ஈழத்து நாடக வரலாற்றில், ஈழத்து நவீன அரங்கின் முதுதாய், குழந்தை.ம. சண்முகலிங்கத்தின், ‘சத்தியசோதனை நாடகம்’ கல்விச் சூழலில், கல்வி புலத்தார் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து பேசி நிற்கிறது. மகிழ்வூட்டி அறிவூட்டல் அரங்கின் பணி, என்ற அடிப்படையில், கல்வியியல் சூழலில், அரங்கின் பிரவேசம் கல்வியல்சார் பிரச்சனைகள் குறித்தான மாற்று சிந்தனைக்கு வழி வகுத்து வருகின்றது.
இன்றைய கல்வி முறைமை என்பதும், இற்றை வரை காலனித்துவ நலன் பேணும் கல்விக் கொள்கையாகவே இருந்து வருகின்றமை கண்கூடு. இத்தகைய கல்வி முறைமையே பல்வேறு சிக்கல்களுக்கும் காரணமாக அமைகின்றது. சுருக்கமாக சொல்லப்போனால், காலனிய ஆதிக்கம் உருவாக்கிவிட்ட நுகர்வு பண்பாட்டு கலாசாரச் சூழலுக்குள், எங்களுடைய கல்வி முறைமை என்பதும், நுகர்வாளர்களுக்கான பயிற்சிக் களமாக இருக்கிறதே தவிர, உற்பத்தியாளர்களுக்கான அதாவது சுயபடைப்பாக ஆளுமை உடையவர்களுக்கான களமாக இல்லை என்பதே ஏற்கப்பட வேண்டிய வெளிப்படையான உண்மையாக இருக்கிறது.
இந்நிலையில் குழந்தை ம. சண்முகலிங்கத்தின் சத்தியசோதனை நாடகம் கல்விப் புலத்தில் இன்னுமொரு தீர்க்கப்படாத பிரச்சனை குறித்தான பிரவாகமாக அமைகின்றது. எங்களுடைய கல்வி முறைமை என்னவாக இருக்கிறது? என்பது குறித்தான மறு வாசிப்பிற்கு இடமளிக்கும் சத்திய சோதனை, பரீட்சைகள் போட்டிகளாக மாற்றப்பட்ட அல்லது பார்க்கப்படுகின்ற அபத்தமான சூழலையும், போட்டிகள் வெற்றி பெற்றவர்களை கொண்டாடுவதும், தோல்வி அடைந்தவர்களை எள்ளிநகையாடுவதும் போன்றே, பரீட்சைகள் சமூகத்தில் ஏற்படுத்துகின்ற பிரிவினைகளையும், பாரபட்சங்களையும், பரீட்சைகளை மையப்படுத்தி, படித்தவர், பாமரர் என பாகுபடுத்தும் சமரசமற்ற போக்கையும், படிப்பது, பட்டம் பெறுவது எதற்கென்றே தெரியாமல் படிப்பதும், பட்டம் பெறுவதும் பின், படிப்பு வேறு; தொழில் வேறு என சமூக அந்தஸ்துக்காக தொழில் செய்யும் நிலைமைகளையும் ஒருசேர கேள்விக்கு உட்படுத்துவதாக, ஒன்பது மாணவர்களும் உரைஞர்கள் நால்வருமாக நாடகம் இயல்கிறது.
நாடகம் எடுத்தியம்பிய குறித்த பிரச்சனைகளே இற்றை வரை கல்வியியல் சூழலில் எதிர்கொள்ளும் பாரிய சவாலாக அமைகின்றமை நோக்குதற்குரியது. படிமங்களாகவும், குறியீடுகளாகவும் நகரும் நாடகத்தில், பழங்களின் பல்வகைமை, அறிவின் பன்மைத்துவம் அல்லது திறமைகளின் பன்மைத்துவத்திற்கு குறியீடாக காட்டப்படல் ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டியதே.
ஒவ்வொரு பழமும் அதன் வடிவிலும், சுவையிலும் தனித் தன்மை உடையன் மாணவர்களும் அப்படியே. ஆனால், ஒவ்வொரு பழமும் சுவைக்கப்படுதற்கான காலநேரம் வாய்ப்பது போல், மாணவர் அவர் தம் வேறுபட்ட திறமைகள் வெளிப்படுவதற்கு வாய்ப்புகள் கிட்டுவதில்லை. மாறாக, பரீட்சை என்ற ஒன்றே ஒற்றைப் பார்வையில் வெற்றி பெற்றவர்களை படித்தவர் என்றும், மற்றவர்களை பாமரர்கள் என்றும் முத்திரையிட்டு விடுகிறது.
இதன் அடுத்த கட்டமாக பல்கலைத் தெரிவு பெற்றவரை மாத்திரம் கொண்டாடுவதும், ஏனையவர்களை விமர்சிப்பதும் காலாகாலமாக சமூகத்தில் நிகழ்ந்தேறிய வண்ணமே இருக்கிறது. பரீட்சையில் ஒப்புவித்தல் மாத்திரம் தான் அறிவு என்ற சமரசமற்ற பார்வை, சான்றிதழ் மயப்படுத்தப்பட்ட கற்கையாகிய, காலனித்துவ கல்விக் கொள்கையின் வெளிப்பாடாகவே இன்னமும் நமது சூழலில் நிலவிவருகிறது. பரீட்சைகளில் தோற்றவர்களுக்கான மாற்றுவழிமுறைமையை, தாம் சார்ந்;த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான களம் அமைத்துக்கொள்வதற்கான வழிமுறைமையை கல்விசூழல் ஏற்படுத்த தவறிவிடுகிறது.
இவையெல்லாம் நமது கல்வியியல் சூழலில் இன்னமும் தீர்வு காணப்படாத பிரச்சனைகளாகவே இருந்து வருகின்றமை கசப்பான உண்மை. எனவே மாற்று கல்வி முறைமையில், மாற்று போதனா முறையில், அரங்கின் வகிபாகம் வலுவாக உணரப்பட்டு வருகின்ற இக்காலப்பகுதியில், அரங்கின் வழி, கல்வி முறைமையில் மாற்றங்கள் நிகழ வேண்டியதை வலியுறுத்தும் சத்திய சோதனை, பரீட்சை வழி மாணாக்கரை மட்டிடுதலைவிடுத்து, எல்லோருமாக சாதனையாளராகப் போற்றப்பட வேண்டிய, உருவாக்கப்பட வேண்டிய சமரசமான பார்வையை, கல்வியியல் முறைமையில் ஏற்படுத்துவதனூடாக, சமூகத்தின் பால் முற்போக்கான மாற்றத்தை வேண்டி நிற்கிறது.
இரா. சுலக்ஷனா,
நுண்கலைத்துறை,
கிழக்கப் பல்கலைக்கழகம்.
1 comment
கற்றலில் அரங்கின் பங்களிப்பு குறித்து பேராசிரியர் சி.ஜெயசங்கர் அவர்களுடனான உரையாடல் வழியாக நான் அறிந்துள்ளேன்.சண்முகலிங்கம் அய்யா குறித்தும் உரையாடியது இக்கட்டுரை வாசிக்கும் போது என்னில் உதயமானது.கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள்.. இன்றைய சூழலில் கற்றல் கற்பித்தலில் அரங்கு தேவையாக உள்ளது.தொடர்ந்து எழுதுங்கள்….