பெண்களின் பொறுப்பாக விடப்பட்டுள்ள பராமரிப்பு வேலையை பொறுப்புஎடுப்பது அல்லது பகிர்வது என்பது ஒரு நிறுவனத்தை பொறுப்பெடுத்தல் போன்றது. யாருக்கு எது எப்போ தேவை என்பதை திட்டமிட்டு செய்தல், எது எங்கிருக்கிறது, எதை எங்கே வைப்பது, எதை முதல் செய்ய வேண்டும் எதை அடுத்து செய்ய வேண்டும். (முதலில் சுத்தப்படுத்த வேண்டியது, இரண்டாவதாக சுத்தப்படுத்த வேண்டியது போன்ற…) 3ம் நாளுக்குரிய சாப்பாட்டுக்கு இன்று என்ன ஆயத்தம் செய்ய வேண்டும், இல்லாத ஓரு பொருளைத் தவிர்த்துத் சமைப்பது… என நீண்டு போகும் பட்டியல் கொண்ட பலபரிமாணப் பொறுப்புக்கள அடக்கியது. மேலும்; ஓரே தடவையில் பல வேலைகளை செய்பவர்களாக (ஒரு பிள்ளைக்கு உணவு ஊட்டிக் கொண்டே கணவருக்கு பதிலிறுத்துக் கொண்டே, தூரத்தே கேட்கும் வியாபாரியின் சத்தத்தை அவதானித்து பொருள் வாங்க ஆயத்தப்படுத்துவது போன்ற) அட்டாவதானிகளாகவும் இருக்க வேண்டியிருக்கின்றது.
காலையில் எழுந்து பம்பரம் மாதிரி சுழன்று திரியும் அம்மாக்கள், மனைவியர் வெறும் உடல் உழைப்பை மட்டும் வீணாக்குவதில்லை. அதற்கு சமாந்தரமாக அவர்களது மூளைகளையும், ஆக்கத்திறனையும் வீணாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
பெண்களின் மூளை விழித்துக் கொள்ளும் போதே இந்தத் திட்டமிடலுடன் எழுவதற்கு பழக்கப்படுத்தப்பட்டு இருப்பதால், அவர்கள் பிற துறைகளில் எவ்வளவு தான் சிறப்பானவர்களாக – அர்ப்பணிப்புள்ளவர்களாக இருப்பினும் இந்த குடும்பப் பராமரிப்பு வேலைகளுக்கு பின்னால் தான் அவற்றுக்குரிய இடம் வழங்கப்படும். வலது கைப்பழக்கம் உள்ளவர்கள் இடது கையைப் பழக்கப்படுத்துவது போல் தான் நாங்கள் பலரும் இந்தக் குடும்பப் பராமரிப்பு வேலைகளை இரண்டாம்பட்சமாக்கி ஓவியம் தீட்டவோ,எழுதவோ முனைகிறோம்.
இப்பொழுதுள்ள தனிமைப்படல் காலம் தான், இத்தகைய குடும்ப பராமரிப்பு வேலைகளை இதுவரை பொறுப்பெடுக்காத, இப்பொழுது வீட்டிலிருக்க வேண்டியுள்ளவர்கள் பழகிக்கொள்ளும் காலம். உதவி செய்தல் முதலாம் கட்டம். ஆனால் ‘பொறுப்பு எடுக்காத உதவி உபத்திரமாக முடியும் என்ற பயத்திலேயே பெண்கள் இவற்றை ஏற்றுக் கொள்வதில்லை.
பொறுப்பெடுத்தலுக்கான மனப்பாங்குடன் ஒவ்வொரு விடயத்தையும் முழுமையாகக் கிரகித்து செய்தலே பொறுப்பு. அத்தகைய் மனப்பாங்குடன் நீங்கள் பெண்களின் இந்தப் பராமரிப்பு வட்டத்துள் கால் வைப்பின் அவர்கள் அதனை விட்டுத்தர தயாராக இருப்பர். தொற்றுக்களிலிருந்து எமைக்காக்கக் கூடிய வலுப்பெற்ற உடல்களுக்கும் மனங்களுக்கும் வீடுகளின் பொறுப்பு அதிகரிக்கப்போகின்றது. பொறுப்புக்கள் அனைவைராலும் கற்கப்பட்டு பகிரப்பட்டாக வேண்டும்.
இப்பொழுது தான் அதற்கான காலம். பொறுப்பெடுங்கள்!!!!
1 comment
அருமையான கருத்து….
Comments are closed.