மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு விதித்திருந்த தடையை நீக்க இந்தியா இணங்கியுள்ளது. கொரோனா வைரஸின் நிலையை மாற்ற வல்லதென அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் இந்த ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் (Hydroxychloroquine) மாத்திரையினைக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மாத்திரையினை ஏற்றுமதி செய்வதற்கான தடையினை இந்தியா நீக்காதவிடத்து, பதில் விளைவுகளை சந்திக்க வேண்டியேற்படுமென ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்த சில மணித்தியாலங்களின் பின்னர் இந்தியாவினால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கைக்கு இந்தியா பதிலளிக்காத போதிலும், கொரோனா வைரஸினால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் ( Hydroxychloroquine ) மருந்துகளை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த மருந்துகள் COVID-19 தொற்றினைக் குணப்படுத்துமென்பதற்கான எந்த சான்றுகளும் இல்லையென வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.