யாழ்ப்பாணம் முற்றவெளியில் முனியப்பர் ஆலயத்தில் தொண்டாற்றிய வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். “முதியவரின் சடலம் இன்று மாலை கண்டறியப்பட்டது. அவரை அடையாளம் காண முடியவில்லை” என்று காவற்துறையினர் யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் அறிக்கை சமர்ப்பித்தனர்.
முதியவரின் இறப்பு விசாரணையை முன்னெடுக்க திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாருக்கு கட்டளை வழங்கிய நீதிவான், விசாரணை அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்க உத்தரவிட்டார். திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார், இன்று மாலை இறப்பு விசாரணைகளை முன்னெடுத்தார்.
சடலம் அடையாளம் காண்பதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 66 வயது மதிக்கத் தக்க வெள்ளை முடியுகொண்ட முதியவரே சடலமாக மீட்கப்பட்ட்டுள்ளார். அதனால் உறவினர்கள் யாராவது இருப்பின் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையுடன் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
சடலத்தை குறிப்பிட்ட நாள்களுக்குள் எவரும் உரிமை கோராதவிடத்து அரச செலவில் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சனின் ஏற்பாட்டில் முனியப்பர் கோவிலடியில் உள்ள அனைவருக்கும் யாழ்ப்பாணம் நகரில் இயங்கும் ஹோட்டல்கள் இரண்டினால் சுழற்சி முறையில் இலவச உணவு கடந்த 20 நாள்களாக வழங்கப்பட்டு வந்தது” என்று பிரிவுக்குப் பொறுப்பான கிராம சேவையாளரால் உறுதிப்படுத்தப்பட்டது.