இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கை மே 3ஆம் திகதி வரை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவுக்கு வர இருந்தது. எனினும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதனால் நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பிரதமரிடம் மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தன.
மேலும் தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். இதுபோலவே பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களும் அறிவித்துள்ளன.
இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 14) காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, ‘கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம். தமிழ்ப் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளை மக்கள் வீட்டிலேயே இருந்து கொண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவைக் காப்பாற்ற மக்கள் துன்பங்களை சந்தித்து வருவதை நான் உணர்கிறேன். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மக்கள் அனைவரும் ராணுவ வீரர்கள் போன்று செயல்பட்டு வருகின்றனர் மக்களின் தியாகத்திற்கு நான் மரியாதையுடன் தலைவணங்குகிறேன்’ என்று தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் ஒருவர் கூட இல்லாத நிலையிலும், பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வந்த பயணிகளை நாம் பரிசோதனைக்கு உட்படுத்தினோம். பிரச்சினை அதிகரிக்கும் வரை இந்தியா காத்திருக்கவில்லை. மாறாக, பிரச்சினை தோன்றியவுடன், விரைவான முடிவுகளை எடுத்து அதை கட்டுப்படுத்த முயற்சித்தோம். இத்தகைய விரைவான முடிவுகள் எடுக்கப்படாவிட்டால் நிலைமை என்னவாக இருக்கும் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது என்று தெரிவித்த பிரதமர், நாடு முழுவதும் ஊரடங்கை மே 3ஆம் திகதி வரை நீட்டிப்பதாக அறிவித்தார்.
இதன்மூலம் இன்னும் 18 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது #இந்தியா #ஊரடங்கு