இந்த உலகில் மனித குலம் வாழ்வா? சாவா? என்கின்ற பேரனர்த்தத்திற்குள் அகப்பட்டு அதிலிருந்து தம்மைப் பாதுகாத்தலுக்கான தீர்க்கமான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில்இ இப்போர்க்களத்தின் முன்னரங்கில் நின்று சமராடும் மருத்துவத்துறையினரும்இ இதற்கான ஏற்பாடுகளை வழங்கிக் கொண்டிருக்கும் அரசும் அதன் நிருவாகக் கட்டமைப்பினரும் எதிர்கொள்ளும் பாரிய சவால் சமூக இடைவெளியை உரிய முறையில் பேணுவதில் ஏற்படும் இடர்களேயாகும்.
சமூக இடைவெளி சரியாகப் பேணப்படாமையால் உயிரைப்பணயம் வைத்துப் போராடும் மருத்துவத்துறையினரின் முன்னேற்றம் ‘சாண் ஏற முழம் சறுக்கும்’ நிலைமையினையே ஏற்படுத்தி வருவதாக உள்ளது. இதனால் சமூக இடைவெளியைப் பேணாதோருக்கு எதிராக அரசும் தவிர்க்க முடியாமல் சட்டத்தைப் பிரயோகிக்க வேண்டிய துர்ப்பாக்கியத்திற்குள் தள்ளப்படுகின்றது.
இன்னொரு பக்கம் பெரும்பாலான மக்களிடமிருந்து இல்லாமை பற்றிய கதைகளும் கையேந்தி நிற்கும் காட்சிகளும் ஊடகங்களூடாக வெளிக்கொணரப்படுகின்றன. இத்தகைய சமூக நிலைமைகளுக்கான பின்னணி குறித்தும் இது வலுவடைந்தமைக்கான காரணங்கள் பற்றியும் ஆராய வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாக உணரப்படுகின்றது. இக்குறிப்புக்கள் இதனை உரையாட முனைகின்றது.
காலனித்துவமும் அதற்குச் சாதகமான வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள நகரமயமாக்கமும் நவீனமயமாக்கமும் நுகர்வுப்பண்பாட்டு உருவாக்கமும் நம்மிடையே போட்டி மனப்பாங்கை வலுவாக வேர்கொள்ளச் செய்துள்ளன. அவற்றின் விளைவுகளை நாம் இன்று பார்க்கின்றோம். சிறு பராயத்திலிருந்தே போட்டி மனப்பாங்கு நம்மிடையே விதைக்கப்பட்டு ஆழமாக வேர்கொள்ளச் செய்யப்படுகின்றன. ‘போட்டி இல்லையேல் பங்குபற்றலில்லை?!’1 எனும் நிலைமை நமது கல்வித்துறையின் எதார்த்தமாகியுள்ளது. வசதியான வாழ்க்கைக்கு போட்டியிடுவதும் போட்டியில் வெற்றி பெறுவதுமே சூத்திரமாக போதிக்கப்பட்டு வருகின்றது. போட்டி மனப்பாங்கு சந்தர்ப்பங்களைத் தனது சுயநலத்திற்குரிய வகையில் சாதகமாக்கிக் கொள்வதில் கவனக்குவிப்புடன் இயங்குவது இயல்பாகியுள்ளது. இந்த உளவியலின் விளைவுதான் இன்று கொரொனா அனர்த்தத்தின் போது அத்தியாவசியப் பொருட்களுக்கான செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கச் செய்துள்ளது. பணவசதி படைத்த வர்க்கத்தார் ஊரடங்கு தளர்த்தப்படும் போது பலநாட்களுக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்துவிடுகின்றனர் இது சந்தையில் செயற்கைத்தட்டுப்பாட்டை உருவாக்கி விலையேற்றங்களுக்கும் வழிவகுக்கின்றது. இங்கு உள்ள வளத்தை அனைவருக்கும் பங்கிட்டு வாழும் வாழ்வு அர்த்தமற்றுப் போகின்றது. இதனால் உடலுழைப்பை மாத்திரம் மூலதனமாகக் கொண்டு வாழும் மனிதர்களே மிகவும் பாதிக்கப்படுகின்றார்கள். எனவே சந்தர்ப்பவாதம்இ போட்டி மனப்பாங்கு விளைவித்துள்ள சமூகம் அதன் உளவியல் நிலைமை பற்றி நாம் ஆழமான மறுமதிப்பீடுகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது.
அடுத்து நமது நாட்டில் பிரதானம் பெற்றுள்ள நுகர்வுப்பண்பாடும் அதற்கு அடிப்படையான சேவைத்தொழிற் துறையும் நம்மிடையே பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த சேமிப்புப் பழக்கத்தை இல்லாமலாக்கிவிட்டது. நாளாந்தம் சோறு சமைக்கும் போது ஒரு கைப்பிடி அரிசியினைச் சேமிக்கும் நமது பாரம்பரிய நடைமுறைகள் வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ளன. பாரம்பரிய விவசாய முறையில் அடுத்த உற்பத்திக்காக தானியங்களைச் சேமித்து வைக்கும் நடைமுறை மரபணுமாற்றம் செய்யப்பட்ட விதையினங்களின் வரவால் இல்லாமலாகிவிட்டது. இதனுடன் சேர்ந்து தானியங்களைச் சேமிக்கும் பண்பாட்டுப் பழக்க வழக்கமும் மெல்ல மெல்ல வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ளன. இது திடீரென ஏற்படும் பொருளாதார விநியோக தடைகளின் போது உணவு இருப்பு இல்லாமல் வாழும் குடும்பங்களை அதிகரிக்கச் செய்துள்ளது.
அண்மைய தசாப்தங்களுக்கு முன்னர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்காக அரசால் வழங்கப்பட்ட நிவாரணங்களில் கூட்டுறவுச் சங்கத்தினூடாக அரிசி முதலிய தானியங்களே வழங்கப்பட்டு வந்தன. மாதாந்தம் இரு தடவைகள் இந்த நிவாரணங்கள் கிராம மட்டத்தில் வழங்கப்பட்டு வந்தன. இது வறுமைப்பட்டவர்களின் வீடுகளில் உணவின் இருப்பை உறுதிப்படுத்தியது. அனர்த்தங்கள் வரும் போது அதைத்தாக்குப்பிடித்து நிற்பதற்கான குறைந்தபட்ச உணவிருப்பை இது உறுதிப்படுத்தியது. இதற்காக உள்ளூர் விவசாயிகளிடமிருந்து வருடாந்தம் ஒரு தொகுதி உற்பத்திகள் அரசால் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு மாவட்டங்களிலும் நெல்லுஇ அரிசிக் களஞ்சியங்கள் நிரம்பி வழிந்தன. ஆனால் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட வறுமை ஒழிப்பு வேலைத்திட்டங்கள் தானியத்திற்குப் பதிலாக பணத்தை வழங்குவதாக மாற்றப்பட்டது. அரசின் நெல்களஞ்சியங்கள் பாழ்விழுந்து போயின சில தனியாருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளன. உள்ளூர் விவசாயிகள் அறாவிலைக்கு தனியாரிடம் தமது நெல்லை விற்க வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்தவர்களின் வீடுகளின் பானைகளுக்குள் அடுத்த வேளைக்கான உணவுக்குரிய தானியங்களைச் சேமிக்கும் தன்மை இல்லாமல் போனது மாறாக கடன் வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட சிறுகுழு உருவாக்கமும் கடன் வழங்கலும் நுண்கடன்களைப் பெற்று திக்குமுக்காடும் அவலத்திற்குள் அத்தகையோரின் (வறுமைப்பட்டோர்) பெரும்பாலானோரை இட்டுச்சென்றது. இது உணவுச் சேமிப்புப் பழக்கத்திலிருந்து விலகி பிறரிடம் கடன் கேட்கும் தன்மைக்கு நிலை மாற்றியது. பங்கீட்டுக் கடையினை நோக்கிச் சென்றவர்கள் நிதிநிறுவனங்களை (வட்டிக்கடைகளை) நோக்கி நகர்த்தப்பட்டார்கள். கடன் அடைக்க கடன் வாங்கிஇ கடன் வாங்கி இறுதியில் பெருங்கடன் சுமையுடன் திக்குமுக்குப்படும் அவல வாழ்க்கை. குடும்பத்தில் பிள்ளைகள் அதிகமிருந்தால் வயதில் மூத்தவர்கள் கல்வியிலிருந்து இடைவிலகி சேவைத்தொழில் துறைகளை நாடிச்செல்ல வழியேற்படுத்தியது. பெண்களை வீட்டு வேலையாளராக மத்திய கிழக்கினை நோக்கி நகர்த்தியது.
அரசால் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்தவர்களுக்கு தானியங்கள் பங்கீட்டுக் கடைகள் ஊடாக வழங்கப்பட்ட நாட்களில் இத்தகைய குடும்பங்களிலிருந்து கல்வியில் பலர் முன்னேற்றமடைந்தனர். இது வறுமைக் கோட்டின் கீழிருந்தவர்களிடையே பிறரிடம் கையேந்தும் உளவியலை வலுப்படுத்துவதற்கு மாறாக வறுமையிலிருந்து மீண்டெழுவதற்கான உத்வேகத்தை உந்து சக்தியை வழங்கியிருந்தன. போர்க்காலத்திலும் வறுமைக் கோட்டின்கீழ் வாழ்ந்த மக்கள் பட்டினியின்றித் தாக்குப்பிடிப்பதற்கு பங்கீட்டுக் கடைத் தானியங்கள் பெரும்பங்காற்றியிருந்தன.
ஆனால் இத்தகைய மக்கள் இன்று விநியோகம் தடைப்பட்டதால் ஒரு வேளை உணவு இன்றி தவிப்பதாக செய்திகள் வருகின்றன. காணொளிகள் காட்டப்படுகின்றன. கையேந்தும் மனிதர்களுக்கு கருணை காட்டுமாறு கோரப்படுகின்றது. கருணை காட்டுவது விளம்பரமாக விரிவு பெறுகின்றது. இவை விளைவிக்கும் உளவியல் குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக கையேந்தும் மனிதர்களாகக் காட்டப்படுபவர்களின் அடுத்த சந்ததிகளின் உளநலம் எத்தகையதாக இருக்கும்? இதனால் உருவாகும் விளைவுகள் எவ்வாறு அமையும்? என்பது பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டியுள்ளது. எனவே! இந்த நிலைமைகளுக்கான பின்னணிகள் குறித்து ஆராய்ந்து விவாதித்து நமது உள்ளூர் உற்பத்திகளை வலுப்படுத்தும் செயற்றிட்டங்கள் தொடர்பிலும் அதற்குச் சாதகமான வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளிலும் கவனஞ்செலுத்த வேண்டிய அவசியத்தை கொரொனா பேரனரத்தம் ஏற்படுத்தியுள்ளது. மிகவும் முக்கியமாக நமது பண்பாடாக விளங்கிய சேமிப்புப் பழக்கத்தை மீளக்கொண்டு வருவதற்கான அதனை வலுப்படுத்துவதற்கான பொருளாதார வறுமை நிவாரண நடைமுறைகளை நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
து.கௌரீஸ்வரன்