பிரித்தானியாவில் கொரோனாத் தொற்றினாலான உயிரிழப்புகளின் எண்ணிக்கை இத்தாலியினது இழப்பு எண்ணிக்கையை நெருங்குகின்றது.
பாதிப்பின் உச்சநிலையை பிரித்தானியா கடந்துவிட்டதாக பிரித்தானிய பிரதமர் தெரிவிக்கிறார்.
கொரோனாத் தொற்றுக்குள்ளாகி அதனுடன் தனது சொந்தப் போராட்டத்தை முடித்துக்கொண்ட பின்பாக, கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தைக் குறித்துப் பத்திரிகைகளுக்கு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் விளக்கமளித்துள்ளார்.
அண்மையில் வெளியாயான அரசாங்கத்தின் புள்ளிவிபரப்படி, கொரோனாவால் அதிக உயிரிழப்புகளைச் சந்தித்த ஐரோப்பிய நாடாக பிரித்தானியா மாறக்கூடும் என்பது தெரிகிறது.
பிரித்தானிய அரசு தினசரி வெளியிடும் புள்ளிவிபரத்தின் படி, கடந்த வியாழனன்று மாலை வரை அந்த ஒரு நாளில் ஏற்பட்ட உயிரிழப்பு 674 என்பதுடன் பிரித்தானியாவில் கொரோனாவால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 26,711 ஆக உயர்ந்திருக்கிறது.
உத்தியோகபூர்வமாக வெளியான தகவல்களின் அடிப்படையில், ஐரோப்பாவில் இத்தாலி நாட்டிலேயே ஆகக் கூடியளவு உயிரிழப்புகளாக 27,967 எண்ணிக்கை இதுவரை பதிவாகியுள்ளது. கொரோனாவால் ஏற்படும் தினசரி இறப்புகளின் எண்ணிக்கையானது இத்தாலியில் குறைவடைந்து வருகிறது. இத்தாலியில் கடந்த புதன்கிழமை 323 ஆக பதிவான தினசரி இறப்புகளின் எண்ணிக்கையானது வியாழக்கிழமை 285 ஆகக் குறைவடைந்துள்ளது. அத்துடன், புதிதாகத் தொற்றுக்குள்ளாபவர்களின் எண்ணிக்கையும் மிக வேகமாகக் குறைந்து வருகின்றது.
பிரித்தானியாவானது உச்சப் பாதிப்பு நிலையைக் கடந்துவிட்டது, இல்லையென்றால் முதலாவது உச்சநிலையை என்றாலும் கடந்துவிட்டது என்று பிரித்தானியப் பிரதமர் வியாழக்கிழமை அன்று பத்திரிகையாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார். மிகவேகமாக நடமாட்ட முடக்கத்தை நீக்குவது என்பது ஆபத்தானது என்றும் பிரதமர் ஜோன்சன் எச்சரித்துள்ளார்.
“நாங்கள் பாரிய இருண்ட சுரங்கத்தினூடாகப் பயணித்து உச்சநிலையை அடைந்த பின்பு இப்போது ஓரளவு சூரிய வெளிச்சம் தென்படுமளவுக்கு நாம் பயணிக்கிறோம். நாம் கட்டுப்பாட்டை இழந்து இந்தப் பயணத்தில் இதைவிடப் பெரிய மலையை எதிர்கொள்ள வேண்டியிருக்குமோ என்று எமக்குத் தெரியாது”, என கொரோனாவிலிருந்து குணமாகிய பின்பாக தான் நடத்தும் முதலாவது பத்திரிகையாளார்கள் சந்திப்பில் பிரதமர் ஜோன்சன் கூறியுள்ளார்.
கொரோனாத் தொற்றுக்கான சோதனை நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதிலிருந்து தவறியமை, தொடக்கத்திலேயே நடமாட்ட முடக்கத்தை நடைமுறைப்படுத்தத் தவறியமை, மற்றும் முன்வரிசையில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்குப் போதுமானளவு தற்காப்பு அங்கிகளை வழங்கத் தவறியமை போன்றவற்றால் கொரோனாத் தொற்றைக் கையாளும் விடயத்தில் பொரிஸ் ஜோன்சனின் நிர்வாகம் பெரிதும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது.
கொரோனாத்தொற்று ஏற்பட்ட காலத்தில் எதிர்வுகூறிய மதிப்பீடுகளுடன் தற்போதைய இழப்புகளை ஒப்பிட்டு இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பொரிஸ் ஜோன்சன் பேசியுள்ளார்.
மிகமோசமான இழப்பு ஏற்படின் இழப்புகள் 5,00,000 பேர் அளவிற்கு இருக்கும் என முதலில் கணிக்கப்பட்டிருந்தும், சுகாதாரசேவைப் பாணியாளர்களின் கூட்டு முயற்சியால் அப்படியானதொரு மிக மோசமான இழப்புச் சூழலைத் தவிர்க்கப்பட்டிருப்பதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வொடயத்தில் மற்றைய நாடுகளுடன் பிரித்தானியாவை ஒப்பிட்டுப் பார்ப்பது பயனற்ற செயல் என பிரதமர் ஜோன்சன் கருத்துத் தெரிவித்துள்ளார். பிரதமரின் இக்கருத்தானது இணைய வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதாரத்திற்குப் பேரழிவை ஏற்படுத்திய நடமாட்ட முடக்க நடைமுறைகளை முற்றிலும் உடனடியாகத் தளர்த்திவிட வாய்ப்பில்லை என்றும், ஆனால் தளர்த்தும் உத்தியின் முதற்கட்ட நடவடிக்கைகள் பற்றி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்றும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
“நாளொன்றுக்கு 100,000 வரையான கொரோனாத் தொற்றுச் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்ட போது அடையப்படாத இலக்கானது இந்த மாத இறுதிப்பகுதிக்குள் அடையப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளது. கடந்த புதன்கிழமை 80,000 கொரோனாத்தொற்றுச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், தமது எதிர்காலம் பற்றிய தெளிவு பிரித்தானியர்களுக்குக் கிடைக்கும்”, என இந்தப் பத்திரிகையாளார்கள் சந்திப்பில் பிரதமர் ஜோன்சன் மேலும் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை மீளத் தொடங்குவது, வணிக நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது போன்ற நடவடிக்கைகளுக்குத் தேவையான நிபந்தனைகளை விளக்கும் ஒரு விரிவான திட்டத்தை அடுத்த வாரம் பார்க்க முடியுமென பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி: அல்ஜசீரா – தமிழில் – குளோபல் தமிழ்ச் செய்திகள்..