155
மன்னார் மாவட்டத்தில் எதிர் வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமையில் இருந்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை காவல்துறை ஊரடங்குச் சட்டத்தை தளர்த்திக் கொள்வது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டு ஜனாதிபதிக்கு சிபாரிசு கடிதம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை(17) காலை இடம் பெற்ற கலந்துரையாடல்களை தொடர்ந்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் மாவட்டத்தில் நெல் மற்றும் அரிசியின் உத்தரவாத விலையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பாவனையாளர் அதிகார சபை உத்தியோகத்தர்கள் கேட்டுக் கொண்டமைக்கு அமைவாக மீளவும் மில் உரிமையாளர்கள், பல நோக்கு கூட்டுறவுச் சங்கம்,மற்றும் தனியார் வர்த்தக நிலைய உரிமையாளர்களை அழைத்து கலந்துரையாடி இருந்தோம்.
ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வெள்ளை நாடு மற்றும் வெள்ளைச் சம்பா அரிசிகளின் விலை வர்தமானி அறிவித்தலை விட அதிகமாக இருப்பதாக பாவனையாளர் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இவ்விடையம் தொடர்பில் பாவனையாளர் அதிகார சபையின் உதவி பணிப்பாளருடன் கலந்துரையாடினேன்.இதன் போது நாட்டுச் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் மாவட்ட மட்டத்தில் தீர்மானத்தை எடுத்து அறிவித்தல் வழங்குமாறு கோரி இருந்தனர்.அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
வெள்ளை நாடு மற்றும் வெள்ளைச் சம்பா அரிசி மொத்த விலையில் 95 ரூபாவிற்கும் சில்லறையாக 100 ரூபாவிற்கும் விற்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த விலைக்கு மேலே எந்த ஒரு பிரதேசத்திலும் கூடுதலாக விற்பனை செய்ய முடியாது. மேலும் சிகப்பு மற்றும் வெள்ளை கீரிச் சம்பா அரிசிகள் நிவாரணத்திற்கு வினியோகிப்பது இல்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவின் உத்தரவாத விலை 86 ரூபாய். சீனி 125 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்ய முடியாது. சோயமீட்,தேயிலை,சவர்க்காரம் போன்றவை நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்ய வேண்டும்.குறித்த நடைமுறை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
நடுக்குடா மின் காற்றாலை வேலைத்திட்டம் தொடர்பில் மீளவும் இன்று வெள்ளிக்கிழமை(17) கலந்துரையாடல் ஒன்றை மேற் கொண்டோம். மக்களின் எதிர்ப்பு மற்றும் மன்னார் பிரதேச சபையின் தலைவரின் முறைப்பாடு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.குறித்த கலந்துரையாடலில் இலங்கை மின்சார சபையின் தலைவர்,பிரதி முகாமையாளர், வடக்கிற்கான பிரதி முகாமையாளர்,திட்ட பணிப்பாளர், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த வேலைத்திட்டத்தை கட்டாயம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளதாக வருகை தந்த அதிகாரி தெரிவித்தார்.ஜனாதிபதியின் விசெட செயலனியின் பணிப்பிற்கு அமைவாக குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எதிர் வரும் 3 மாதங்களுக்குள் குறித்த வேலைத்திட்டங்களை செய்து முடிக்க வேண்டும். அல்லது மேலும் ஒரு வருடங்கள் தாமதிக்க வேண்டிய நிலை ஏற்படும். காற்று வீச ஆரம்பித்தால் வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல முடியாது. சுமார் 30 காற்றாலைகள் அமைக்கப்படவுள்ளது. தற்போது 3 காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.மிகுதியை அமைப்பதே உடனடியான வேலை.
மக்களுக்கு எவ்வித பிரச்சினையும் இன்றி,கொரோனா தொற்று ஏற்படாத வகையில் குறித்த வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பது என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு பொலிஸ் , இராணுவ அதிகாரிகள்,வைத்திய அதிகாரிகள் சாதகமான பதிலை தெரிவித்தனர்.அதற்கு அமைவாக குறித்த வேலைத்திட்டத்தை குறிப்பிட்ட அளவில் மேற்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளோம்.
அதற்கு மேலதிகமாக முறைப்பாடுகள் இருக்கின்ற நிலையில் ஜனாதிபதியிடம் மக்கள் முறைப்பாடு செய்ய முடியும். மக்களின் பாதுகாப்பை முழுமையாக கருதியே குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கின்றோம்.
இத்திட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள் மக்கள் மத்தியில் நடமாட விடாது அவற்றை கட்டுப்படுத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளோம். மேலும் மன்னார் மாவட்டத்தில் எதிர் வரும் திங்கட்கிழமை முதல் (20)காவல் துறை ஊரடங்குச் சட்டத்தை எவ்வாறு தளர்த்திக் கொள்ளுவது என்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.அதற்கான சிபாரிசு கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
அந்த வகையில் சாதகமாக இருந்தால் காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை காவல்துறை ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தி குறிப்பிட்ட எண்ணிக்கையில் அரச ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைப்படு என்றும், சுழற்சி முறையில் வர்த்தக நிலையங்களை திறத்தல், அத்தியாவசிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், சமூக இடைவெளிக்கு அமைவாக வியாபாரம் உற்பட ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் மக்கள் ஒன்று கூடுவதை தடுப்பது எனவும் மக்கள் முழுமையாக விடுகளில் இருந்து வெளியில் செல்லாது ஒரு வீட்டில் இருந்து ஒருவர் இல்லது இருவர் மாத்திரமே வெளியில் செல்வது என்றும் பொலிஸாரின் உதவியுடன் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் மாலை 6 மணியுடன் மீண்டும் காவல்துறை ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்துவது என்றும் சனி,ஞாயிறு தினங்களில் முழுமையாக மக்களை கட்டுப்படுத்தி காவல்துறை ஊரடங்குச்சட்டம் அமுல் படுத்துவது என்றும் கொரோனா அச்சம் தனியும் வரை குறித்த செயற்பாட்டை நடை முறைப் படுத்துவது என்றும் இதற்கான சிபாரிசை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க உள்ளோம். குறித்த விடையம் சாதகமாக அமையும் பட்சத்தில் எதிர் வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் குறித்த நடைமுறை அமுல் படுத்தப்படும்.என அவர் மேலும் தெரிவித்தார். #மன்னார் #ஊரடங்கு #சிபாரிசு
Spread the love