இலங்கை மத்திய வங்கி மீண்டும் கொள்கை ரீதியான வட்டி வீதத்தை குறைத்துள்ளது. பொருளாதார நடவடிக்கை செயலணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று (06) இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை விசேட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கை மத்திய வங்கி நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நிலையான வைப்பு வீதத்தை குறைக்க முடிவு செய்துள்ளது.
குறைந்த பணவீக்க நிலைமைகளின் போது கொரோனா தொற்றுநோயினால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கத்தை சமாளிக்க மேலும் ஒத்துழைப்பு தேவை என்பதை கருத்தில் கொண்டு நாணய சபையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் பணவியல் கொள்கை மற்றும் பண நிலைமைகளை எளிதாக்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்ப, சந்தை கடன் விகிதங்கள் குறையவில்லை எனவும் நாணய சபை தெரிவித்துள்ளது.
அந்தவகையில் வட்டி விகிதங்களை மேலும் தாமதமின்றி குறைக்க நிதி நிறுவனங்களை வலியுறுத்துவதாகவும், இல்லையெனில் வட்டி விகிதங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. #மத்தியவங்கி #வட்டிவீதம் #குறைப்பு