159
ஊரடங்குச் சட்டத்தை மீறியமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது நடந்தமை ஆகிய இரண்டு குற்றங்களுக்காக 45 பேருக்கு 600 ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.
கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் வீதியில் பயணித்த 80 பேர்வரை இந்த மாதம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து காவல்துறையினர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று (ஏப்ரல் 30) வியாழக்கிழமை வழக்குத் தாக்கல் செய்தனர்.
பொதுமக்களின் பாதுகாப்புக்காக அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டத்தை மீறி அத்தியாவசிய தேவைகள் ஏதுமின்றி வேண்டுமென்று பிரதேசத்தினுள் நடமாடித் திரிந்தமையால் 1947ஆம் ஆண்டு 25ஆம் இலக்க பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் மூன்றாம் பிரிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் மற்றும் 1959ஆம் ஆண்டு 08ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்ட 16(3) உப பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தை புரிந்துள்ளீர்.
முதலாம் குற்றச்சாட்டு மேலதிகமாக நீவிர் அதே நாள், அதே நேரம், அதே இடத்தில் அதே சம்பவக் கோவையின் போது, தொற்று நோய் பரவுவதைத் தடுப்பதற்கு தனிமைப்படுத்தப்பட்டு அல்லது தொற்று நோய் நிலவுகின்ற இடங்களுக்கும் வேறு இடங்களுக்கும் இடையிலான தொடர்பினை கட்டுப்படுத்துவதற்கு அரசினால் விதிக்கப்பட்டிருக்கும் சட்டங்களைத் தெரிந்து கொண்டு அல்லது அந்தச் சட்டங்களைத் தெரிந்துகொள்ள காரணம் இருந்தும் வேண்டுமென்று அந்தச் சட்டங்களுக்குக் கீழ்ப்படியாது நடந்து கொண்டமையால் இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 264ஆம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைப் புரிந்துள்ளீர்.
மேற்சொன்ற இரண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து 45 பேரும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் இன்று வியாழக்கிழமை முற்படுத்தப்பட்டனர். அவருக்கு குற்றப்பத்திரம் வாசித்துக் காண்பிக்கப்பட்டது.
சந்தேக நபர்கள், தன்மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டார். அதனால் அவர்களை குற்றவாளிகளாக இனங்கண்ட மன்று, ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்கு 100 ரூபாய் தண்டப் பணமும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமைக்காக 500 ரூபாய் தண்டப்பணமும் என அனைவருக்கம் தலா 600 ரூபாய் தண்டம் விதித்து உத்தரவிட்டது.
இதேவேளை, இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 264ஆம் பிரிவின் கீழ் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ள இடங்களில் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை அறிந்திருந்தும் அதனை மதிக்காது நடந்துகொள்ளும் நபர் ஒருவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை அல்லது ஆயிரத்து 500 ரூபாயை விஞ்சாத தண்டம் அல்லது சிறை மற்றும் தண்டப்பணம் அறவீடு ஆகிய தண்டனைகளை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. #ஊரடங்கு #தண்டம் #கோப்பாய் #தனிமைப்படுத்தல்
Spread the love