பகுத்தறிவாளுமையின் அடிப்படையில், மனிதர் ஏனைய உயிர்களினை விடவும், உயர்வானவராகக் கருதப்படுகிறார் என்பது காலாதிகாலமாக, நிலவி வருகின்ற அச்சுப் பிசகாத வாதம். இந்த வாதத்தில் மையங் கொள்வது, அறிவுடைமை அல்லது விசேடமாக பகுத்தறிவுடைமை என்பது தெளிவாகிறது. உண்ணல், உறங்கல் என்பதைக் காட்டிலும் விசேடமாக, சிந்தனை செய்தல், அத்தகைய சிந்தனையின் அடிப்படையில் சரி, பிழை என்ற வகையில் பகுப்பாய்வு செய்தல் என்பதாக பகுத்தறிவு, குறியிட்டு காட்டப்படுகிறது.
இத்தகைய பகுத்தறிவு ஆளுமையின் விருத்தி அல்லது துலங்கல் நிலை என்பது, அறிவின் விஸ்தகரிப்பிலும், பன்மைத்துவ வாசிப்பிலும் சாத்தியப்பாடுடையதாகிறது. கற்றது கைமண்ணளவு; கல்லாதது உலகளவு என்ற அடிப்படையில், கற்றதன் வழி கல்லாதது குறித்த தேடலுக்கும், அத்தகைய தேடலின்வழி, அறிவின் பன்மைத்துவ விஸ்தகரிப்பிற்கும், பன்மைத்துவ வாசிப்பு அவசியமாகிறது.
ஆனால் இத்தகைய பன்மைத்துவ வாசிப்பு என்பது, இயந்திரமயமாகி போன இன்றைய சூழலில், சிறப்பாக, கல்வி பரீட்சை சார்ந்து மட்டிட்டதாக கல்விப்புலத்தார் மத்தியில், நிலவுகின்ற இன்றைய சூழலில், எட்டாக்கனி என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றது. இது இவ்வாறு இருக்க, அறிவு அல்லது அறிவின் பன்மைத்துவம் குறித்து பேசும்போது, அறிவு என்பதே, பன்மைத்துவ சிந்தனைப்பரப்பு சார்ந்தது என்பதும்; அறிவின் பன்மைத்துவம் என்பது, பன்மைத்துவ சிந்தனை சார்ந்த, அறிவின் பரிமாணங்கள் அல்லது வளர்ச்சி நிலைகள் என்பதும் தெளியப்பட வேண்டிய ஒன்றே. சுருக்கமாகச் சொன்னால், அனுபவ அறிவு, நூலறிவு, பட்டறிவு போன்ற இன்னோரன்ன பன்மைத்துவ அறிவு பரப்பில், அவை சார்ந்து ஏற்படுகிற வளர்ச்சி நிலைகள் அல்லது பரிமாணங்கள் அறிவின் பன்மைத்துவமாகிறது எனலாம்.
இந்த நிலையில்தான் அறிவின் பன்மைத்துவத்திற்கும், வாசிப்பின் பன்மைத்துவதிற்கும் இடையிலான இடைவினைக் குறித்து தெளிய வேண்டியிருக்கிறது. இன்றைய கல்விச் சூழலில், சிறப்பாக பரீட்சையோடு மட்டிட்டு நிற்கின்ற கல்வி முறைமை, அறிவின் பன்மைத்துவ விஸ்தகரிப்பிற்கு பாரிய சவாலாக அமைகிறது.
பரீட்சை சார்ந்து மட்டிட்டு நிற்கின்ற கல்விச்சூழலில் பரீட்சை சார்ந்தும், பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள வேண்டியத் தேவை சார்ந்துமே, அறிவுத் தேடல் என்பது வரையறுக்கப்படுகிறது; பெரும்பாலும் தேடல் என்பது மட்டிடப்பட்டு, மனப்பாடக் கல்வியாகவே அமைந்து விடுகின்ற நிலையில், அறிவு அல்லது அறிவின் விஸ்தரிப்பு என்பது கேள்விக்குறியான நிலையிலேயே இருக்கிறது.
இந்த நிலையில்தான் ஏற்கனவே, நிறுவப்பட்ட அல்லது நடைமுறையில் இருக்கின்ற கோட்பாட்டுநடைமுறைகள் அச்சுப் பிசகாமல், பின்பற்றப்படுதல் காலாதிகாலமாக நிலவிவருகின்றது. எடுத்துக்காட்டாக, வரன்முறையாக கற்பிக்கப்பட்டு வரும் அல்லது எழுதப்பட்டிருக்கும் வரலாற்றில் காலனியம் என்பது ‘ பிரித்தானியர் ஆட்சியும், ஆதிக்கமும்’ என்பதாகவும், அவர்தம் ஆட்சியில் ஏற்பட்ட சாதக பாதக விளைவுகள் சார்ந்துமே வரலாறாகக் காலாதிகாலமாக கற்பிக்கப்பட்டும்; கற்கப்பட்டும் வருகின்றமையை எடுத்துக்காட்டலாம்.
இந்த நிலையில்தான், காலனியம் என்பது தொடர்பான புரிதல் என்பது, ‘பிரித்தானியர் ஆட்சி’ என்ற நிலை மாறாத, ஒன்றுகுவிக்கப்பட்ட, அரைகுறை புரிதலாக இருந்துவருகிறது. ஆக, இத்தகையை கருத்தாடல்கள் குறித்த முழுமையான புரிதல் என்பது, பன்மைத்துவ வாசிப்பாக தேடல் விஸ்தகரிக்கப்படும் போது சாத்தியப்பாடுடையதாவதுடன், அதன்வழி அறிவின் விஸ்தகரிப்பு என்பதும் நிலைக்கொள்கிறது.
கிணற்றின் ஆழத்தை பொறுத்து நீர் சுரக்கும் என்பது போல்தான் அறிவின் விஸ்தகரிப்பும், பன்மைத்துவ வாசிப்பு வழி சாத்தியபாடுடையதாகிறது. இத்தகைய பன்மைத்துவ வாசிப்பு தான், சமுகஞ்சார்ந்து சிந்திக்க வேண்டியத் தேவையையும், கட்டுடைக்கப்பட வேண்டிய கோட்பாடுகள் குறித்த புரிதலையும், தம் சுயம்சார்ந்து ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய மாற்றங்களையும் முன்மொழிகின்றது. இந்தவகையில், கற்றனைத் தூறும் அறிவு என்ற வள்ளுவனார் கூற்றும் காலம் கடந்து நிலைபேறுடையதாகிறது.
‘ தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்தூறும் அறிவு’
இரா.சுலக்ஷனா,
நுண்கலைத்துறை,
கிழக்குப்பல்கலைக்கழகம்.