யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடாக மதுபான சாலைகளில் இருப்பு கணிப்பீடு செய்யப்பட்டு முத்திரையிடப்படுவதாக ( சீல்) மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்படும் மாவட்டங்களில் மதுபான சாலைகளைத் திறக்க அனுமதியில்லை என்று அறிவுறுத்தியுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட மாவட்டங்களில் மதுபான சாலைகள் மதுவரித் திணைக்களத்தினரால் பூட்டப்பட்டு முத்திரையிடப்படுகிறது.
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் மறு அறிவிப்புவரை மதுபான சாலைகளை மூடுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. இதன் காரணமாகவே மதுவரித் திணைக்களத்தினரால் மதுபான சாலைகளுக்கு முத்திரையிடப்படுகிறது.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் சட்டத்துக்குப் புறம்பாக கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது #யாழ்ப்பாணம் #சீல் #மதுபானசாலை #கொரோனா #ஊரடங்கு