( Psycho Cinema : Ethically Mind in Invisible )
மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்துள்ள சைக்கோ படம் கண்பார்வையின்றி வாழும் மனிதனின் நேசிப்பு சார்ந்த அறவாழ்வை நோக்கி நகர்கிறது. கண்களுக்குப் புலப்படாத மனசின் அழைப்பையும் தவிப்பையும் ரணத்தையும் பார்த்து சுவாசத்தின் வழிப் பரிசம் கொள்கிறது. வாசத்தின் வழியாகவும் பயணமாகும் கதாநாயகன் கௌதம் (உதயநிதி ஸ்டாலின்), இசையின் வழியாகவும், நேசிப்பின் வழியாகவும் காதலின் ஆழம் தேடுவதும், ‘காதல் கண்களால் பார்க்கக்கூடியதன்று காதல் மனதால் பார்க்கக்கூடியது நுகரக்கூடியது காதலுக்குக் கண்கள் இல்லை’ என்று சொல்வது இந்நாயகனின் செயலுக்குப் பொருந்தும்.
காதலின் அன்பையும் அறத்தை நோக்கி நகர்கிறார் சைக்கோவின் நாயகன் கௌதம். இவ்வாறு பேச்சொலிகளின் மூலமும், சுவாசத்தின் வழியாக உணர்ந்து செயல்படுவதும் பார்வையற்றோரின் தனிப்பண்பு. அறிவால் அணுகும்போது கூட சுவாசத்தின் வழிக் கண்டடைதல் நிகழ்வது நிதரிசன உண்மை. சுவாசத்தை உணரும் போது ஒருவித மோனம் உருவாகிறது. இம்மோனத்தின் வழியாக அறிவு விசாலமாகிறது எனும் ஜென் கதைபோல சைக்கோவில் உதயநிதியின் மவுனம். இதற்கு நேரெதிர் பாத்திரம் சைக்கோ.கௌதம் அன்பைத்தேடிப் பிறரின் உதவியுடன் பயணமாகிறான். சைக்கோவோ கிடைக்காத அன்பின் ஏக்கத்தில் பிறரைக் கொள்கிறான். இவ்வாறு இவ்விரு பாத்திரங்களின் எதிர் – எதிர்நிலையில் மவுனத்தோடு உலாவுதாகத்தோன்றினாலும் உள்ளீடாக நிறைய நிறையப் பேசுகின்றன. பேசுவதைக்காட்டிலும் அதிகம் பேசாப் பாத்திரமாக சைக்கோ பாத்திரத்தை உருவாக்கியது, இப்பாத்திர வார்ப்பின் வெற்றி.
சைக்கோவின் கண்களில் வன்மம் வெளிப்படையாக வெளிப்படாமல் கொலையாளியாக மாறும்போது மென்மையான வன்மம் வெளிப்பட்டுள்ளது. பகலில் ஒரு குணம், இரவில் ஒரு குணமாக வெளிப்படும் சைக்கோவிற்கு இருட்டு என்பது கூடுதல் முடக்கத்தைத் தருவதும், கொலை செய்யும்போது அவனது ஆடை ஆணுக்கான நகர்விலிருந்து நலினம் வெளிப்படுகிறது. பகலில் அவனது தொழில் பன்றிகளோடு மட்டும் தானா? வேறு வேலை? ஆள் அரவமற்ற சூழலில் தான் கடத்துகிறானா? அல்லது பெண்களைக் கடத்தும்போது கண்டும் காணாமல் போய்விடுகிறார்களா? தொழில்நுட்ப யுகத்தில் வீட்டிற்கு வீடு கேமராக்கள் விழித்துக் கொண்டிருக்க எவருக்கும் தெரியாவண்ணம் சைக்கோ எவ்வாறு கடத்துகிறான்? இவ்வாறான வினாக்களுக்குப் பதில் சொல்லாமல் பார்வையாளர்களை நோக்கிய காட்சி வெளிக்குள் கொண்டுசேர்க்கிறது. இது மற்ற தமிழ்சினிமா இயக்குநர்களிலிருந்து மிஷ்கின் வேறுபடுகிறார்.
ஒருவர் குற்றங்களைத் தொடர்ந்து செய்துகொண்டே இருந்தால் அவருக்குக் கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும் என்பதை மாற்றிக் காட்டியுள்ளது இந்தப்படம். குற்றத்திற்குத் தீர்வு தண்டனைகளும் தூக்குக்கயிறுகளும் தீர்வல்ல என்பதை இப்படத்தில் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் மிஷ்கின். சைக்கோ (ராஜ்குமார்) பாத்திரத்திற்கு அரவணைப்பும் பாசமும் கிடைக்காமல் வாழ்நாள் இறுதிவரை குற்றத்திற்கான தண்டனையைத் தனித்துவிடப்பட்ட நபராக ஆக்கியிருப்பது பெரும் தண்டனை தான். இக்காட்சியோடு படம் இறுதியை நோக்கிச் செல்கிறது, முடிந்துவிட்டது என்று நினைக்கத்தோன்றுகிறது. ஆனால் இயக்குநர் இவ்வாறு அவ்விடத்தில் முடிக்கவில்லை. ஏனென்பதை யூகித்துப்பார்த்தால், அவன் சைக்கோவாக, கொலையாளியாக மாறியதற்கு, அன்புவயப்பட்ட கற்பிதங்களும் படிப்பினைகளும் இல்லாமல் போனதும், பாசம் இல்லாத் தண்டனை வழங்குதலுமே காரணகர்த்தாவாகும். மேலும் இவனை இப்படியே தனித்து விட்டுச் செல்ல இயக்குநருக்குப் பிடிக்கவில்லையோ? என்னவோ.
அதனால்தான், வெட்டப்படவிருந்த நாயகி தாகினியை நாயகன் அழைத்துச் செல்லும்போது வாசலின் வெளியில் படுத்தவாறு அழுது தவிக்கிறான். எனக்குப் பரிசு கொடுங்க. போகாதிங்க… என்னத் தனியா விட்டுவிட்டு போகாதிங்க..’ எனக் கதறி அழுவதாக இக்காட்சி அமைகிறது. இதற்குப்பின் நாயகியோ ஒரு சாவியைப் பரிசாகக் கொடுப்பது, உன்னை நீயே விடுதலை செய்து கொள்! , உன்னை நீயே திறந்து கொள்!, பிறழ்ந்துள்ள ஆழ்மனத்தின் கதவுகள் உம்மை பூட்டிவைத்துள்ளதைத் திறந்து, அன்பும் பண்பும் அறமெனப்பட்ட மனசினை உள்மன இருள்வெளியினை உன் கண்களால் பார்! என்பதான புரிதலை நோக்கி நகர்கிறது சைக்கோ திரைப்படம். இதுவே சைக்கோவிற்கான தண்டனை. தாயின் பாசமும், தாய் வடிவமான ஆசிரியரின் பாசமும் பால்ய பருவம் கடந்து இளையோர் பருவம் எய்தும் சூழலில் ஓர் இளைஞனின் சுய உணர்வின் தன்மையைப் புரிந்து இளையோர் பருவ மாற்றத்தினை, பக்குவமாகப் புரியவைக்க முயற்சி மேற்கொண்டிருந்தால் அவனது மனத்தின் மனப்பிறழ்வு அதிதித்தனமாக கொலைகள் செய்யும் அளவிற்கு ஆகியிருக்காது.
அவனைப் பல கொலைகள் செய்யும் அளவிற்குத் தள்ளியிருக்காது. தாய்,தந்தை அரவணைப்பின்றி வாழும் சூழலில் தனக்கு நிராசையாகவுள்ள தாகத்தைத் தீர்த்துக்கொள்ளக் கொலைகள் பலசெய்கிறான். இப்படத்தில் கொலைசெய்தல் காட்சி மற்ற தமிழ்ச் சினிமாகளின் வன்மத்தனமின்றி எடுத்திருப்பது சிறப்பு. கொலையையும் கொலைசெய்யும் இடத்தில் இரத்தவெள்ளத்தைக் காட்டும் தமிழ்ச்சினிமாபோல் இல்லாமல் இருப்பது ஒளிப்பதிவின் தனித்துவம். அதேபோல சுய இன்பம் செய்தலை வக்கிரமாகக் காட்சிப்படுத்துதலின்றி அமைந்துள்ளது. அந்தரங்கத்தன்மையை வெளிப்படுத்துதல் தர்மமாகாது என்பதைப் படம் சரியாகச் செய்துள்ளது. பின்னைய நவீனத்துவச் சூழலில் சுய இன்பம் என்பது தனிநபரின் விருப்பம் சார்ந்ததாகவும், தனிநபர் உணர்வு, சுதந்திரம் சார்ந்ததாகச் சொல்லப்படுகிறது.
ஆனால் அது பொதுவெளிக்குள் எல்லோருக்கும் மத்தியில் நிகழாமல் இருக்கின்றபோது அது பிறரைப் பாதிக்காது. அந்தரங்கமானதைக் கட்டுடைக்கும் வெளியில் எல்லோரும் அறியச்செயல்படுவது எல்லோருக்கும் இது பைத்தியக்காரத்தனமே எனச் சொல்ல நேரிடும். ஆனால் இப்படத்தில் இக்காட்சியைப் பூடகமாகக் காட்டப்பட்டுள்ளது. ஒருவரின் சுயஇன்ப வெளிக்குள் எவரும் உள்நுழைய, எவருக்கும் உரிமை இல்லை. இதை ஒருவர் பார்க்க நேரும் போதும் சுயஇன்பம் குறித்த மதிப்பீடோ தண்டனைக்குரியதாகவும், பாவத்திற்கு உரியதாகவும் பொதுப்புத்தியில் உறைந்திருக்கிறது. ஆணுக்கோ, பெண்ணுக்கோ, அரவாணிக்கோ சுயம் சார்ந்த இன்பம் என்பது அவரவர் விருப்பம் சார்ந்ததாகும். இப்படத்தில் சுய இன்பம் அடைவதைப் பாவச் செயலாகப் பார்ப்பதைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
படத்தின் பாடல்களனைத்தும் அருமையாக அமைந்துள்ளதோடு கதைசொல்லலோடுப் பொருந்தியிருக்கிறது. இசைஞானியின் இசையின்நிகழ்வெளி என்பது உலகப்போர்கள் தந்த வலிக்கான மருந்தை இசைவழிக் கொண்டு வந்துள்ள உலக இசைஞானி பீத்தோன் இசையோடு பொருந்தியுள்ளது என்றே சொல்லவேண்டும். வெளிச்சக்கோலங்களுக்குள் இசைமீட்டும் நாயகன் கௌதம் பாடும்போது எல்லோரும் தன்னை இழந்து பாடலோடு கலப்பதுபோல காட்சி அமைத்திருப்பதைப் பார்க்கமுடிகிறது. இப்பாடல் காட்சியில் புல்வெளியில் கவனமாக வித்தைகாட்டும் கோமாளி சிரித்தவாறே வித்தை காட்டிக்கொண்டு இருப்பவர் பாடலைக் கேட்டுக்கொண்டே மனமுருகி சோகமயமாக ஏதுமற்று அமைந்துவிடுகிறார்.
‘உன்ன நெனச்சு நெனச்சு உருகிப் போனே மெழுகா’ எனும் கபிலன் பாடலின் வரிகளும் பாடலுக்கான காட்சிகளும் பொருத்தமாக அமைந்துள்ளது. மற்றுமொரு மிஷ்கின் கவிதையின் பாடல், ஒட்டுமொத்தக் கதையைப் பாடல்வரிகளுக்குள் புதைந்திருப்பதை அவதானிக்கமுடிகிறது. ‘தாயின் மடியில் நான் தலையை சாய்கிறேன் ஃ தங்கமே ஞானத்தங்கமே ஃ உன் பூம்மடி எனக்குக் கிடைக்கவில்லை ஃ போகும் வழியே உன் நினைவே துணை ஃஆராரோ பாடு கண்மணியே ஃ பொன்மணியேஃ சோகம் தாங்கிஃ பாரம் இரக்க ஃ யாரும் இல்லையே துணையாய் ஃ சுனையாய் கருணையே இல்லையேஃ கோபம் வாழ்வில் நிழலாய் ஃ ஓடி ஆடி அலையாய்ஃ பாசம் நெஞ்சில் கனலாய் ஃஓங்கி ஏங்கி எரிய ஃகாற்றே ஃஎன் காற்றே ஃஉன் தாலாட்டில் இன்று தூங்குவேன் ஃதாயே ஃ என் தாயேஃ உன் சேயாய் ஃ கருவில் கலந்தேன் எனும் பாடல் வரிகள் இப்படத்தில் கதையின் இரு துருவங்களாக இருக்கும் கதாநாயகன் ஓ சைக்கோ இருவரின் மனவலி சார்ந்ததாகப் பொருந்திப்போகிறது.
காதலின் அரவணைப்பைத்தேடும் நாயகனோ அவமானப்பட்டு அன்பை இழந்த சைக்கோவின் தகிப்பு எனும் எதிர்மையின் இருத்தலையும், வலியினையும், எதிர்பார்ப்பையும் பாடல்வழிக் கதை நகர்விற்கான தன்மையில் படம் அமைந்திருப்பதை அறியமுடிகிறது. நாயகன் நாயகிக்கான பாடல்போல வெளிநிலையில் அமைந்திருந்தாலும், புதைநிலையில் இப்பாடல் சைக்கோ பாத்திரத்தின் பரிவையும் ஏக்கத்தையும் குற்றம் செய்வதை நினைத்து இயங்குவதும் தன்னைக் கண்டிக்காத தாயை நினைத்து ஏங்குவதும், ஆளரவமற்ற வாழ்வில் அன்பாய் கருணையின் ஊற்றாய்ப் பாசத்தைக் கொடுக்க எவரும் இல்லையே என்கிற தவிப்பில் இப்பாடலின் அர்த்தம் வெளிப்படுகிறது. முத்துராமன் (ராம்) பாத்திரம் கொலையாளியைக் கண்டுபிடித்த நோக்கில் காட்சிவெளியில் அலைவுறுகிறது.
கொலை செய்து ஓர் இடத்தில் சடலத்தைப் போட்டுவிட்டுச் செல்கிறான். அதைக் காவலர்கள் தேடிச் செல்கிறார்கள்; தேடிச் செல்லும் பொழுதெல்லாம் சடலத்துக்கு அருகில் நின்றவாறு முத்துராமன் சினிமாப் பாடலைப் பாடுகிறார். இது அவரின் வழக்கமான செயல். இது பார்வையாளருக்கு ஒருவித ஏமாற்றத்தையும், சலிப்பையும் தந்தாலும் இது குறியீடாகவே அர்த்தப்படுகிறது. ஒவ்வொரு முறையும் பாடல் பாடுகிறார்.; பாடும் போதெல்லாம் கொலையாளியைக் கண்டுபிடித்துவிட்டாரென, படம் பார்க்கும் பார்வையாளனுக்குள் உள்நுழைகிறது. ஆனால் ஒருகட்டத்தில் கொலையாளியை நேருக்குநேர் பார்க்கிறார்.; பார்க்கும்பொழுது எவ்வித பாடலும் பாடவில்லை. காவலர் முத்துராமனின் மரணக் காட்சிவெளிப்பாடு கூடுதலான இறுக்கத்தையும், அழுத்தத்தையும் கொடுக்கின்றது. சிங்கம்புலியின் கொலை நாயகனை மேலும் பலவீனப்படுத்தினாலும், துணிந்து செயல்படுகிறான். கமலாவின் கோபமான பேச்சினை இயக்குநர் கச்சிதமாகப் பொருத்தியிருக்கிறார்.
பவா செல்லத்துரை நடித்த பாத்திரம், வழக்கிற்கான குறிப்பேட்டை நகல் செய்வதும், கருணை படைத்த இஸ்லாமியராகக் காட்டியிருப்பது வழக்கமான தமிழ் சினிமாக்களுக்கு நேர் எதிரானது. தமிழ் சினிமாவில் சிறுபான்மையினரைத் தீவிரவாதியாகவும், சந்தேகத்திற்கு உரியவராகவும், காட்டப்படுவதற்கு மாறாகக் கருணை, அன்பு மனம் படைத்தவராக, இப்பாத்திரம் அமைந்துள்ளது. தமிழ் சினிமாவின் வழிவழியாகத் தொடரும் கதைசொல்லல் கட்டுமானங்களைத் தகர்க்கூடியவகையில் தர்க்கங்களால் பின்னப்பட்டிருப்பதை சைக்கோ திரைப்படத்தில் பார்க்கமுடிகிறது. இப்படம் பல கேள்விகளை எழுப்பிக்கொண்டே போகின்றது. இக்கேள்விகளுக்கான காட்சிவெளி அரூபவெளி கடந்து பார்வையாளர்களின் மனவெளிக்குள் செல்வது என்பதும் பின்னைய நவீனத்துவக் கதைசொல்லல் முறை என்றே சொல்லலாம். இது உலக நவீனசினிமாவின் தரத்திற்குத் தமிழ் சினிமாவைக் கொண்டு செல்வதற்கான முயற்சியை மிஷ்கின் தொடர்ந்து செய்துவருகிறார்.
இப்படத்தில் நாயகன் பூந்தோட்டத்தில் வாங்கும் கள்ளிச் செடியைப் பார்த்துச் செல்லும் கதாநாயகியின் முகம் சுழிப்புக்கான மெய்ப்பாட்டினைக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பின்னொரு காட்சியில் அவள் சிறைப்பட்டிருக்கும்போது அதே கள்ளிச்செடியை சைக்கோ கொடுக்கிறான்.அப்பொழுது அவளது மெய்ப்பாட்டினை, பிரிதலும் பிரிதல் சார்ந்த வலியை மாற்றுவதாகவும். நம்பிக்கைக்கானதாகவும் அர்த்தப்படுத்துகிறார் இயக்குநர் மிஷ்கின். கதாநாயகனைப் பாலைநிலத் தாவரத்தைச் சேகரித்து வைக்க நினைத்தது பிரிவின் குறியீடும் பின்னோக்கு உத்தியுமாகும். ஈரமற்ற நிலத்தில் வாழும் கள்ளித்தாவரம், பிரிவின் குறியீடு. காதல் எனும் நிலத்தின் பிரிவு நிரந்தரமற்றது, நான் வருவேன் என்பதை இது காட்டுகிறது. நீர் இன்றித் தவிக்கும் முட்செடியைச் சேகரித்து தண்ணீர் ஊற்றி வளர்க்கும் நாயகனின் பரிவு விழிகள் இன்றி வழிமாறிப்போகவில்லை தன் வெளிச்சமாக எண்ணும் வழித்துணையின் ஆத்மார்த்த காதலின் வெளிப்பாடு. காதல் கைகூடத் துணையாய் இருக்கும் உதவியாளர் (சிங்கம்புலி) பாத்திரமும், கைகால்கள் செயலிழந்த கமலா(நித்யா மேனன்) பாத்திரமும் கௌதமிற்கு இரு கண்கள் போலத்தான் என்பதை உணரமுடிகிறது.
உளச்சிக்கலில் உழன்று தவிக்கும் நிலை இறுதியில் கண்களில் கண்ணீர் சொருக வைக்கின்றன. பொது வெளியில் குற்றமாகப் பார்ப்பதை உள்ளீடாகப் பார்க்கும்போது குற்றமற்றதாக குழந்தைத்தனமானதாகப் பார்க்கும் தாய்மை வடிவமாகக் கதாநாயகி வெளிப்படுகிறாள்.சைக்கோவிற்குக் குற்றவாளிக்கான தண்டனை வழங்கப்படுதலும் தண்டனைக் காலங்களில் தன் வாழ்நாளினை இருட்டிற்குள் கழித்து சடலமாகிப் போகும் மனிதர்களின் வாழ்வைப் பதிவுசெய்துள்ளது. புறத்தோற்ற அடையாளங்களின் மதிப்பீடுகள் அதன்வழியாகச் சொல்வது என்பது மரணத்தின் பிடியில் தம்மை ஆட்படுத்தும் என்பது சைக்கோவான பாத்திரத்தின் மேல் சுமத்தும் பலியல்ல. சைக்கோவாக நடமாடும் நபர்களின் மேல் சுமத்துவதாகும். பகலில் கிளின் சேவ் பண்ணிய நபர் இரவில் தனக்குச் சரியென நினைத்து, திறமை வாய்ந்த பெண்களையும் பாலியல் தொழிலாளர்களையும் வாழத்தகுதியற்றவர்களாக அப்புறப்படுத்துவதுமான இருமை எதிர்வு மனம் படைத்த சைக்கோவை காட்சிவெளியில் படிமப்படுத்துகிறார் இயக்குநர் மிஷ்கின். இவ்வளவு கொலைகள் செய்தவனுக்குத் தண்டனை படத்தில் கொடுக்கவில்லை எனும் கேள்வி எல்லோருக்கும் தோன்றும். எதிர்பாலினத்தின் மேல் சைக்கோவிற்கு இவ்வளவு கோபம் எதற்கு என்பது சொல்லப்படவில்லை. பல கேள்விகளுக்கான பதில்களை பார்வையாளார்களே அறிந்துகொள்ளுங்கள் என்பதை சைக்கோ படம் முன்வைக்கின்றது. படத்தில் பின்னணி இசையும் பாடல்களும் படத்தின் கதையோடு இணைந்து பயணப்பட்டுள்ளது.
பின்குறிப்பு:
6.04.2020 அன்று இரவு 2:47 மணிக்கு Beethoven 6th Symphony 2nd Movement இசையை செல்வழியாகப்பட்டேன். பின்னர், மிஷ்கின் சைக்கோ பாடல்கள் என் மகனுக்கு அருகாமையில் படுத்தவாறு, கண்களை மூடிக் கொண்டவாறே கேட்டேன். பின் கண்களைத்திறந்து மிஷ்கின் சைக்கோவாக நடித்த நடிகர், இயக்குநர் மிஷ்கின் உரையாடல்களைக் கேட்டேன். மிஷ்கின் பேச்சிற்குள்ளும் கதைசொல்லல் தொனிக்குள்ளும் உள்ளூர் முதல் உலகவெளிக்குள் பயணப்படும் அண்ணன் கோணங்கியின் பேச்சுத்தொனி எனக்குள் தென்பட்டது. இதன்பின் எழுந்து நானே ஒரு பிளாக் டீ போட்டுக் குடித்துக்கொண்டே இப்பதிவினைத் கணினியில் தட்டச்சு செய்யும் போது இரவு மணி 4:21.
இப்படத்தின் கதை சைக்கோ கொலைகளைப் பற்றியது என அறிந்து இப்படத்தைப்பார்க்க ஏழுவயதாகும் என்மகனைத் தாத்தா பாட்டியோடு வீட்டில் விட்டுவிட்டு நானும் என் மனைவியும் படம் பார்க்கச் சென்றோம். ஆனால் படத்தை எடுத்துவிட்டு வேறுபடத்தைப் போட்டதால் வேறு எந்தப்படமும் பார்க்க மனமின்றி வந்துவிட்டோம். இப்படத்தைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தபோது நானும் மனைவியும் என் மகனும் பார்த்தோம். இப்படத்தைப் பார்க்கும்போது எவ்வித பயமோ கோபமோ கொள்ளவில்லை என்மகன். அவன் என்னிடம் கேள்விகள் பல கேட்டான். ஒன்று, ஏன் போலீஸ் கொலைகாரனை ஆரம்பத்திலேயே பிடிக்கல? இரண்டு, ஏன் அப்பா அவனோட டீச்சர் தண்டிச்சாங்க?அவன் ஏன் டீச்சர அவன் தண்டிச்சான்? அதுனாலதான் அவன் அப்படி மாறிட்டான் என்று படத்தின் விமர்சனத்தை எனக்கு முன்வைத்தான். முற்றொரு பதிலாக, எனக்குத் தோல் என்று பேரு வையுங்கப்பா என்று. அதற்குப் பதில் அவனிடம் கேட்டேன் மிஷ்கின் என்றால் தோல் என்று தானே அர்த்தம். அதனால் எனக்கு தோல்லுன்னு இல்லைன்னா மிஷ்கின்னு பேரு வையுங்கப்பா என்று கூறினான். ஏழு வயதாகிய என் மகனுக்கு மிஷ்கின் படம் இதுவே முதல் படம். அவன் பார்த்த முதல் படத்திலேயே என் பெயரை மிஷ்கின் என மாற்று என்று சொல்லும் அளவிற்கு சைக்கோ படம் அவனுக்குள் நன்மதிப்பீடாக நுழைந்ததை எண்ணி வியந்தேன். சைக்கோ படவிமர்சனம் எழுதிக்கொண்டுள்ள தருணத்தில் (7.04.2020 மாலை 5.40 ) இருபது ஆண்டிற்கு முன் கல்லூரியில் பயின்ற பார்வையற்ற நண்பன் தங்கமாரி என் எண்ணைக் கண்டுபிடித்து செல்லில் அழைத்தான். இரு விழிகளில் ஒரு புள்ளிகூட வெளிச்சக் கீற்றைக் கண்களால் காணமுடியாத அவனுக்கு நட்பாய் இருந்ததும் பார்வையற்றவரின் அன்பிற்கு ஏங்கும் சைக்கோ திரைப்படமும் பார்வையற்ற நண்பனும் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக்கொண்டது எனக்குள் ஆச்சரியப்படவைத்ததும் கதை நல்லதொரு இடத்தைநோக்கி நகர்தலில் வெற்றி என்றே சொல்லவேண்டும்.
ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர்.-625 514.
1 comment
சினிமா குறித்து நவீனப் பார்வையை விமர்சனம் முன் வைக்கின்றது .சிறப்பு. மேலும் தொடர வாழ்த்துக்கள் ….