“இப்படியொரு யாழ்ப்பாணம் இருக்கின்றதா ” என சமூக வலைத்தளங்களில் வெளியான காணொளி ஒன்றில் ஒரு கிராமத்தை மிக மோசமாக சித்தரிச்சு , அந்த கிராமத்தில் 13 வயது சிறுவர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளானவர்கள் , தகாத உறவுகள் உள்ளன , பாடசாலைகளுக்கு பிள்ளைகள் செல்வதில்லை என பல குற்றசாட்டுக்களை முன் வைத்து ஒருவர் வழங்கிய நேர்காணல் சர்ச்சையை உருவாக்கியது. அந்த நேர்காணல் வெளியான மறுநாளே ஊரவர்கள் பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்றினையும் முன்னெடுத்திருந்தனர். அந்த நேர்காணல் தொடர்பிலும் நேர்காணல் வழங்கியவர் தொடர்பிலும் எழுந்த சர்ச்சைகளை தொடர்ந்து அதன் உண்மை தன்மைகளை அறிய முயற்சித்த போது ,
நேர்காணல் வழங்கியவர் பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த கிராமத்தை விட்டு வெளியேறி வேறு இடங்களில் வசித்து வந்த பெண் ஆவார்.எனவும் , அவரது தற்போதைய கணவர் முன்னர் சோஷலிச கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டு வந்த நிலையில் , தற்போது அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் யாழ்.கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றார்.
கணவரின் அரசியல் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக நேர்காணல் வழங்கிய பெண்ணும் செயற்பாட்டளாராக ஈடுபட்டு வருகின்றார். கடந்த வாரம் அக்கிராமத்திற்கு உலர் உணவு கொடுக்க என சிலரை அழைத்து சென்று சிலருக்கு உதவிகளை வழங்கி விட்டு அந்த கிராமத்தில் நின்று, கிராமத்தை மிக மோசமாக விமர்சித்து நேர்காணல் வழங்கி இருந்தார். அந்த நேர்காணல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன.
அந்த நேர்காணலுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நேர்காணலை சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்குமாறும் கோரினார்கள். அதனை அவர்கள் ஏற்காததால் , மக்கள் போராட்டம் ஒன்றினையும் முன்னெடுத்தனர்.
அதனை அடுத்து நேர்காணல் வழங்கிவர் கிராமத்தில் தமக்கு எதிராக கருத்துகளை முன் வைத்தவர்கள் , போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மீது தனிப்பட்ட ரீதியாக முகநூல் மூலம் பொய்யான, அவர்களை மானபங்கப்படுத்தும் விதமாக தகவல்களை பகிர்ந்துள்ளார்.
கிராமம் தொடர்பில் பொய்யான தகவல்களை வழங்கி நேர்காணல் வழங்கப்பட்டமை தொடர்பிலும் , முகநூல் ஊடாக விஷமத்தனமாக , பொய்யான தகவல்களை பரப்பி தனிப்பட்ட நபர்களுக்கு மானபங்கம் ஏற்படுத்தியமை தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் எதிர்வரும் புதன்கிழமை இரு தரப்பினரையும் பொலிசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
அதேவேளை கட்சியின் வேட்பாளரின் மனைவியின் இந்த விரும்பத்தகாத செயற்பாடுகள் தொடர்பில் கட்சியின் யாழ்.மாவட்ட முக்கியஸ்தர்களுக்கு அறிவித்த போது , தாம் நேரில் வந்து இந்த பிரச்சனை தொடர்பில் உங்களுடன் கதைத்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் தீர்மானம் எடுப்போம் என அந்த கிராம மக்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளனர். இந்த நிலையில், அந்த கிராமத்திற்கு சென்று கிராம மக்களிடம் அது தொடர்பில் கேட்ட போது ,
” சுன்னாகம் தெற்கு சபாபதிப்பிள்ளை வீதியில் அமைந்துள்ள இணுவில் வடகிழக்கு , ஜே 190 கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்டதே தேவ கிராமம். அங்கு 110 குடும்பங்கள் வசிக்கின்றன. அந்த மக்கள் பொருளாதார ரீதியாக பல பின்னடைவுகளை சந்தித்து, பல இன்னல்கள் மத்தியில் வாழ்கின்றனர்.
எல்லா கிராமங்களிலும் ஒரு சில தவறுகள் இடம்பெறலாம். அதற்காக முழு கிராமத்தையும் அவ்வாறு சித்தரிச்சு கூறியமை மிக தவறு. வதந்திகளை பரப்பாதீர்கள் குவாட்டஸ் என கூறினார்கள். ஆனால் இது ஒரு கிராமம்” என சன சமூக நிலைய தலைவர் கூறினார்.
அதேவேளை , “இந்த கிராமத்தை மிக மோசமாக விமர்சித்து நேர்காணல் வழங்கியவருக்கும் கிராமத்தில் உள்ள ஒரு சிலருக்கும் தனிப்பட்ட பிரச்சனைகள் இருந்தன. அதற்கு பழிவாங்கும் முகமாகவே எமது கிராமத்தை பற்றி மிக மோசமான குற்றசாட்டை முன் வைத்தார். அவர் அவ்வாறு சொன்னது மிக பெருந்தவறு. அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியமையும் தவறு.
எமது கிராமத்தில் சட்டத்தரணிகள் , முன்பள்ளி ஆசிரியைகள் என பல துறைகளில் பணியாற்றுவோர் வாழ்கின்றனர்.” என்றார் அங்கே வாழும் இளைஞர் ஒருவர்.
“எங்கள் கிராமம் முகாம் இல்லை. இது தேவ கிராமம் என்று அழைக்கப்படும் கிராமம். இங்க வறுமை உண்டு. அந்த வறுமையிலும் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக பெண்கள் கூட தோட்ட வேலைகளுக்கு போய், வெயில் காய்ந்து வேலை செய்கின்றார்கள். இவ்வாறாக பல இன்னல்கள் மத்தியில் நாம் வறுமையில் இருந்து மீண்டு வர போராடிக்கொண்டு இருக்கும் போது , எமது ஒட்டு மொத்த கிராம மக்களையும் தலை குனிய வைத்து விட்டார்கள். அந்த நேர்காணலில் , நேர்காணல் வழங்கியவர் முன் வைத்த குற்றசாட்டுக்கள் தொடர்பில் கிராம மக்களான எங்களிடம் எதுவும் கேட்காம விட்டது தவறு.
எமது கிராம பிள்ளைகள் பாடசாலை செல்வதில்லை என குற்றசாட்டை முன் வைத்தார். ஆனால் எனது மகன் கடந்த வருடம் நடைபெற்ற சாதாரண பரீட்சையில், 4A, 3 B, C, S என சிறந்த பெறுபேற்றை பெற்று தற்போது உயர்தரம் கணித பிரிவில் கல்வி கற்கின்றார்.
இந்த கிராமத்தில் வாழும் பிள்ளைகள் குறைந்த பட்சம் சாதாரண தரம் வரையிலாவது கல்வி கற்றே உள்ளனர். ஒரு சில மாணவர்கள் வீட்டு வறுமையால், கல்வியில் சிறந்து விளங்க தவறி சாதாரண தரம் சித்தியடையாததால் , சாதாரண தரத்துடன் கல்வியை நிறுத்தி உள்ளனர். அவ்வாறாக எமது கிராமத்தில் குறைந்த பட்சம் சாதாரண தரம் வரையிலாவது கல்வி கற்றே இருக்கின்றார்கள்.
வருமானமின்றி களவுக்கு செல்வதாக நேர்காணலில் கூறியுள்ளார். அவ்வாறு எமது கிராமத்தவர்கள் எவரும் வறுமையால் , வருமானமின்றி களவுக்கு செல்லவில்லை. அவ்வாறு செல்ல கூடியவர்களும் இல்லை. இந்த வறுமையில் இருந்து மீள வெயில் தோட்ட வேலை செய்து சம்பாதிக்கும் பெண்களே எம் கிராமத்தை சேர்ந்தவர்கள். வருமானமின்றி களவுக்கு செல்ல கூடியவர்கள் எனில் வெய்யிலில் காய்ந்து கூலி வேலை செய்யவேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. அந்த நேர்காணல் மூலம் வறுமையில் இருந்து மீள எத்தனையோ இடர்களை தாண்டி போராடி முன்னேறிவரும் எங்களை தலைகுனிந்து நிற்க வைத்து விட்டார்கள். என மிக கவலையுடன் தாயொருவர் தெரிவித்தார்.
ஒரு கிராமத்தை ஒட்டுமொத்தமாக விமர்சித்து ஒருவர் வழங்கிய நேர்காணல் தொடர்பில் அந்த மக்களின் கருத்தை கேட்காது அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, யாரோ ஒருவரின் தேவைக்காக முழு கிராம மக்களையும் தலைகுனிய வைத்தவர்கள் அந்த கிராம மக்களுக்கு பதில் கூறியே ஆக வேண்டும்.
பொறுப்பான பதிலை அவர்கள் கூற தவறும் பட்சத்தில் சட்டரீதியாக தமக்கான நியாயத்தை பெற அந்த கிராம மக்கள் போராட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவார்கள்.
நன்றி – கிராமம் – – மயூரப்பிரியன்…