கடந்த நான்கு மாதத்திற்குள் பிறந்து கதைக்கப் பழகிய குழந்தைகள் எல்லாம் முதலில் உச்சரித்துப் பழகிக்கொண்ட வார்த்தை “ கொரோனா” என்பதாகவே இருக்க வேண்டும். ஆம் இந்த நூற்றாண்டிலும் சரி இனி வரப்போகின்ற நூற்றாண்டுகளுக்கும் சரி இவ்வார்த்தையும், இதன் விளைவுகளும் வரன்முறையற்ற வரலாற்றுச் சம்பவங்களாகப் பதியப் போகின்றமை உறுதி. இயற்கையை இயற்கையாக மதிக்காத, பிற உயிர்களை உயிர்களாக மதிக்காத, மனிதனை மனிதனாக மதிக்காத மனித கூட்டங்களின் தனிலாபக் கொள்கை வகுப்புக்கள், அது சார் ஏகாதிபத்திய கொள்கை ஆக்கிரமிப்புக்கள் என்பன இயற்கையினை பின்னோக்கித் தள்ளுதலில் முன்னோக்கி வளர்ந்த இன்றைய சம காலச்சூழலிலே மனிதரல்லாத உலகமானது எவ்வளவு சுதந்திரமாக இருக்கும் என்பதனை மிகக்குறுகிய காலத்துள் புரியப்பண்ணியுள்ளது கொரோனா நோயும் அதன் முகமூடிக் கலாசாரமும்.
“இக்கரைக்கு அக்கரை பச்சை” என்ற முதுமொழியின் கருத்தாழம் இன்று வெகுவாக உணரப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. அவ்வகையில் தான் உள்;ர் உற்பத்திகளின் பகிரங்கமான பலன்கள், காப்ரேட் உற்பத்திகளின் அபரிமிதமான நேரடியானதும், மறைமுகமானதுமான தீய விளைவுகள், தனி நபர் உடலாரோக்கியத்தின் பலமும் தேவையும், பொதுவுடமை வாதத்தின் தவிர்க்க முடியாத நற்திறத் தாற்பரியம், முதலாளித்துவத்தின் நினைவுக்கு எட்டாத துரித வீழ்ச்சி போன்ற உலகியல் நடத்தைகளின் எண்ணப்பாடுகளும், அதன் செயற்பாட்டு ரீதியான பொறிமுறையின் இருபக்க விளைவுகளும் அனைத்து மனிதர்கினாலும் ஏதோவொரு வகையில் அவரவர் அறிவுக்கேற்ப உணரப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. மனிதரால் மனிதருக்கு உருவாக்கப்பட்ட சாதிகள், இனங்கள், மதங்கள், மொழிகள், பயனற்ற நம்பிக்கைகள், வரட்டு மரபுகள், கடவுளர்கள் என அனைத்தையும் தாண்டி மனிதரனைவரும் ஒரே புள்ளியில் தான் இருந்து கொண்டு இருக்கின்றோம் என்பதனை வெறும் மூன்று மாத காலத்துள் உணரப்பண்ணியுள்ளது இந்த “கொரோனா”.
எல்லாம் வல்ல கடவுளர்கள், ஆதியும் அந்தமும் இல்லாத கடவுளர்கள், பரலோகத்தில் இருக்கின்ற கடவுளர்கள், உருவமில்லாத கடவுளர்கள், கொல்லாமை விரும்பும் கடவுளர்கள் என எந்த விதமான கடவுளர்களாலும் கண்ணுக்கே தெரியாத, உயிரற்ற அந்த நுண்ணுயிரியினை அழிக்கவும் முடியவில்லை, அவற்றிடம் இருந்து தனது பக்தர்களைக் காப்பாற்றவும் இயலவில்லை. எல்லாக் கடவுளர்களின் வாழிடங்களும் அடைக்கப்பட்டன. வழிபாடுகள் வீட்டிலேயே முடக்கப்பட்டன. அநேகமான தொற்றுக்கள் இவ்வாறான கடவுளர்களின் வாழிடங்களிலேயே பரவியதற்கு எமது நாடும் உதாரணமல்லவா? கடவுளர்களின் வாழிடங்கள் முடக்கப்பட்ட நாட்களில் இருந்து திறபடாமல் இருந்த வைத்திய சாலைகள் திறக்கப்பட்டன. புதிய வைத்திய சாலைகள் உருவாக்கப்பட்டன. காலாகாலமாக வழிபட்டு வந்த கடவுளர்களால் கைவிட்டப் பட்ட மனிதர்களுக்கு வைத்தியசாலைகள் தான் அடைக்கலமாயும் போயின. போகின்றன. இவ்வேளையில் தான் வைத்தியசாலைகளின் தேவையும், அதன் உயர் மட்ட சேவையும், வைத்தியத்துறையின் வளர்ச்சியும், வைத்தியர்களின் அதிகரிப்பும் என வைத்தியம் சார்ந்த தேவைகளும் அதே சமயம் இருக்க இடமில்லா விடினும் கோடி கோடியாய் கொட்டி, இருக்கின்ற வளங்களை வக்கற்றவையாய் இயல்பிறக்கப் பண்ணுகின்ற ஆலயங்களும் அதன் உப்புச்சப்பற்ற வேலைப்பாடுகளும் (விதிவிலக்குண்டு.) உணரப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.
இந்நோயினால் அதிகபடியான இறப்புக்களும், இழப்புக்களும் உலகின் வல்லரசுகளிலே தான் மிகையாக இன்றும் ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்றமையை அவதானிக்க முடிகின்றது. குளிர்சாதனங்களில் சொந்தக்காரர்களாகவும், வியர்வையின் எதிரிகளாகவும், பீட்சாக்களின் பிரியர்களாகவும், தூசுக்கள் மாசுக்களை தம்மிடம் அண்டவிடாதவர்களாகவும் கூட இருந்தவர்களையும் இந்நோய் விட்டு வைக்கவில்லை. அதிலும் வயது வந்தோர் இன்னும் அதிகம். இதனைப் பார்க்கும் போதுதான் இது பணக்காரர்களின் நோயா? , பணக்காரர்களால் உலகுக்குத் தரப்பட்ட நோயா அல்லது ஆளும் வர்க்கத்தால் உழைக்கும் வர்க்கத்திற்கு தானம் செய்யப்பட்ட நோயா என்றெல்லாம் சொல்லத் தோணுகின்றது. மேலை நாடுகளில் கொரோனாவினால் இவ்வாறு தாக்கத்திற்கு உள்ளாகி இறப்பவர்களில் அதிகமானோர் கறுப்பினத்தவர்களாகவும், ஆசிய நாடுகளைச் சார்ந்தவர்களாகவுமே இருக்கின்றனர் என்கிறது தகவலும் உலாவுகின்றது. உலக தரத்தில் நடக்கின்ற விடயமுன்னெடுப்புக்களை அவதானிக்கும் இடத்து இவ்வாறான மறு வாசிப்புக்கும் தயாராக வேண்டியதாகவே உள்ளது. தரவுகளின் படி அன்றாடம் உழைத்துண்ணுகின்ற, உடலை வருத்தி வேலை செய்கின்ற, தமது உடல்களிலே அதிக படியான நோயெதிர்ப்பு சக்திகளைக் கொண்டு காணப்படுகின்ற கிராம மக்கள், விளிம்பு நிலை மக்கள் என சாதாரண மக்களை இத்தொற்று நேரடியாகப் பாரியளவில் தாக்கவில்லை என்பது தெளிவாகின்றது. ஆற்றல் மிக்க உயிரினம் மட்டுமே இப்பூகோளத்தில் வாழத் தகுந்தது என்று சொல்லிக் கொண்ட மனித இனம் இயற்கையின் எத்தனை உயிர்களைத்தான் கொன்று குவித்தது. தமது நாட்டில் நீர்ப்பற்றாக்குறையைப் போக்க பத்தாயிரம் ஓட்டகங்களை கொன்றதும் மனிதர் தானே. இன்னும் சொல்லிடங்காதவை எத்தனை. இந்த நோயும் ஏதாவது மிருகங்களில் பரவியிருந்தால் அவற்றையும் கொன்று குவித்திருப்போம்.
தாம் மட்டும் தான் இவ்வுலகையே ஆளுகின்றோம் என்ற வீராப்பு கொண்ட வலது சாரி நாடுகள் எல்லாம் சாதாரணமாகத் தயாரிக்கக் கூடிய முகமூடிகள் கூட கையிருப்பில்லாமல் தமது மக்களை இழந்து (கொன்று) கொண்டு இருக்கின்றன. ஏனைய சிறு நாடுகளின் அப்பாவி மக்களின் குருதியில் வளர்ந்து வல்லரசு ஆகிய அந்நாடுகள் எல்லாம் உயிரில்லாத நுண்ணங்கியிடம் உயிரை விட்டுக் கொண்டிருக்கின்றன. நோய் தொற்று வந்த வீடுகளை சீல் வைத்து பாதிக்கப்பட்டவர்கள் இறந்த பின்னர் அந்த வீட்டையே முழுமையாக எரித்து தொற்று நீக்கம் செய்கின்றன. முதியோர் இல்லங்களில் யாரவாது தொற்றுக்குள்ளானால் அந்த இல்லத்தையே கவனிக்காமல் விட்டு இறக்க விடுகின்றன. காரணம் முதியோர்களுக்கான பாரமரிப்பு மற்றும் அரச மானியங்களைக் குறைப்பதற்காகவே என்கின்ற செய்தியும் உலாவுகின்றது. ஒரு செயற்கை சுவாசத்தினை இருவருக்குப் பயன் படுத்துகின்றன, மரணிக்க விடுவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் வயதைக் கொண்டு வடிகட்டுகின்றன. ஒரு பக்கம் இது உயிரியல் யுத்தம் என்கின்றனர். இன்னுமொரு பக்கம் இயற்கையின் மாறுதலே காரணம் என்கின்றனர். எது எப்படியோ மூன்றாவது உலக யுத்தம் ஆயுதச் சத்தமில்லாமலும், உடல் கிழிவுகள் இல்லாமலும் நடந்து கொண்டிருக்கின்றது.
இயற்கை அல்லது செயற்கை அனர்த்தங்கள் எதுவாயினும் சரி பாதிக்கப்படுவது விளிம்பு நிலை மக்களும், உழைக்கும் வர்க்கமும் தானே. அவ்வாறேதான் கொரோனாவின் நேரடித்தாக்கங்களை விட மறைமுகத்தாக்கங்கள் இம்மக்களை அல்லோகல்லோப்பட செய்கின்றன. இதற்குச் சான்றாக இந்தியாவில் கடந்த நாட்களில் இடம் பெற்ற ஈவிரக்கமற்ற செயல்களை மறக்க முடியுமா? 120 கோடிக்கு மேற்பட்ட சனத்தொகை கொண்ட அங்கு எதுவித முன்னாயத்தங்களும் இல்லாமல் ஊரடங்கு அறிவிக்;கப்பட்ட பின்னர் தலைநகர் டெல்லியில் இருந்து பல லட்சம் உழைக்கும் மக்கள் நூற்றுக்கணக்கான மைல்கள் தூரம் தமது சொந்த ஊர்களை நோக்கி பொடி நடையாக அனுப்பப்பட வில்லையா?, அதில் எத்தனை இறப்புக்களும், இழப்புக்களும் ஈடேறின. இவ்வாறான நிலைக்கு அந்த அப்பாவி மக்களை இட்டுச் சென்றவர்கள் கொரோனாவை விஞ்சிய விசக்கிருமிகள் இல்லையா?. இதனை விடவும் சர்வ வல்லமை பொருந்திய, இயற்கையினையே விஞ்சிய மனித இனத்திற்கு பாரிய வீழ்ச்சி இந்நூற்றாண்டில் வருமா?
இந்நோய் தாக்கமானது கீழைத்தேய நாடுகளில், வறுமையான நாடுகளில்ஏற்பட்டிருந்தால் இவ்வளவு தூரம் பேசு பொருளாகி இருக்காது எனலாம். இது தனது ஆரம்ப கட்டத் தாக்கத்தை ஏற்படுத்தியதே உலகின் வல்லரசுகளிலும், பணக்கார நாடுகளிலும் அதிலும் உயர் தட்டு மக்களிடத்தே தான். நல்ல வேளை இந்நோய் ஒரு முஸ்லிம் நாட்டில் ஆரம்பத்தில் ஏற்படவில்லை. கொரோனாவினால் அதிகளவான உயிரிழப்புக்கள், பொருளாதார இழப்புக்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற அதே நேரம் உலக மக்கள் அனைவரும் இன்று இயற்கiயின் பெறுமதியினை நன்குணர்ந்து கொண்டிருக்கின்றனர். வைத்தியர்களைத் தவிர ஏனையவர்கள் அனைவரும் மண்வெட்டியுடன் உள்;ர்களில் அலைகின்றனர். இப்போது தான் உள்;ர் உற்பத்திகளின் பெறுதியும், அதனை மேற்கொள்ள வேண்டியதன் தேவையும் அறியப்பட்டுக் கொண்டிருக்கின்றன, பல குடும்பங்கள் பல வருடங்களுக்குப் பிறகு ஒன்றாகச் சேர்ந்து உணவருந்துகின்றன, மனிதாபிமானம் கொண்ட பல மனிதர்களும் உள்ளமைக்கு உதாரணங்கள் கிடைக்கின்றன, மனிதரைத் தவிர ஏனைய உயிர்கள் எல்லாம் மிகச்சுதந்திரமாக உலாவுகின்றன, சுற்றுச்சூழல் உச்சளவில் சுத்தமாக்கப் பட்டுள்ளது. (அண்மையில் யுஞஐ 150 இற்கு மாசுபட்ட கொழும்புச் சூழலின் காற்று இன்று யுஞஐ 17 இற்கு குறைந்துள்ளது.) சமூகத்திற்கும், உடலுள நலத்திற்குக் கேடான ஆடம்பர நடவடிக்கைகள் எல்லாம் இல்லாமலும் வாழ முடியும் என்பது உணரப்பட்டுக் கொண்டிருக்கின்றன, உணவுகளை, அன்றாடப் பொருட்களை வீணாக்காமல் பயன் படுத்தப் பழக்கப் படுகின்றோம், இடது சாரி மற்றும் பொதுவுடமைக் கொள்கைகளின் ஈடுகட்ட முடியாத பெறுதி மற்றும் தமக்குத் தேவையானவற்றை தாமே உற்பத்தி செய்து கொள்ளும் நாடுகளின் (கியூபா) சுதந்திர தன்மை உணரப்படுகின்றது. இது போல் இன்னும் எத்தனை எத்தனையோ நல்மாறுதல்கள்.
உலக மக்கள் அனைவரும் முகங்களை மூடிக்கொண்டு திரிவது போலும், சமூக இடைவெளிகளை (இன்று புதிதாக முளைத்துள்ள சொல்லாடல். – ஆனால் கண காலந்தொட்டு நாங்கள் சாதி மத பேதங்களால் இவ்வாறுதானே இருந்து வந்துள்ளோம். இருந்தும் இன்றுதான் இச்சொல்லாடலுக்கான திறநன்மை கிடைத்துள்ளது.) பேணுவது போன்ற கற்பனைக் கதைகளோ, வேடிக்கைச் சினிமாக்களோ, தீர்க்க தரிசனங்ளோ என ஏதாவது இடம் பெற்றிருந்தால் யாராவது ஏற்றுக்கொண்டிருப்போமா? ஆனால் இன்று நிலமை இதுதான். அநேகமாக பொது வெளிகளில் மக்கள் அனைவரும் முகமூடிகளுடன் முகத்தை மறைத்துக் கொண்டு திரிகின்ற கலாசாரம் இன்று உலகெங்கும் உருவாகியுள்ளது. எமது நாட்டில் ஒரு காலத்தில் முகத்தை மறைத்தால் தண்டனை இன்று மறைக்கா விட்டால் தண்டனை. உண்மையில் முகமூடியினை அணிவதானது தனிநபருக்கான பாதுகாப்பு என்பதனைத் தவிர்க்க முடியாத அதேவேளை முகமூடிகளை எவ்வாறு அணிந்து கொள்வது, ஏன் அணிந்து கொள்ள வேண்டும் என்பதற்கான தெளிவுகள் மக்களிடம் கொண்டு செல்லப்படாமலே இருக்கின்றன. ஒரு முகமூடியினை பல தடவைகள் பாவிக்கின்ற நிலமை, வைரஸ் தாக்கதின் தன்மைக்கு அமைய எதிர்த்து நிற்கக் கூடிய முகமூடிகளை அணியாமை, பாவித்த முகமூடிகளினை ஒழுங்கான முறையில் கையாளாமை. உதாரணமாக முகமூடியுடன் வெளியில் சென்ற ஒருவர் வீடு வந்தவுடன் தனது கைகளினால் முன்பக்கமாக கழற்றி எடுத்தாலே போதும் முகமூடிக்கான எதுவித பலனும் இல்லாமல் போய்விடும். ஆனால் எம்மவர் மத்தியில் இம்முகமூடிக் கலாசாரம் எவ்வாறான நிலமையில் பயன் படுத்தப்படுகின்றன என்பது கேள்விக் குறிதான்.
இந்நோயானது பல மனிதப் பாதகங்களை ஏற்படுத்தி இருந்தாலும் இயற்கைச் சமநிலையினை வெகுவாக நன்மை நிலைக்கு முன்னேற்றிச் செல்ல வழிசமைத்துள்ளது. வெறும் ஒருவார கால ஊரடங்கிலேயே இந்தியாவின் பல மாநிலங்களின் காற்று மாசடைவு குறைக்கப் பட்டுள்ளது. இதன் விளைவாக 100 மைலக்;கு மேல் தொலைவிலுள்ள இமாலய தரிசனம் பார்க்கும் வாய்ப்பு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் ஏவப்படுகின்ற செய்மதிகளின் ஊடாட்டம் குறைக்கப்பட்டுள்ளது, பாரியளவு நஞ்சைக் கக்குகின்ற தொழிற்சாலைகள் ஓய்வெடுக்கின்றன. இதற்கு எதிர்மறையாக பல உள்;ர் உற்பத்திகளுக்கும் உலகெங்கும் வலுக்கொடுக்கப் பட்டு முன்னேற்ற வாய்ப்புக்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. எமது இலங்கையிலும் இதற்கு விதிவிலக்கல்ல. இதில் இன்னுமொன்றையும் அவதானிக்கக் கிடைத்தது. அதாவது ஊர்மனைகளில் கொரோனாவின் நேரடித்தாக்கங்களோ மறைமுகத்தாக்கங்களோ கணமாக இடம் பெறவே இல்லை. இன்றும் அவர்கள் வழமையான அவர்தம் வாழ்க்கை முறைகளையே வாழ்ந்து வருகின்றனர். ஆம் இன்றும் அவர்களால் 200 ரூபாய்க்குள் வாழ முடிகின்றது. காரணம் உள்;ர் உற்பத்திகளின் பாரதூரமான நற்தாற்பரியம். ஆனால் அவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் எல்லாம் ஒழுங்கான முறையில் நுகர்வுக்கு இட்டுச் செல்லப்படாத நிலமை வெகுவாக ஏற்பட்டுக் கொண்டு வருகின்றது. இதனை திறம்பட நடைமுறைப் படுத்த தத்தம் ஊர் சார்ந்த இளைஞர் அமைப்புக்கள் முன்வரலாம். கூட்டுறவுச் சங்கங்கள் முன்வரலாம். அது தவிர ஒவ்வொருவரும் தத்தமது இருப்பிடங்களிலேயே தமது தனிப்பட்ட குடும்பத் தேவைக்காக வீட்டுத் தோட்டங்களை அமைத்துக் கொள்ளலாம், இயற்கைப் பதனிடல் முறைகளைப் பயன் படுத்திக் கொள்ளலாம். சொல்ல பலவுண்டு. இவ்வாறான செயற்பாடுகள் எல்லாம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது இனிவரும் காலத்தின் தேவையே.
எது எப்படியோ இயற்கை ஆதிக்க வாதம் மீண்டும் தலைதூக்கி உள்ளமைக்கும், மனிதர் தான் இயற்கைக்கு நீங்காத கேடு கொண்ட கொரோனா என்பதற்கும், உலகம் அனைத்து உயிர்களுக்;கும் சமமானது என்பதற்குமான மறக்கவும் மறுக்கவும் முடியாத வரலாற்று உதாரணமாக “கொரோனா” இடம் பெற்றுள்ளமை தெளிவு. இனிமேலாவது சாதியற்ற, மூடநம்பிக்கைகள் அற்ற, உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்கின்ற, அதிகார வெறியற்ற, இனமத பேதமற்ற, அரசியல் நாற்றமற்ற, பிற உயிர்களையும் சமமாக நேசிக்கின்ற, இயற்கையை இயற்கையாக மதிக்கின்ற பகுத்தறிவு கொண்ட மனித கூட்டம் இப்பூமியில் வாழத்தலைப்படுமா?
க. பத்திநாதன்.
சு.வி.அ.க. நிறுவகம்,
கிழக்குப் பல்கலைக்கழகம்.