”நாடுமுழுவதும் ஊரடங்கு நடைமுறை நாளைமறுதினம் திங்கட்கிழமை நீக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பினாலும் யாழ்ப்பாணம் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு மாத்திரம் வீட்டிலிருந்து வெளியில் வரவேண்டும். உலகிலிருந்து கொரோனா வைரஸ் தொற்று நீங்குவரை சுகாதாரத் துறையின் கட்டுப்பாடுகளை மதித்து நடக்கவேண்டும்” என யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய வலியுறுத்தினார்.
யாழ்ப்பாணம் விடத்தல்பளை கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 367 பேர் தனிமைப்படுத்தல் நிறைடைந்தநிலையில் இன்று (09) அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
நாட்டில் இயல்புநிலையைக் கொண்டுவரும் நோக்குடன் ஊடரங்கு உத்தரவை நீக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். எனினும் மருத்துவர்கள், சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே வீட்டிலிருந்து வெளியில் செல்லவேண்டும்.
வீட்டிலிருந்து வெளியில் செல்லும் போது முகக் கவசத்தை கட்டாயம் அணியவேண்டும். அத்துடன் பொது இடத்தில் ஒரு மீற்றர் சமூக இடைவெளியைப் பேணவேண்டும். உலகம் முழுவதும் கோரோனா வைரஸ் தொற்று நீங்குவரை நாம் அனைத்து சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றவேண்டும்.
எனவே யாழ்ப்பாணம் மக்கள் மருத்துவர்கள், சுகாதாரத் துறையினரின் அறிவுத்தல்களைப் பின்பற்றவேண்டும். அத்தியாவசிய தேவைகளின்றி வீட்டில் இருந்து வெளியில் வரவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றனர்- என்றார்.#யாழ்ப்பாணம் #விடத்தல்பளை #கொரோனா #தனிமைப்படுத்தல் #ஊரடங்கு