பலவிதமான உயிர் கொல்லி நடவடிக்கைகளை செவ்வனே ஈடேற்றிய மனித இனம் இடையிடையே பல உயிர் கொல்லும் உயிரிகளின் சொல்லிலடங்கா விளைவுகளையும் சந்தித்துதான் வந்துள்ளது. அதற்கு 21 ஆம் நூற்றாண்டில் மிகப்பெரும் உதாரணம் இன்று நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது. மரபிழக்க செய்யப்பட்ட நடவடிக்கைகள் உயிர் பெற்றுக் கொண்டிருக்கின்றன. மனித இனம் மனித இனத்தின் மீதும் பிற உயிர்கள் மீதும் திணித்த இன்னோரன்ன தீச்செயல் வினைகள் வீழ்த்தப்பட்டு கொண்டிருக்கின்ற தருணங்கள் உணரப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது சரியில்லை அது சரியில்லை என்று ஒதுக்கிக் கொண்ட மரபுகள், மனிதர்கள், கலைகள், உணவுகள், உறவுகள், உள்ளுற்பத்திகள் என ஏராளமான மனித சுயங்கள் மீண்டும் தொடங்கும் மிடுக்காகும் காலம் எழுந்து கொண்டிருக்கின்றன. கோடி கோடியாய் பொருள் சேர்த்தும், உண்டியலில் கொட்டியும் என்ன பயன்? ஒரு வேளை சோற்றரிசிதான் முக்கியம் என்னும் சித்தாந்தம் உணரப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நிலவுக்குச் சென்றாலும் சரி நிலவைப் பிழக்க முயன்றாலும் சரி ஒரு முகமூடி இல்லாவிடின் வாழ்வே இல்லை என்ற நிலமை உணரப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நீ தீட்டுக்காரி, நீ கீழ்சாதி, நீ வேற்றினம், நீ வேற்று மதம் என்று காலங்காலமாய் பேணிய மனிதமிழந்த சமூக இடைவெளிகள் எல்லாம் இருப்பிழந்து அனைவரும் மனிதரே எவரையும் கொரோனா விரும்பியேற்றுக் கொள்ளும் என்னுங்கால நிபந்தனையை ஏற்றுணர வேண்டிய நிலைமைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
உலக நாடுகளைப் பொறுத்தவரையில் நிலைமை தீவிரம். இலங்கையும் விதிவிலக்கல்ல. கொரோனாவை வைத்து கொண்டு உலகின் அரசியல் நாடகத்தின் காட்சிகள் இங்கும் அரங்கேறுகின்றமைக்கு அண்மைய காலங்களில் ஈடேறுகின்ற சம்பவங்களும் சான்றல்லவா. எமது நாட்டிலே முதல் 100 நோயாளிகள் 54 நாட்களிலும், இரண்டாவது 100 நோயாளிகள் 19 நாட்களிலும், மூன்றாவது 100 நோயாளிகள் 09நாட்களிலும், நான்காவது 100 நோயாளிகள் 04 நாட்களுள் இனங்காணப்பட்டனர். (விக்கிபீடியியா) இதுதான் இலங்கையின் இன்றைய நிலமை. இதற்குள் பாடசாலைகள் திறக்கப்பட போகின்றன, பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட போகின்றன, தேர்தல் நடைபெறப்போகின்றது. இன்னும் எத்தனையோ. கொரோனாவின் தாக்கமானது இலங்கையிலே மிகத் தீவிரமாகியுள்ளமை பற்றியோ, அதற்கு மக்கள் எவ்வாறு தயாராக வேண்டும் என்பது பற்றியோ, இனிவருகின்ற காலங்களில் கொரோனாவை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்பது பற்றியோ, ஏற்படப்போகின்ற பொருளாதார நெருக்கடிகள் பற்றியோ, முடிந்தவரை உள்ளூர் உற்பத்திகளை செய்ய வேண்டிய தேவை பற்றியோ அல்லது அவரவர் வீடுகளிலாவது சிறு வீட்டுத்தோட்டம் செய்ய வேண்டியதன் தேவை பற்றியோ என எதுவித விழிப்புணர்வுகளும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப் படுவதாகத் தெரியவில்லை. மாறாக கையிருப்பில் இருந்த மதுபானங்கள் கெட்டுப் போய்விடும் என்பதற்காக மதுபானக் கடைகளைத் திறக்கவும், பல்லாண்டுகள் வழக்கு நடாத்தப் பட்டு தண்டனை கொடுக்கப்பட்ட நபரை விடுதலை செய்யவும், உயிர் கொல்லி நோயினை வைத்து லாபமீட்டிக் கொண்டிருக்கும் முதலாளியியம் முதலான வேலைப்பாடுகள் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற இன்றைய கால கட்டத்திலேதான் சமூகப் படிநிலையில் பெறுதிச் சுவராக விளங்கும் மாணவ சமுதாயம் என்ன செய்யப் போகின்றது?
முடிந்த வரை நாம் தற்கால இடர் நிலையில் உண்மை நிலை மக்களுக்கு எடுத்துச் செல்லவும், அவற்றை தற்காலத்திலும் வருங்காலத்திலும் நடைமுறைப்படுத்தவும் வேண்டிய காலக்கடைப்பாட்டுக்குள் இருக்கின்றோம். இதனை பலரும் பலவாறும் மேற்கொள்ள முடியும். எமது நாட்டிலே மாணவ சமுதாயத்தைப் பொறுத்தவரையில் பாடசாலையில் பதின்மூன்று வருடங்களாகப் படித்து விட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களில் கல்வியைத் தொடர்;ந்து கொண்டிருக்கின்ற நாம் எமது கல்வியறிவை வைத்து இத்தகையவொரு இடர் நிலையில் எவ்வகையான நன்நடைமுறைகளை எமது சமூகம் சார்ந்து காவிச் செல்லப் போகின்றோம் என்பதை உணர வேண்டிய தருணங்கள் எம்மை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மாணவரும் அவர் சார்ந்த துறைக்கற்றல் நடவடிக்கைகளையே முண்டியடித்து திரும்பத் திரும்பச் செய்யப்போகின்றோமா? அல்லது காலச்சூழல் விளைவுக்கேற்ப அதை எதிர் கொள்ள எத்தணிக்கப் போகின்றோமா? ஒவ்வொரு பிரஜைகளும் சுயமாக தனது வேலைகளைச் செய்து கொள்ள முடியாத நிலமையுள் இருந்து விடுபடக்கூடிய கல்விச் செயற்பாடுகளை இனிமேலாவது நாமும், எமது கல்வி நிறுவனங்களும் ஏற்படுத்த விழைவோமா? இல்லையெனில் முன்னைய நாட்களிலே பாடிய புராணத்தையே இப்போதும் பாடப்போகின்றோமா?
அல்லது இணைய வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டு பாடக்குறிப்புக்களையும், வீட்டு வேலைகள், ஒப்படைகள் மற்றும் இன்னும் பல வேலைகளையே கொடுத்துக் கொண்டே கல்வி நிறுவனங்கள் இருக்கப்போகின்றதா? நாளை என்ன நடக்கப் போகின்றது என்றே தெரியாத அளவுக்கு இக்கிருமியின் தாக்கம் உலகை உலுக்கிக் கொண்டிருக்கின்ற இன்றைய காலகட்டத்தில் இவ்வாறான கல்வி நடவடிக்கைகளால் என்ன பயனை எட்டமுடியும்?, ஒவ்வொரு பிள்ளைகளையும் அவரவர் சூழல் மைய விடயங்களுடன் பங்கு கொள் சார் கல்வி நடவடிக்கையின் தேவையை ஏற்படுத்த வேண்டிய காலம் இதுவல்லவா?, பதின்ம வயதுக்கு மேல் படித்து விட்டு ,இலகுவில் மீள முடியாத இவ்வாறான பேரிடர் காலங்களில் அவற்றை சுமுகமாக எதிர் கொண்டு, அதிலிருந்து விடுபட முடியாத மாணவ சமுதாயத்தினை சமைத்து என்ன பயன் விழையப்போகின்றது?, எமது அரசாங்கமும் சரி, கல்வி வல்லுனர்களும் சரி இது பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தாத இச்சூழலில் மாணவ சமுதாயம் என்ன செய்யப் போகின்றது? என்னும் கேள்வியை ஒவ்வொரு மாணவர்களும், மாணவர் சார்ந்த அரச மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களும் (குறிப்பாக பல்கலைக்கழகங்கள்) கேட்டுக் கொள்ள வேண்டும்.
கல்வி நடவடிக்கை சார்ந்த விடயங்களில் இவ்வனர்த்த காலங்களில் மேற்கொள்ளப் படுகின்ற வினைப்பாடுகளையும் அவதானிக்க வேண்டிய தேவையுண்டு. எமது நாட்டைப் பொறுத்தவரையிலே இன்றைய தனியிருத்தல் நேரத்துள் (டுஆளு) கற்றல் முகாமைத்துவ முறை என்பது நாடளாவிய ரீதியில் மாணவ சமூகங்களிடையே கற்றலை மேற்கொள்ளும் பொருட்டு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஆம் சிலருக்கு இது பழைய (2006 இல் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது) நடைமுறையாக இருந்தாலும் கிராமப்புறங்களில் பல மாணவர்களுக்கு புது நடவடிக்கையாகவும், எட்டாக்கணியாகவும் இருக்கின்றமையை வெகுவாக அவதானிக்க முடிகின்றது. இந்த டுஆளு கலாசாரத்தின் வருகையினால் பல விளிம்பு நிலை வீடுகளில் உறவுத் தளம்பல்கள் வெளிக்கிழம்பியுள்ளன. டுஆளு முறையானது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளப் பயன்படுத்தக் கூடிய ஒரு கருவியேயன்று கல்வி முறையல்ல என்பதை பலரும் உணர வேண்டும். ஆனால் சிலரால் ஆங்கிலம் மூலம் கல்வி பயில்வது எவ்வாறு பெருமையாக நினைக்கப் படுகின்றதோ, அவ்வாறே இக்கற்கை முறையும் பார்க்கப்படுகின்றது. மாணவர்களிடம் கைத்தொலைபேசிகளை கொடுக்கக் கூடாது என்ற விழுமியம் வலு விழந்து கொண்டு வருகின்றது. மாணவர்களைப் பொறுத்தவரைளில் இணையத் தொடர்புடன் கைபேசிகளைப் பாவிக்கத் தொடங்கினால் அவர்கள் பல தீய தொடர்புகளுடன் விரைவாக தொற்றிக் கொள்ளும் வாய்ப்புண்டு. சரி பேரிடர் காரணத்தினால் இம்முறையை நடைமுறைப்படுத்த வேண்டி தேவையுண்டு என்றாலும், இக்கற்கை முறை மூலமும் அரைத்த மாவையே அரைப்பது எத்தகைய பொருத்தமானது?, கைபேசி வசதியில்லாதவர்கள் தொலைக்காட்சிகளை அணுகலாம் என்று சொல்கின்றவர்கள் தொலைக்காட்சியே இல்லாத மாணவர் வீடுகளை கணக்கில் கொள்ளவில்லை. 100 வீத்திற்கு 70 வீதமானவர்களுக்கு இக்கலாசாரத்தின் மூலம் கல்வி பயில வாய்ப்பு ஏற்படுத்தப் படுகின்றது என்றால் மீதமுள்ள 30 வீதமானவர்கள் யார் என்று பார்த்தால் அவர்கள் விழிம்பு நிலை மக்களாகவே இருப்பர். இங்கும் முதலாளியம் வராமலில்லை. இன்னுமொரு விடயத்தையும் அவதானிக்க முடிந்தது. பாடசலை மாணவர்கள் தமது பாடசாலைகளிலேனும் சற்று சுதந்திரமாகக் கழித்திருப்பர். ஆனால் இவ்விக்கட்டான சூழ் நிலையில் பல வீட்டுப்பாடசாலைகள் முளைத்து மாணவர்களிடம் இருந்த சுதந்திரமும் பறிக்கப்பட்டுள்ளது. அதிலும் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் எழுதவுள்ள சிறுசுகளில் நிலை அதோகெதிதான்.
இந்த கொள்ளை நோய் காலத்தில் மாணவர்களைப் பொறுத்தவரையில் அவரவர் துறைகளுக்கு ஊடாகவே தாம் வாழும் சமூகத்திற்கு நோய்த்தாக்க விளைவுதிர்களையும், அதனை எதிர் கொள்ளக் கூடிய வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியும். விவசாயத் தொழினுட்பம் பயிலும் மாணவர்களாயின் அவர்களின் பிரதேசங்களிலே மக்களுடன் இணைந்து கொண்டு உள்ளூர் பயிர்ச் செய்கை முறைகளை ஊக்குவிக்கலாம், இலகுவாக அதிக லாபங்கள் பெறும் முறைகளை நடைமுறைப் படுத்தலாம், விஞ்ஞானம் படிக்கும் மாணவர்களாயின் இக்கிருமியிடம் இருந்து தப்பிக்கும் வழிமுறைகளை தமது பிரதேசத்தில் மேற்கொள்ளலாம், தொழினுட்பம் படிக்கின்ற மாணவர்களாயின் முகமூடி, கையுறை, இலகு நோய் நீக்கல் கருவிகள் போன்றவற்றை இலகுவாகவும் தேர்ச்சியாகவும் தாயரிக்கும் முறைகளை ஏற்படுத்தலாம்.(சில செயற்பாடுகள் இடம் பெறுகின்றன.), ஆற்றுகைக் கலைகளைப் பயிலுகின்ற மாணவர்களாயின் தமது கிராமம் சார் கலை நடவடிக்கைகளை தமக்குப் பொருத்தமான ஆற்றுகையின் (பாடல்,ஆடல், ஓவியம் முதலான ) ஊடாக வீட்டுச் சூழலைக் கொண்டே வெளிப்படுத்த எத்தணிக்கலாம். இவை போலவே ஏனைய துறை சார்ந்தவர்களும் சம கால நடைமுறைகளுக்கு அமைய அவரவர் கற்றலின் வெளிப்பாடுகளை நடைமுறைப் படுத்தலாம். இவ்வாறான செயற்பாடுகளை மாணவர்கள் மேற்கொள்வதற்கு அரசும், கல்வி நிறுவனங்களும் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கால கட்டுப்பாட்டுள் இருக்கின்றமையை எவரும் இலகுவில் மறுத்தல் கடினம்.
எனவேதான் கொரோனா போன்ற இவ்வாறான மீள முடியாத இடரிலிருந்து விடுபடுவதற்கும், எதிர் காலத்தில் ஏற்படப் போகின்ற இயற்கை மற்றும் செயற்கைச் சவால்களை எதிர் கொள்வதற்கும் மாணவ சமுதாயம் என்ன செய்யப் போகின்றது? அரைத்த மாவை அரைக்கப் போகின்றதா? அல்லது சமூகத்திற்கும் நாட்டிற்கும் தேவையான வினைப்பாடுகளை மேற்கொள்ளப் போகின்றதா?, நடத்தையில் ஏற்படுத்த வேண்டிய பகுத்தறிவு கல்வி முறைகளை வரவேற்கப் போகின்றதா? இவ்வாறான வினைப்பாடுகளைப் புரிவதற்கும் மாணவர் சார் சமூக நிறுவனங்கள் எவ்வாறான ஆயத்தங்களை மேற்கொள்ளப் போகின்றன? முதலான கேள்விகளைக் கேட்டுக் கொள்ளவும் அவற்றிக்கான தீர்வுகளை மேற்கொள்ளவும் மாணவ சமுதாயமாகிய நாங்கள் இன்றும் நாளையும் என்ன செய்யப்போகின்றோம்?
க.பத்திநாதன்
சு.வி.அ.க நிறுவகம்
கிழக்குப் பல்கலைக்கழகம்.