இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும். நாளை திங்கட்கிழமை (11.05.20) முதல் அரச மற்றும் தனியார் நிறுவனங்களை கட்டுப்பாடுடன் திறப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, இந்தக் காலப்பகுதியில் பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு அடையாள அட்டையை பயன்படுத்தும் விதம் குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் செல்லுமாறும் அதிகளவில் பொதுமக்கள் வீதிகளில் ஒன்றுகூட அனுமதிக்க போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அரச தனியார் நிறுவனங்கள் பணியாளர்கள் பயணிப்பதற்காக போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவற்றினை தனிப்பட்ட பயணங்களுக்கு பயன்படுத்த முடியாது என்றும் இராணுவ தளபதி வலியுறுத்தி உள்ளார்.
அத்துடன் அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை கொள்வனவு செய்துகொள்ள முடியும் என்றும், தொற்று பரவாதமுறையில் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் இராணுவத் தளபதி பொதுமக்களிடம் கோரியுள்ளார்.
இடர் வலையங்களில் நிறுவன நடவடிக்கைகள், கடுமையான விதிமுறைகளுடன் நாளை முதல் ஆரம்பம்
இடர் வலையமாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நிறுவன நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படுவதனால் கடுமையான விதிமுறைகள் அமுலில் இருக்கும் என பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படாது எனத் தெரிவித்த அவர். பொதுமக்கள் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையில் தங்கள் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த பகுதிகளில் இருந்து தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், தமது நிறுவனத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட கடிதங்கள் வைத்திருப்பது அவசியம் என்றும், நாளாந்த மற்றும் வாராந்த சந்தை, உடற்பயிற்சி நிலையங்கள், களியாட்ட விடுதிகள், உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் ஆகியன நாளை திறக்கப்படாது என்றும் பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.
சாதாரண மக்களுக்கு பொது போக்குவரத்து சேவையை வழங்க வேண்டாம்….
சாதாரண மக்களுக்காக பொது போக்குவரத்து சேவையை வழங்க வேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் போக்குவரத்து அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
நாளை முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு தனியார் மற்றும் அரச சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் போது சாதாரண மக்கள் அதனை அத்தியவசியமற்ற முறையில் பயன்படுத்தலாம் என்பதினால் அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார். அதனடிப்படையில் இரண்டு வாரங்களுக்கு சாதாரண மக்களுக்காக பொது போக்குவரத்து சேவையை வழங்க வேண்டாம் என அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.