உலகளாவிய ரீதியில் கடந்த சில மாதங்களாக, கொரோனா வைரஸின் தாக்கம் உலகின் பல நாடுகளையும், அனைத்து வகையிலும் பாதிப்பிற்குள்ளாகி, மக்களின் உயிரை பறித்த வண்ணம் இருக்கிறது. இறந்த மனித உடல்களை புதைக்கக்கூட இடமில்லாத நிலை காணப்படுகின்றது. இன்று பெரிய அளவில் அபிவிருத்தி அடைந்த வல்லரசு நாடுகளே கொரோனா வைரஸ் என்ற கொடிய நோயில் இருந்து மீண்டு வருவதற்கு பல வழிகளிலும் முயற்சி செய்தும் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான உயிர்களைப் பறிகொடுத்த வண்ணமே உள்ளன.
பசி என்று அழும் போது நோய்வாய்ப்பட்ட தாய், தான் பெற்றெடுத்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டமுடியாமல் கதறி அழும் காட்சி ஒரு பக்கம், பெரும் பணம் படைத்த வல்லாதிக்க நாடுகளின் தலைவர்களே கண்ணீர் விட்டு அழும் காட்சி இன்னொருபக்கம். இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம். உலக மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கிக் இருக்கின்ற வேளையில், பலர் தொழிலுக்குப் போக முடியாமல் நாளாந்த உணவிற்கு கூட ஏங்கித் தவிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதில் ஒரு சிலர், இது தொடர்பாக நகைச்சுவையாகவும், கேலியாகவும், கருத்துக்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், காணொளிகள் போன்றவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டவண்ணம் உள்ளனர்.
சீனாவில் ஆரம்பமாகிய இந்த கொரோனா வைரஸ் பின்னர் உலகின் பல நாடுகளுக்கு பரவி இப்போது இலங்கையிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘வரும் முன் காப்போம்’ எனும் செயல்திட்டத்திற்கு அமைவாக, இலங்கை அரசினால் ஏற்படுத்தப்பட்ட முதற்கட்ட நடவடிக்கையாக 2020.3.12 அன்று இலங்கையில் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டன, பின்னர் 2020.3.14 அன்று பல்கலைக்கழகங்களும் மற்றும் அரசு,தனியார் நிறுவனங்களும் திணைக்களங்களும் மூடப்பட்டன. பின்னர் தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ் நோயைத் தடுப்பதற்காக 2020.3.20 இல் இலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இலங்கை அரசினால் நடாத்தப்பட்ட இத்தீவிர முயற்சியை பாராட்டியே ஆகவேண்டும். பிற நாடுகளை விட இந்த நோய் நம் நாட்டில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆயினும், ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை இலங்கை வாழ் அனைத்து குடிமக்களும் அன்றாட வாழ்க்கையில் கடுமையாக கஷ்டப்படுகின்றனர். அதிலும், குறிப்பாக நாளாந்தம் தினக்கூலி செய்து தமது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் சாதாரண குடிமக்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இவ்வாறு வறுமைப்பட்ட குடும்பங்கள், தங்கள் அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக் கொள்வதில் மிகவும் சிரமப்படுகின்றனர். ‘சற்று சிந்தித்து பாருங்கள் நாளாந்தம் தினக்கூலி வேலை செய்து தங்களது வாழ்க்கைச் செலவுகளை கொண்டுசெல்லும் குடும்பங்களின் நிலையை’. இவ்வாறான நிலைமைகளில், சிக்கித் தவிக்கும் பொதுமக்களுக்காக அரசாங்கம் பணம், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கியது. அதுவும் சில நாட்களுக்கு மாத்திரமே போதுமானதாக அமைய, இத்தகைய எதுவிதமான நிவாரணங்களும் பெறாத ஏனைய குடும்பங்களின் நிலைமை கேள்விக்குறியாகவே அமைகின்றன.
இதே சந்தர்ப்பத்தில் சில தனியார் வர்த்தகர்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றனர். இவ் இக்கட்டான சூழ்நிலையிலும் சில சமூக நலன் விரும்பிகள், அரசியல் தலைவர்கள், பொதுமக்களுக்கு சமூக சேவைகளைச் செய்யும் முகமாக தாமாக முன்வந்து அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றனர். அவர்களின் இந்த சேவை பாராட்ட வேண்டிய விடயமொன்று.ஆனாலும் இதில் ஒரு வேண்டுகோள் தாங்கள் செய்யும் சேவையை, பெருமை பாராட்டிக் கொள்ளும் விதமாக சமூக வலைத்தளங்களில் தாம் உதவிக்கரம் நீட்டிய புகைப்படங்களை ஒரு சிலர் பதிவிடுகின்றனர் ‘வலது கை கொடுப்பதை இடதுகை அறியாது இருப்பதாக’.
தற்போது இலங்கை அரசினால் கொரோனா வைரசின் பாதிப்பைக் குறைப்பதற்கு மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையில் போக்குவரத்து, பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் வெளியே பொதுக்கூட்டங்கள், வர்த்தகமத்திய நிலையங்கள,; விமான நிலையங்கள், புகையிரத நிலையங்களின் சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டு, தேவைக்கேற்ப போக்குவரத்து சேவைகள் தொடர்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களின் நாளாந்த வாழ்க்கையில் பலதரப்பட்ட குழப்பங்கள் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஏழைகள், பணக்காரர்கள், அரசியல்வாதிகள், சிறியவர்கள், பெரியவர்கள், இனம், மதம், மொழி வேறுபாடு இன்றி இந்த நோய் பரவி வருவதால் நாட்டின் அனைத்துப்பகுதிகளிலும் இந்த ஊரடங்குச் சட்டம் பொதுவாகக் கடைபிடிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு நன்மையாக நான் கூறுவது மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டதால்; மதுஒழிப்பு போராட்டத்தால் கூட முடியாமல் போனது இப்போது சாத்தியமாகியுள்ளது.
சமகாலத்தில் நாட்டின் பாடசாலைகள்,பல்கலைக்கழகங்கள், மற்றும் ஏனைய கல்விச்செயற்பாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் மாணவர்களின் கல்வியில் பின்னடைவு ஏற்;பட்டுவிடாத வகையில் மாற்றுவழிகளிலான உத்திகளைக் கையாளவேண்டும். நாடலாவியரீதியில் சுகாதாரம் ,மருத்துவம், சுத்திகரிப்புச் சேவைகளின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துவதன் ஊடாக பாதுகாப்பான சூழலை உருவாக்கமுடியும். இலங்கையில் இத்தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக மருத்துவத்துறையினர், பாதுகாப்புத் துறையினர் தங்களது பணிகளை சரிவர செய்வதன் ஊடாக இலங்கையின் தொற்று வீதம், மரணம் வீதம் ஏனையநாடுகளை விட கட்டுப்படுத்தப்பட்டடுள்ளது.
நாட்டில் தற்போதுள்ள தொடர்ச்சியான ஊரடங்கு சட்டத்தின் மூலம் விவசாயம் பாதித்து விடக்கூடாது எனும் நோக்கில் விவசாயிகளுக்கு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அரசு பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. ஆயினும,; சாதாரண சூழ்நிலையில் மேற்கொள்வது போல் செய்ய முடிவதில்லை. அவற்றை விற்பனை செய்தல், சந்தைப்படுத்தல், தடைப்படுவதனால் பல விவசாயக் குடும்பங்கள்படும் கஷ்டம் ஏராளம். மேலும் இதே நிலைமை நீடிக்கும்போது நாட்டில் இதுவரை காணாத பஞ்சம் ஏற்படவதற்கும் இடமுன்டு. ஆகவே ஒவ்வொரு குடும்பமும் வீட்டுத்தோட்டச் செய்கையை மேற்கொள்வதற்கு தாமாக முயற்சி செய்ய வேண்டும். அதற்காக நாட்டில் விவசாய கமநல சேவைத் திணைக்களங்கள் ஏனைய விவசாய உதவி நன்கொடைத் திணைக்களங்கள் உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கு முன் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவைகளும் உரிய முறையில் விவசாயிகளை போய்ச்சேர வேண்டும்.
ஆகவே நோய்த் தடுப்புக்கு முழுமையாக கவனம் செலுத்தப்படும் அதேவேளை, மக்கள் பஞ்சத்தினால் பாதிக்கப்படாதிருப்பது குறித்தும் சிந்திக்க வேண்டும். இதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டியது அரசின் கடமை. இன்று சமூக நலன் விரும்பிகள் மற்றும் அரசினால் சரியாக இனங்காணப்பட்ட நிவரணங்களை வேண்டி நிற்கும் குடும்பங்கள் பல காணப்படுகின்றன. அவற்றை சரியாக இனங்கண்டு உதவிகளை வழங்குவது நல்லது. நாட்டுப் பொது மக்களும் இந்த ஊரடங்குச் சட்டகாலத்தில் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த ஊரடங்குச்;சட்டமானது பொதுமக்களின் சுகாதாரமான பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மேற்க்கொள்ளப்பட்டு வருவதால் மக்கள் தாமாகவே உணர்ந்து செயற்படவேண்டும். தவிர்க்கமுடியாத அத்தியாவசிய காரணங்களைத் தவிர்ந்த தேவையற்ற நடவடிக்கைகளுக்கு போக்குவரத்தினை மேற்கொள்ளுதல், ஒன்றுகூடுதலைத் தவிர்க்கவேண்டும். சமூக சேவைகளில் ஈடுபடும் அரசியல் தலைவர்கள் மற்றும் பிற சமூகசேவை நலன்விரும்பிகள் அனைவரும் பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டுவருதல் பாராட்டிற்குரியதே. ‘எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோய்.’
ச.றொபின்சன்
நுண்கலைத்துறை
கிழக்கு பல்கலைக்கழகம்