யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி புகுந்த காவற்துறையினர் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், வீட்டின் வேலி, மதில் என்பவற்றையும் சேதமாக்கி உள்ளனர்.
சண்டிலிப்பாய் இரட்டைப்புலவு வைரவர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் நேற்று சனிக்கிழமை மானிப்பாய் காவற்துறையினர் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்,
குறித்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
குறித்த வீட்டில் வசிக்கும் இளைஞர் ஒருவருக்கும் அப்பகுதியை சேர்ந்த யுவதி ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. அதற்கு யுவதியின் தந்தை கடும் எதிர்ப்பை தெரிவித்து இளைஞனை பல தடவைகள் மிரட்டியுள்ளார். அதற்கு இளைஞன் அடி பணியாததால், தனக்கும் மானிப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கும் இடையில் உள்ள செல்வாக்கான நட்புறவை பயன்படுத்தி, காவற்துறை முறைப்பாடு எதுவுமின்றி இளைஞனை மிரட்ட முயற்சித்துள்ளார்.
அதனை அடுத்து நேற்றைய தினம் சனிக்கிழமை மதியம் இரண்டு காவற்துறை உத்தியோகஸ்தர்கள் இளைஞனின் வீட்டுக்க்குள் அத்து மீறி நுழைந்து இளைஞனை தாக்கியுள்ளனர். அதனால் வீட்டில் இருந்த இளைஞனின் சகோதரர்களும், அயல்வீட்டரும் இளைஞனை தாக்கிய சிவில் உடை தரித்தோர் காவற்துறையினர் என அறியாது அவர்கள் இருவரின் மீதும் தாக்குதல் நடாத்தினர்.
அதனால் அங்கிருந்து தப்பித்த இரண்டு காவற்துறை உத்தியோகஸ்தர்களும், காவல் நிலையத்திற்கு த
கவல் கொடுத்து மேலதிக காவற்துறையினரை வரவழைத்து தம் மீது தாக்குதல் நடாத்திய இளைஞர்கள் மீது தாக்குதல் நடாத்தியதுடன் , வீட்டின் வேலி மற்றும் மதில் என்பவற்றையும் சேதமாக்கினார்கள். பின்னர் அங்கிருந்த ஐந்து இளைஞர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
அதேவேளை முன்னதாக சிவில் உடையில் வந்த இரு காவற்துறை உத்தியோகஸ்தர்களும் தாக்கியதில் காயமடைந்த இளைஞனை நோயாளர் காவு வண்டியை அழைத்து வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போது காவற்துறையினர் நோயாளர் காவு வண்டியை திருப்பி அனுப்பினர் எனவும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அண்மைக்காலமாக வட்டுக்கோட்டைக் காவற்துறையினர் அப்பகுதிகளில் தொடர்ச்சியாக பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி அட்டகாசம்புரிந்து வரும் நிலையில், இப்போ ஏனைய காவற்துறை நிலையங்களும், சட்டத்திற்கு புறம்பாக அதிகாரத்தை கையில் எடுத்து, அடாவடித்தனங்களில் ஈடுபட முயற்சிக்கின்றனரா? என்ற ஐயங்கள் யாழில் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.