Home இலங்கை ரீ-56 ரக துப்பாக்கி விவகாரம்-சந்தேக நபருடன் நெருக்கமாக பழகிய இராணுவ கப்டன் இடமாற்றம்

ரீ-56 ரக துப்பாக்கி விவகாரம்-சந்தேக நபருடன் நெருக்கமாக பழகிய இராணுவ கப்டன் இடமாற்றம்

by admin

பாறுக் ஷிஹான்

இரண்டு குழுக்களுக்கிடையில் கடந்த திங்கட்கிழமை(20) இரவு 9.30 மணியளவில்  மதுபோதையில் இடம்பெற்ற ஒரு பிரச்சினையின் போது துப்பாக்கி  சூடு ஒன்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைதான ஐவரும் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் விசாரணைக்காக பொறுப்பேற்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக முதலில் செவ்வாய்க்கிழமை(21) ஒரு சந்தேக நபர் கைதான நிலையில் துப்பாக்கி சூடு நடாத்திய சந்தேக நபரின் வாக்குமூலத்திற்கமைய  4 சந்தேக நபர்களை  சம்மாந்துறை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.இந்த கைது  நடவடிக்கையை  நீதிமன்ற உத்தரவிற்கமைய  சம்மாந்துறை  குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி விஜயராஜா குழுவினர்  முன்னெடுத்த நிலையில் தற்போது பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர்.

இச்சம்பவத்தில் கைதான பிரதான சந்தேக நபருடன் நெருங்கி பழகிய அப்பகுதி  இராணுவ கப்டன் தர அதிகாரி ஒருவருக்கு  தற்போது வடபகுதிக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.இவ் இராணுவ அதிகாரிக்கு பிரதான சந்தேக நபர் மோட்டார் சைக்கிள் ஒன்றினையும்  கொள்வனவு செய்து கொடுத்துள்ளதுடன் அவ்வப்போது பல்வேறு உதவிகளையும் செய்துள்ளார்.

மேற்படி சம்பவத்தில் கைதானவர்கள் அனைவரும் 26, 38 , 42,  40 ,மற்றும் 27 வயதினை உடையவர்களாவர்.இவ் ஐந்து  சந்தேக நபர்களும்   குறித்த துப்பாக்கியை மறைத்து வைக்க ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டு அடிப்படையிலும்   துப்பாக்கியை தன்வசம் உரிமையாக வைத்திருந்து பாதுகாத்தமை குற்றச்சாட்டிற்காகவும்  சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பாகவும்  ஏதாவது பயங்கரவாத குழுவினருடன் தொடர்புள்ளமை தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொண்டுள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதில் பிரதான சந்தேக நபர்   செங்கல் வாடி மற்றும் இறைச்சிக்கடை உரிமையாளர் எனவும்   ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து வெளியாகியுள்ளது.

பின்னிணைப்பு

கடந்த திங்கட்கிழமை(20) இரவு 9.30 மணியளவில் இரண்டு குழுக்களுக்கிடையில் மதுபோதையில் இடம்பெற்ற ஒரு பிரச்சினையின் போது துப்பாக்கி  சூடு ஒன்று இடம்பெற்றதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய 26 வயதுடைய சந்தேக நபர்  மறுநாள் கைதாகி இருந்தார்.

குறித்த கைதான சந்தேக நபரை தடுத்துவைத்து விசாரணை மேற்கொண்ட  காவல்துறையினர் மேலதிக தகவலை பெற்ற பின்னர்  வியாழக்கிழமை(23) இன்று சம்மாந்துறை மலையடிக்கிராமம் 1 ஐ சேர்ந்த 38 வயதினையுடைய மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.இவ்வாறு இரண்டாவதாக  கைதான  சந்தேக நபர் ஏலவே கைதான சந்தேக நபருக்கு   துப்பாக்கி சுடுவது  குறித்து  பயிற்சி அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைதான இரண்டாவது  சந்தேக நபரது இடது கையில் 4 விரல் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஏலவே  மீட்கப்பட்ட துப்பாக்கியை சட்டவிரோதமாக மறைத்து வைத்தமை அதனை பயன்படுத்த உதவி செய்தமை துப்பாக்கி சூட்டு  பயிற்சி வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கு அமைய இச்சந்தேக நபர் கைதாகியுள்ளார்.இது தவிர பயங்கரவாத குழுக்களுக்கும் கைதான சந்தேக நபர்களுக்கும் ஏதாவது தொடர்புகள் உள்ளதா என  காவல்துறையினர்  பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.மீட்கப்பட்ட துப்பாக்கி பாகிஸ்தான் நாட்டு தயாரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் சம்மாந்துறை  காவல்துறை பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராமத்தில் திங்கட்கிழமை(20) இரவு 9.30 மணியளவில் துப்பாக்கி சூடு ஒன்று இடம்பெற்றதாக காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய கிழக்கு மாகாண  சிரேஷ்ட காவல்துறை மா அதிபர் நிலந்த ஜெயவர்த்தனவின் கட்டளைக்கமைய    அம்பாறை மாவட்ட பிரதி  காவல்துறை மா அதிபர் அயாஷ கருணாரத்தினவின் மேற்பார்வையில்      அம்பாறை மாவட்ட  காவல்துறை அத்தியட்சகர்  எம்.ஜெயந்த ரத்னாயக்க நெறிப்படுத்தலில்  கல்முனை பிராந்திய  காவல்துறை அத்தியட்சகர் புத்திக்க ஜெயசுந்தரவின்  நேரடிக் கண்காணிப்பில் சம்மாந்துறை  காவல் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத் தலைமையில்   சம்மாந்துறை  காவல்  நிலைய குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி விஜயராஜா குழுவினர் துப்பாக்கி சூடு இடம்பெற்று 24 மணித்தியாலங்களுக்குள்(செவ்வாய்க்கிழமை(21)  26 வயதுடைய சந்தேக நபரையும் துப்பாக்கி சூட்டை மேற்கொண்டு மறைத்து வைத்திருந்த ரீ 56 ரக துப்பாக்கி மற்றும் 9 ரவையுடன் கூடிய  ரவைக்கூட்டையும் மீட்டுள்ளனர்.

மேலும் குறித்த சம்பவத்தின் போது இரு துப்பாக்கி வேட்டுக்களை சந்தேக நபர் தீர்த்துள்ளதாக காவல்துறையினரின் விசாரணையின் இருந்து தெரிய வந்துள்ளது.    #துப்பாக்கி  #இராணுவகப்டன்  #இடமாற்றம் 
 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More