வடக்கில் காணப்படுகின்ற மிக முக்கியமான நோய்களுக்குச் சிகிச்சையளிக்கின்ற நிறுவனமான இந்த வைத்தியசாலையை இயக்க வேண்டிய தேவை உள்ளது. ஆகவே இந்த நிறுவனமானது, இங்கே வருகின்றவர்களை கோவிட் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தி அவர்களுக்கான சிகிச்சை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றது.
அதேவேளை, கோவிட் தொற்றுக்குள்ளானவர்களை சிறப்பு வைத்தியசாலைக்கு அனுப்பும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. ஆகவே இந்தச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்கவேண்டும். மிக முக்கியமான ஏனைய நோய்களுக்கு எந்த வித இடர்பாடுகள் இன்றி சிகிச்சையளிக்க உதவவேண்டும்.
கொரோனா சந்தேகத்தில் இன்று 5 பேர் விடுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பரிசோதனை முடிவுகள் மாலை தெரியவரும். இதேவேளை கொரோனா தொற்றுடையவர்களுடன் தொடர்புகளைப் பேணிய, வைத்தியசாலைகளுக்கு வெளியேயுள்ளவர்களிடமிருந்தும் மாதிரிகளைப் பெற்று சோதனை செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக இப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் ஒருவருக்கும் தொற்று அடையாளப்படுத்தப்படவில்லை. இருப்பினும் நேற்றைய தினம் கொழும்பிலிருந்து குறிப்பாக வாழைத்தோட்டம் பகுதியிலிருந்து ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கும் எதிர்வரும் சில நாள்களில் சோதனை ஆரம்பமாகும்.
அவர்களிடையேயும் காய்ச்சல் அல்லது இந்த தொற்று சம்பந்தமான அறிகுறிகள் தென்படும் போது அவர்க போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
கொழும்பிலிருந்து இப்போது கொண்டு வரப்பட்டவர்கள் தொடர்பாக பொதுமக்கள் அதிகளவில் பதற்றம் அடையத் தேவையில்லை. இருப்பினும் மிக அவதானமாக இருக்கவேண்டும். ஏனெனில் இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் இதன் பரவல் கூடிக் கொண்டு செல்கின்றது. இதனால் நாங்கள் தொற்றுக்குள்ளானவர்களை விரைவாகக் கண்டுபிடித்து அவர்களுக்கு சிகிச்சையளிப்பதோடு தொற்றுடையவர்களுடன் தொடர்பை பேணியவர்களையும் கண்டறிந்து தனிமைப்படுத்தவேண்டும்.
கொரோனா தொற்று பற்றி நாங்கள் அதிகளவு கரிசனை கொள்ளுவதோடு, தொற்றைப் பரவலடையச் செய்யாமல் இருப்பதற்கான உதவிகளைச் செய்யவேண்டும். அதேவேளை, தொற்று ப்ற்றி அதிகளவு பதற்றம் இல்லாமல் கட்டுப்படுத்த உதவவேண்டும்- என்றார். #ஊரடங்கு #யாழ்ப்பாணம் #சத்தியமூர்த்தி #கொரோனா