தென்அமெரிக்க நாடான ஈகுவடாரின் முன்னாள் ஜனாதிபதி ரபேல் கொரியாவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈகுவடாரில் 2007-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் ஜனாதிபதியாக பதவி வகித்த ரபேல் கொரியா தனது பதவி காலத்தின் போது தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பெரு நிறுவனங்களுக்கு அரசு ஒப்பந்தத்தை ஒதுக்கியதாகவும், அதற்காக அந்த நிறுவனங்களிடம் இருந்து 7.5 மில்லியன் டொலர்கள் லஞ்சம் பெற்றதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பாக ரபேல் கொரியா மற்றும் அவரது பதவி காலத்தில் துணை ஜனாதிபதியாக இருந்த ஜோர்ஜ் கிளாஸ் உள்ளிட்ட 19 பேர் மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டு, அந்த நாட்டின் உச்சநீதிமன்றில் விசாரணை நடந்து வந்தது. எனினும் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்த ரபேல் கொரியா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஈக்குவடாரில் இருந்து வெளியேறி பெல்ஜியத்தில் தஞ்சம் அடைந்திருந்தார்.
இந்த நிலையில்; ரபேல் கொரியா உள்ளிட்டோர் மீதான ஊழல் வழக்கின் இறுதி விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில் இதில் ரபேல் கொரியா உள்ளிட்ட 19 பேர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து, ரபேல் கொரியாவுக்கு 8 ஆண்டுகளும், ஜோர்ஜ் கிளாஸ் உள்ளிட்ட 18 பேருக்கு தலா 6 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம் குறித்த 19 பேரும் 25 ஆண்டுகளுக்கு அரசியலில் ஈடுபடவும் தடை விதித்துள்ளது. #ஈகுவடார் #ஜனாதிபதி #சிறை #தடை