் நிகழ வேண்டியத் தேவை இருக்கின்ற காலப்பகுதியில், கல்வியின் நோக்கம் என்பதும், ‘ஆடம்பரமான வாழ்வை, வாழ்வதற்கான அந்தஸ்துமிக்க தொழிலைப் பெற்றுக் கொள்ளல்’ என்ற சுயநல நோக்கோடு மட்;டிட்டதாகவே, அமையப்பெறுகிறது. இத்தகைய கல்வி சூழலில், மாணவர்கள் தம் சுயத் தெரிவில், பாடங்களைத் தெரிவு செய்வதற்கோ அல்லது துறைகளைத் தெரிவு செய்வதற்கோ கட்டுப்பாடுகளும், தடைகளுமே நிலவுகிறது. குறி;ப்பாக, வைத்தியக் குடும்பத்தில் பிறந்த பிள்ளையின் இலக்கு என்பது, வைத்தியத் துறை சார்ந்தே கட்டமைக்கப்படுகிறது. ஏனைய துறைக்கான விருப்பு இருந்த போதிலும், அதை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகின்ற நிலையே காணப்படுகிறது.
இன்றைய சூழலில் கல்வி என்பது, புத்தக அறிவோடு மாத்திரம் மட்டிட்டு நிற்கிறதே தவிர, செயல்வாத அறிவாக மாற்றம் பெறுவதே இல்லை ; செயல் அறிவு, பாட அறிவாக இருப்பது இல்லை. இந்நிலையில் தான், எல்லாத் துறைகளையும் சமமாக நோக்குகின்ற அல்லது பிள்ளைகளின் விருப்பத் தெரிவிற்கு, இடமளிக்கின்ற சமரசபோக்கு என்பது, சமுகத்தில் எட்டாக்கனியாகவே இருந்துவருகின்றது.
பாடசாலையை விடுத்து, பல்கலைச் சூழக்குள் சென்று பார்த்தாலும், கல்வியின் நோக்கம் என்பது பரீட்சைகளோடு மட்டிட்டு, பெறுபேறு பெற்று, பதவி பெறுவதாகவே அமைகிறது. இந்நிலையே கலாநிதி. சி. ஜெயசங்கரின் ‘ பல்கலைப் பயில்வு காண்போம்’ கவிதையும் வெளிப்படுத்தி நிற்கிறது.
பரீட்சைகள் அற்றதே பல்கலைக்கழகம்.
பரீட்சையும் பயில்வின் பகுதியென்றாகிப்பின்,
பரீட்சையே, பயில்வென்றாகிப் போய்,
பாழ்பட்டு போனது பல்கலை பயில்வு…
பட்டமுண்டு. பரீட்சைப் பெறுபேறும் உண்டு.
நாட்டமுண்டு. எதில்தான் என்றால்,
இருக்கப் பதவி, எடுக்கச் சம்பளம்
நோக்கமற்ற நோக்கம் நிறைவு கண்டோம்..
கலாநிதி.சி.ஜெயசங்கர்.
எனவே, இத்தகைய கல்வியியல் பிரச்சனைகள் நிறைந்துள்ள சூழலில், மாற்றுக் கல்விமுறைமை, மாற்று போதனா முறைமை என்பவற்றின் தேவை என்பது வலுவாக உணரப்பட்டு வருகின்றமையைக் காணலாம். அந்த அடிப்படையில் மாற்று கல்வியில், மாற்று போதான முறையில் அரங்கிற்கு முக்கிய இடம் இருப்பதாக அறியக்கூடும். இந்த அடிப்படையிலேயே, புழுவாய் மரமாகி எழுத்துருவினூடாக, நடைமுறை கல்வியியல் முறைமையை காலத்தின் மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டிய சமுகக் கடப்பாடு நிலைப்பெறுகிறது எனலாம்.
இரா. சுலக்ஷனா,
நுண்கலைத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்.