உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானினால், புத்தளம் – வனாத்தவில்லு பகுதியில் பாடசாலையொன்று நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ள காவல்துறை ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன, குறித்த பாடசாலையில் பயங்கரவாதம் தொடர்பான போதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மூலமே இது குறித்துத் தெரியவந்துள்ளதெனத் தெரிவித்துள்ள அவர் குறித்த பாடசாலையில் ஆயுதப் பயிற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் 2008ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு இறுதி வரை, குறித்த பாடசாலை நடத்தப்பட்டுள்ளதுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 40 வரையான மாணவர்கள் இங்கு கல்வி கற்று வந்துள்ளமை தெரியவந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
சஹ்ரான் இந்த இடத்துக்குச் சென்று பயங்கரவாதம் தொடர்பிலான போதனைகளை நடத்தியுள்ளார் என்பதுடன், காணொளிகளையும் காட்சிப்படுத்தியுள்ளார் எனவும் இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய, ஏனைய தற்கொலைதாரிகளும், இங்கு போதனைகளை முன்னெடுத்துள்ளனர் எனக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் தொடர்பான யுத்தக் காணொளிகள், இலங்கையில் நடைபெற்ற சிவில் யுத்தக் காட்சிகள் என்பன காண்பிக்கப்பட்டு, அவர்களின் மனங்களை மாற்றி பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவுக்கமைய, பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டு வரும் சந்தேகநபரே அண்மையில் சம்பூர் ஆயுத பயிற்சி முகாமை அதிகாரிகளுக்கு அடையாளம் காட்டினார் எனவும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்காக, புத்தளத்தில் அமைப்பொன்று நடத்தப்பட்டுள்ளமையும்விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். #சஹ்ரான் #புத்தளம் #வனாத்தவில்லு #உயிர்த்தஞாயிறு