உலகமே எதிர் கொண்டிருக்கும் இப்பேரிடர் காலப்பகுதியில், உலக நாடுகள் தத்தம் நாட்டு மக்களை பாதுகாத்து கொள்ளும் பொருட்டு, பெரும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில், கொள்ளைநோய்க்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், ‘அவரவர் பாதுகாப்பு என்பது அவரவர் கைகளிலேயே’ என்ற நிலையில் உலகமக்கள், செய்வதறியாது திகைத்து நிற்பதை பரவலாக அவதானிக்கமுடிகிறது. இதே நேரம், உலக நாடுகள் பொருளாதார சரிவிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளும் நோக்கில், இப்பேரிடர்க்காலத்தில் செயற்பட்டு வருகின்றமையை, கண்டித்து மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதும் சமுக வலைத்தளங்களில், பரவலாகப் பேசப்பட்டு வருகின்றமையை காணமுடிகிறது.
இத்தகைய, இக்கட்டானதொரு சூழ்நிலையில் கல்வி நிறுவனங்கள், இடை நிறுத்தப்பட்ட தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வது குறித்து பரவலாக பேசி வருவதோடு, அவற்றுக்கான வழிமுறைகளையும், உத்திகளையும் மாற்று நடவடிக்கைகள் எனும் பெயரில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இலங்கையைப் பொறுத்தவரை, கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வது குறித்து கலந்தாலோசித்துக் கொண்டிருக்கும் நிலையில், நாட்டில் தொற்றாளர்கள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் உயர்ந்த படியே இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரணதரம், உயர்தரம், பல்கலைக்கழகம் என அனைத்து கல்விப்புலத்தாருக்குமான, கல்வி நடவடிக்கைகள் மாற்று வழி முறையில், தேசிய தொலைக்காட்சி அலைவரிசைகளிலும், இணையவழியும் தொடர்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, நடைபெற்றும் வருகின்றன.
இலவச கல்வி எனும் கொள்கையின் அடிப்படையில் இதுவரை காலமும் செயற்பட்டு வரும் இலங்கையில், கல்வி மாத்திரமே இலவசம் என்ற அடிப்படையில் நிலவ, அதனை பெற்றுக்கொள்வதில், பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை அசமத்துவ நிலையே இன்று வரை நிலவி வருகின்றமை கண்கூடு.
இந்நிலையில் இப்பேரிடர்க்;காலப்பகுதியில் கல்வி நடவடிக்கைகள் இணையவழி தொடர்தல் குறித்து, ஆராய வேண்டி இருக்கிறது. இப்பேரிடர்க்;காலப்பகுதியில் குறிப்பாக, பல்கலைச் சூழலுக்குள் இணையவழி கற்றல் என்பது ஏற்புடையதே. எனினும், பாடசாலை சூழலுக்குள் நிலவுகின்ற சமத்துவமற்ற கல்வி முறையில் நின்றும், பல்கலைச் சூழலுக்குள் கல்வியை தொடரும் மாணவர் மத்தியில் இணையவழி கற்றல் முறைமை என்னவாக இருக்கபோகிறது?
பல்கலைக்கழக மாணவர்களை பொருத்தவரை, புலமைப் பரிசில்களை மாத்திரம் எதிர்பார்த்து எத்தனையோ மாணவர்கள் பயில்கிறார்களே அவர்களின் நிலைமை என்னவாக இருக்கிறது? இணையவழிக் கல்வி முறைமைக்கு பரிட்சயம் இல்லாதவர்கள், இணைய வசதி இல்லாதவர்கள் இவர்களுடைய நிலைமை என்னவாக இருக்கிறது? பாடசாலையில் படிக்கும் காலத்திலேயே தம் குடும்பப்பாரத்தை சுமந்து கொண்டு உயர் கல்வியை தொடர்கிறார்களே இவர்களுடைய நிலைமை என்னவாக இருக்கிறது? இவர்கள் அனைவருக்குமான கல்வி முறைமையாக இணையவழிக் கல்வி அமைகின்றதா என்பது கேள்விக்குறியே.
பல்கலைக்கல்விபுலம் என்பது, பன்மைத்துவ பண்பாட்டு பின்னணியிலிருந்து வருகின்ற சகலரையும் ஈர்ப்பதற்கான போதனாமுறைமைகளை கைக்கொள்ளுவதாக, அவரவர் தனிதிறமைகளையும் வளர்த்துக் கொள்வதற்கான, பல்துறைசார் அறிவு விருத்திக்கான, குறிப்பாக சமுகத்திற்கு எதிர்வினையாற்றுவதற்கான பரந்த, பன்மைத்துவ கல்விபுலமாக அமைகின்றது. இந்நிலையில் இத்தகைய பண்மைத்துவ கல்விபுலம் என்பது இணையவழி கற்றல் என்ற ஒற்றை மையத்தில் நிலைப்பெறுதல் தொடர்பில், சிந்திப்பது அவசியமானதே.
அதே நேரம், பல்கலைச் சூழலுக்குள்ளும் செயல்முறை சார்ந்து பரீட்சார்த்தமாக கற்கவேண்டிய, கற்பிக்க வேண்டிய ஏராளமான பாடநெறிகள் இருக்கின்ற நிலையில், செயல்முறை கல்விக்கான ஏதுவான உத்திமுறையாக இணையவழி கற்றல் முறைமை அமைகிறதா என்பது குறித்தும் ஆராய வேண்டி கிடக்கிறது. பல்கலைக் கல்வியை தொடர்ந்து சமுகம் சார்ந்து, சமுகத்துக்கு எதிர்வினையாற்றுவதாகச் செயற்படக்கூடிய செயற்பாட்டாளர்களுக்கு இத்தகைய செயல்முறை கல்வி என்பது அவசியமானதே.
எடுத்துக்காட்டாக நுண்கலைத்துறைசார் பாடநெறிகளில், நியமனம் பெறும் பட்டதாரி ஆசிரியர்கள் இத்தகைய செயல்முறை கல்வி அனுபவத்தோடு வாண்மைத்துவமுடைய ஆசிரியர்களாக, இருக்க வேண்டிய தேவைப்பாடும் இருக்கிறமையை எடுத்துக்காட்டலாம். இத்தகைய தகுதிப்பாடு என்பது, செயல்முறை சார்ந்து, பரிட்சார்த்தமாக செயற்படப்போகும் அனைவருக்கும் பொருந்தும். இந்நிலையில், பல்வேறு கற்றல் உத்தி முறைகளுக்குள், இணையவழி கற்றல் என்பது ஒருவகை உத்தியாக இருக்கின்ற பட்சத்தில், அதனையே, கற்றல் முறையாக கைக்கொள்வது என்பது அர்த்தமற்றதே.
இதேநேரம் பல்கலைக்கழகக் கல்வி என்பது கலந்துரையாடல்களாக, கருத்துப்பரிமாற்றங்களாக, ஆரோக்கியமான வாதப்பிரதிவாதங்களாக தொடர்கின்ற பட்சத்தில், ஒற்றை மையமாக இணையவழி மூலம் கல்வியைத் தொடர்வது என்பது குறித்து ஆழ்ந்து சிந்திக்க வேண்டிக்கிடக்கிறது.
பல்கலை சூழலுக்குள் கல்வி என்பது வெறுமனே பரீட்சை சார்ந்தும், பட்டம் சார்ந்தும் மட்டிட்டு நின்றுவிட முடியாது. சமுகம் சார்ந்து எதிர்வினையாற்றுவதற்கான கல்வி என்பதாகவே பல்கலைக் கல்வி அமைகின்ற பட்சத்தில், சமுகம் குறித்து சிந்திக்க வேண்டிய கடப்பாடு உடைய நாம், இக்காலப்பகுதியில் பரீட்சை சார்ந்து சிந்தித்தல் என்பது அவரவர் சுயம் சார்ந்து சிந்திப்பதன் ஏகோபித்த நிலை என்றே தெளிய வேண்டி கிடக்கிறது.
ஏனெனில் கல்வி அல்லது கல்வியின் பிரயோகநிலை என்பது, வெறுமனே பரீட்சையில் சித்தி பெறுதலும், சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளும், பதவிகளை பெற்றுக் கொள்ளும், அதனை தக்கவைத்துக்கொள்ளலுமான குறுகிய நோக்கோடு மட்டிட்டு நின்று விடுவதல்ல் மாறாக, சமுகம் குறித்து சிந்திப்பதும், சமுகத்திற்கு எதிர் வினையாற்றுவதாகவும் அமைதலே, சிறந்த கல்விப் போதனா முறைமை என்பதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், இப்பேரிடர்க்காலத்தில், நமது கல்வியின் பிரயோக நிலை என்பது, அவரவர் குடும்ப பாதுகாப்பு நலன் சார்ந்து சிந்திப்பதாகவும், அவரவர் ஆரோக்கிய நிலையினை கருத்திற் கொள்வதனூடாக, சமுக நலனையும், நாட்டின் பாதுகாப்பையும் உறுதிச் செய்வதில் பங்காளர்களாகச் செயற்படுவதே எனலாம்.
‘படிப்பது தேவாரம் இடிப்பது கோயில்’ என்பதாக நமது கல்வி முறைமை இப்பேரிடர்க் காலப்பகுதியில் அமைந்துவிட முடியாது. சமுகம் சார்ந்தும், சூழல் சார்ந்தும் கட்டமைக்கப்பட்டு;ள்ள கல்விக்கொள்கைகளுக்குள், இத்தகையதொரு அவசரக்கால நிலையில், கல்விக்கும் நடைமுறைக்குமானத் தொடர்பு என்பது இன்றியமையாததாகின்றது. சுருக்கமாகச் சொன்னால், ஆரம்பகல்வி காலப்பகுதியிலிருந்தே, போதிக்கப்பட்டுவரும், ‘ எல்லாம் எமது ஊர்கள்;;;;;; எல்லோரும் எமது உறவினர்கள் ‘ என்ற புரிதல் என்பது, ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற வாசகத்தை, மனப்பாடஞ் செய்து ஒப்புவித்துக் காட்டும் மனப்பாடக் கல்வியாக மட்டும் அமைந்துவிடமுடியாது. மாறாக அதனை பிரயோகநிலைப்படுத்தல் என்பதே. இதுவே, இன்றைய சூழலில் கல்வியின் தேவைப்பாடாக இருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.
இந்நிலையில், இணையவழி கற்றல் என்பதும் இத்தகைய அவசரகால நிலைமையில், சூழல் சார்ந்து, நடைமுறை வாழ்வியல் சார்ந்து அதனை பரீட்சார்த்தமாக எதிர்கொள்வதற்கான, யதார்த்தமான புரிதலுடன்; அணுகுவதற்கான கல்வியாக அமைதல் என்பதே தேவைப்பாடுடையதாகிறது. சுருக்கமாகச் சொன்னால், இத்தகையதொரு காலப்பகுதியில் கல்வி என்பது, உலகளாவிய ரீதியில் எதிர்கொண்டிருக்கும் இப்பேரிடரிலிருந்து, மீள்வதற்கான வழிமுறைகளை முன்மொழியும், சமுகஞ்சார்ந்து சிந்திக்கும் கல்வியாக அமைய வேண்டுமே தவிர, பரீட்சைத் தயார்ப்படுத்தலாக அமைந்து விடக்கூடாது.
ஆக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அவசரகால நிலைமையில், அரசாங்கத்தால் வழங்கபட்டுவருகின்ற, நிவாரணங்களையும், உதவித்தொகைகளையும் பெற்றுக்கொள்வதிலேயே பல்வேறு இடர்பாடுகளும், அசமத்துவநிலைகளும் நிலவுகின்ற அதேவேளை, அடுத்த வேளை உணவிற்கு என்ன செய்வது என அவலப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருசாரார் மத்தியில், அவர்களை தனியன்களாக விட்டுவிட்டு, நாம் பட்டம் சார்ந்தும், பரீட்சை சார்ந்தும் சிந்தித்தல் என்பது எத்துணை பொருத்தமானது என்பது சிந்திக்கப்பட வேண்டியதே.
இரா.சுலக்ஷனா,
நுண்கலைத்துறை,
கிழக்குப்பல்கலைக்கழகம்.