உலகளாவிய கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3.3 மில்லியனைத் தாண்டியுள்ளது.
கொரோனாத் தொற்று பரவலடையத் தொடங்கியதிலிருந்து நோய்த்தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆகக் குறைந்தது 3,334,416 எனவும் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை ஆகக் குறைந்தது 237,943 எனவும் கோன்ஸ் கொப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளார்கள் தெரிவித்துள்ளார்கள்.
இறப்புக் குறித்த எண்ணிக்கைகளைக் குறைவாகப் பதிவுசெய்தல், மற்றும் மாறுபட்ட சோதனை முறைகள் என்பனவற்றால், கொரோனாத் தொற்றினால் ஏற்பட்ட இழப்புகள் குறைவாக கணக்கிடப்பட்டும் மதிப்பிடப்பட்டும் இருக்கின்றது.
அமெரிக்காவில் கொரோனாவாலான உயிரிழப்பு 100,000 இற்குக் குறைவானதாகவே இருக்கும் என டிரம்ப் தற்போது நம்புகிறார்.
“உயிரிழப்புகள் 100,000 இற்கும் குறைவானது என்ற நிலையை நாம் அடைவோம் என நம்புகிறோம் இருப்பினும் இது பாரிய இழப்பு”, என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
தொடக்கத்தில் இந்தக் கொரோனாத் தொற்றை “புரளி” என நிராகரித்த டிரம்ப் பின்னர் உயிரிழப்புகள் 100,000- 200,000 அளாவிற்குள் கட்டுப்படுத்திவிட்டாலே வெற்றி என்ற நிலையில் கருத்துச் சொன்னார். பின்னர், உயிரிழப்புகள் 60,000- 70,000 வரை குறைவாகவே இருக்கும் எனவும் எதிர்வுகூறினார்.
அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பிற்கான மையங்களின் புள்ளிவிபரங்களின்படி, கோரோனாவால் இதுவரை 62,406 பேர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு அவசரத்தேவைகளுக்குப் பயன்படுத்தும் மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு அமெரிக்கா அனுமதித்துள்ளது.
“றெம்டிசிவிர்” எனப்படுகின்ற மருந்தை வைரஸ் தொற்றாளர்களுக்கான அவசர சிகிச்சையளிப்பிற்கான மருந்தாகப் பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சைபெறும் நோயாளிகளுக்கு அவசரத் தேவைக்கான மருந்தாக இதனைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக FDA இன் ஆணையாளர் ஸ்டீபன் கான் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த அனுமதியானது மிகவும் நம்பிக்கையளிக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். குறுகிய காலத்தில் என்ன நடக்கக் கூடும் என்பதை இது விளக்கும் என வெள்ளைமாளிகையின் பணிக்குழு ஒருங்கிணைப்பாளாரான மருத்துவர் டெபோரா பிரிக்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க– சீனா கோவிட்- 19 வர்த்தகப் போரால் சந்தைகள் சரிந்தன.
கோரானா பரவலுக்கு எதிர்வினையாக அமெரிக்கஸீன வர்த்தகப் போர் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற டிரம்பின் அச்சுறுத்தல் உலக நிதிச் சந்தையில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. ஏனெனில், தொற்றினால் ஏற்பட்ட பொருளாதாரச் செலவுகள் அதிகரித்து வருகின்றன.
உலகின் இரண்டு பெரும் பொருளாதார வல்லரசுகளிற்கிடையில் அதிகரித்துவரும் பதட்டத்தினால், பங்குச் சந்தையில் பங்குகளின் விலைகள் வீழ்ச்சியடையந்த வண்ணம் உள்ளது. இலண்டனில் 2.5% இவ்வாறு பங்குகளில் வீழ்ச்சியேற்பட்டுள்ளது.
கடுமையான ஏற்பாடுகள் அயர்லாந்தில் தொடர்கிறது.
70 வயதிற்கு மேற்பட்டவர்கள் உடற்பயிற்சிக்காக வீட்டுக்கு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டாலும், நடமாட்டத்திற்கான தடைகள் இன்னும் பல வாரங்களுக்கு அயர்லாந்தில் தொடரும்.
மீண்டும் இந்த வரஸ் வர முடியாதவாறு அதனைப் பலவீனப்படுத்த மே மாதம் 18 ஆம் தேதி வரை இந்த நடமாட்ட முடக்க நடவடிக்கைகள் தொடருமென லியோ வறட்கர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 27,510 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் புதிதாக ஏற்பட்ட 739 உயிரிழப்புகளுடன் பிரித்தானியாவில் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 27,510 ஆக அதிகரித்துள்ளது. 177,454 பேர் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதுடன் கடந்த வியாழக்கிழமைக்குப் பின்னர் தொற்றாளர்களின் எண்ணிக்கை 6,201 ஆல் அதிகரித்துள்ளது என சுகாதாரச் செயலாளார் மார்ட் கன்கொக் தெரிவித்துள்ளார். இவர்களில் 15,111 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியா நடமாட்ட முடக்கத்தை நீட்டிக்கிறது.
நாட்டின் சில பகுதிகளில் சில கட்டுப்பாட்டைத் தளர்த்தியபடி நடமாட்ட முடக்கத்தை இந்தியா மேலும் இரு வாரங்களுக்கு நீட்டித்துள்ளது.
தென்னாபிரிக்கா நடமாட்ட முடக்கத்தைத் தளர்த்தத் தொடங்கியுள்ளது.
மார்ச் 27 ஆம் தேதி நடமாட்ட முடக்கத்தை நடைமுறைப்படுத்தத் தொடங்கியதிலிருந்து அதிக கடன்சுமைகளை எதிர்கொண்டு வரும் தென்னாபிரிக்கா 5 வார நடமாட்ட முடக்கத்திற்குப் பீன்னர் சில தொழிற்துறைகளை மீளத் தொடங்க அனுமதித்துள்ளது.
கிம் ஜாங் உன் மக்கள் முன்னால் தோன்றியுள்ளார்.
கிட்டத்தட்ட 3 வாரங்களின் பின்பாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மக்கள் முன்னால் தோன்றியுள்ளதாக தெகொரியாவின் “ஜொன்காப்” செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
கிம் நோய்வாய்ப்படவில்லை என்றும் அவர் தொற்றிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதாற்காகவே இயல்பாக வெளியில் வராமல் இருப்பதாக அமெரிக்காவும் தென்கொரியாவும் தமது நம்பிக்கையை அழுத்தமாகச் சொல்லியிருந்தாலும், தொற்றுக்காலத்தில் அவர் வெளியில் வராமல் இருந்தமை பல ஊகங்களுக்கு வழிவகுத்தமை குறிப்பிடத்தக்கது.
(இந்தச் செய்திகள் “த கார்டியன்” இனால் தொகுக்கப்பட்டது) தமிழில் – குளோபல் தமிழ்ச் செய்திகள்…