இந்தியாவில் கொரோனாவினால் ஏற்பட்ட உயிரிழப்பு 2,000 தைத் தாண்டியுள்ளது. அங்கு 45 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமுலில் இருந்தாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வெகுவேகமாக அதிகரித்து வருகிறது.
பாதிப்பு அதிகமாக இருந்தாலும், இந்தியாவின் மக்கள் தொகையுடன் பார்க்கும் போது அது குறைவுதான் என தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம் ஊரடங்கு விலக்கப்பட்ட பின்னர் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் எனவும், ஜூலை இறுதியில் உச்சத்தை அடையும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62,939 ஆக உயர்ந்துள்ளதாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,109 ஆக அதிகரித்துள்ளது எனவும் சுகாதாரத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை அவர்களில் 19,358 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகவும் 41,472 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இதுவரை அங்கு 20,228 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 7,796 பேரும், தலைநகர் டெல்லியில் 6,542 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 6,535 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
உலக அளவில் 40 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2.8 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது #இந்தியா #கொரோனா #உயிரிழப்பு