முள்ளிவாய்க்கால் பகுதியை சேர்ந்த 3 நபர்கள் மீது காவற்துறையினர் மூர்க்கத்தனமான தாக்குதல் !
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்குமற்றும் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியை சேர்ந்த 3 நபர்கள் மீது முல்லைத்தீவு காவல் நிலைய அதிகாரிகள் மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.
குறித்த நபர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சம்பவம் தொடர்பில் காவற்துறை முறைப்பாடு பதிவு செய்ய முல்லைத்தீவு காவற்துறை யினர் மறுத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
கடந்த ஆறாம் திகதி இரவு 10 மணிக்கு பின்னதாக முள்ளிவாய்க்கால் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிக்கு சென்ற காவற்துறை அதிகாரிகள் சிலர் ஒரு நபருடைய பெயரைக் கேட்டு அவர் எங்கே என்றும் அவரைக் கொண்டுவந்து உடனடியாக ஒப்படைக்குமாறு கோரி, மூன்று நபர்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.
மது போதையில் சென்ற குறித்த காவற்துறை அதிகாரிகள் முதலில் ஒரு நபர் மீது தாக்குதலை நடத்திவிட்டு பின்னர் இன்னும் ஒரு வீட்டிற்கு சென்று மற்றைய நபர் மீது தாக்குதல் நடத்தி பின்னர் இன்னும் ஒரு வீட்டில் சென்று மூன்றாவது நபர் மீதும் மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்தி அவர்கள் பெயர் குறிப்பிட்ட ஒரு நபரை உடனடியாகக் ஒப்படைக்குமாறு கோரி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குறித்த தாக்குதலில் காயமடைந்த நபர்கள் 1990 நோயாளர் காவு வண்டி மூலமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு நபர் கடந்த (7) வீட்டில் மனைவி பிள்ளைகள் தனியாக இருக்கின்ற நிலையில் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். மற்றைய நபர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த போதும் வைத்தியசாலை நிர்வாகம் அவரை வீட்டுக்கு செல்லுமாறு அனுப்பியுள்ளனர்.
வைத்தியசாலையில் காவற்துறை முறைப்பாடு பதிவு செய்யுமாறு கோரிய போது பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்யவில்லை எனவும் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு தன்னுடைய உடல்நிலை தேறவில்லை நான் தொடர்ந்தும் சிகிச்சை பெற வேண்டும் என்று கோரிய போதும் காவற்துறையினரின் தூண்டுதலில் வைத்தியசாலை நிர்வாகம் அவரை வீட்டிற்கு அனுப்பியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தொடர்ந்து வைத்தியசாலையில் இருந்து நேற்று முன்தினம் (8)மாலை 3 மணியளவில் சென்று முல்லைத்தீவு காவற்துறை நிலையத்திற்குச் சென்று காவற்துறை முறைப்பாடு பதிவு செய்யுமாறு கோரிய போதும் இரவு 8 மணி வரை காவற்துறை முறைப்பாடு பதிவு செய்யாமல் நீதிமன்றம் சென்று என்ன பெற்றுக் கொள்ள போகிறீர்களோ அதனை தாங்கள் தருவதாகவும் காவற்துறை முறைப்பாடு பதிவு செய்ய வேண்டாம் எனவும் காவற்துறையினர் கோரியதாக பாதிக்கப்பட்ட நபர் குற்றம் சுமத்தியுள்ளார்.
என்ன காரணம் என்று இல்லாது இரவு நேரம் மதுபோதையில் வீடுகளுக்குள் புகுந்து இவ்வாறான தாக்குதல் நடத்துவதன் பின்னணியில் குறித்த பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். அத்தோடு குறித்த நபர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு குறித்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக வடக்கின் அரசியல் பிரமுகர்கள், அரச உயர் அதிகாரிகள், காவற்துறை உயர் அதிகாரிகள் அனைவரும் காவற்துறையினரின் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் குறித்து மௌனம் காப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர்.