யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஈபிடிபி உறுப்பினர் இரா.செல்வவடிவேல், தனது மகனுடன் சென்று வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டார் என்று காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வீட்டிலுள்ள கோழிப்பண்ணையை அகற்றாவிடின் ஆவா குழுவைக் கொண்டு அழிக்க வேண்டி வரும் என எச்சரித்துள்ள மாநகர சபை உறுப்பினர் இரா.செல்வவடிவேல், பண்ணை உரிமையாளரைத் தாக்கியும் உள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் பிரப்பங்குளம் வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று சனிக்கிழமை மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
“மாநகர சபை உறுப்பினர் இரா.செல்வவடிவேல் எமது வீதிக்கு 3 ஒழுங்கைகள் தொலைவில் இருக்கிறார். அவர் தனது மனைவி, மகனுடன் நேற்று மாலை எமது வீட்டுக்குள் சண்டியர் போன்று புகுந்தார். எமது கோழிப் பண்ணையால் சுகாதாரச் சீர்கேடு எனவும் அதனை உடனடியாக அகற்றுமாறும் அச்சுறுத்தும் பாணியில் தெரிவித்தார்.
நாம் இந்தக் கோழிப்பண்ணை பொதுச் சுகாதார பரிசோதகரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் உரிய அனுமதி பெற்று கடந்த 4 ஆண்டுகளாக நடத்தி வருகின்றோம் என்று அவரிடம் கூறினோம்.
அதனை ஏற்க மறுத்த அவர், தான் ஈபிடிபியைச் சார்ந்தவர் என்றும் தனது மகனிடம் ஆவா குழு உள்ளது என்றும் மிரட்டி என்னை அடித்தார். பெண்களை தகாத வார்த்தைகளால் ஏசினார்.
அவரது அடாவடி தொடர்பில் காவற்துறை அவசர சேவைக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் காவற்துறையினர் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்” என்று கோழிப்பண்ணை உரிமையாளர் தெரிவித்தார்.
“நான் அங்கு சென்று கோழிப்பண்ணை நாற்றம் தொடர்பில் கேட்டேன். அந்தப் பண்ணை பதிவு செய்யப்படவில்லை. கோழிப்பண்ணை உரிமையாளர் என் மீது கல்லால் எறிந்தார். அதனால்தான் அவரைத் தாக்கினேன்” என்று மாநகர சபை உறுப்பினர் இரா.செல்வவடிவேல் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.