எதிர்வரும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு வாரத்தில் இம் மாதம் 16,17,18 ஆம் திகதிகளில் வடக்கு கிழக்கின் தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் பயன்தரு மரங்களை நாட்டும் செயற்திட்டம் ஒன்றை தமிழ் மக்கள் கூட்டணி இவ்வாண்டு முதல் ஆரம்பிக்கின்றது. இது எமது தற்சார்பு கொள்கையின் ஒரு வடிவமே.
இந்த செயற்திட்டத்தை எந்தவிதமான கட்சி வேறுபாடுகளோ, அமைப்பு ரீதியான வெற்றுமைப்பாடுகளோ இன்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களும் எமது வரும்கால சந்ததியினரின் நலன்களைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே எமது விருப்பம்.
எதிர்வரும் மே 16,17,18ஆம் திகதிகளில் வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான தென்னைமரக் கன்றுகளையும் எலுமிச்சம் கன்றுகளையும் வேறு பல கன்றுகளையும் நாட்டுவதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இதன் பொருட்டு நாம் தென்னை, எலுமிச்சை, மாதுளை, மா போன்ற பயன்தரு மரக் கன்றுகளை இலவசமாக விநியோகிக்கும் நோக்குடன் கொள்வனவு செய்து வருகின்றோம். ஏற்கனவே 5000இற்கும் அதிகமான மரக் கன்றுகளை நாம் கொள்வனவு செய்துள்ளோம்.
மேலும் எமக்கு இத்தகைய மரக் கன்றுகள் தேவைப்படுகின்றன. ஆகவே விவசாய உற்பத்திகளில் ஈடுபட்டிருப்பவர்கள் எமக்கு இந்தக் கன்றுகளைத் தந்து உதவினால் அவற்றை ஏனைய பகுதிகளுக்கு விநியோகஞ் செய்யும் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம். இந்தத் திட்டத்துக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் நாற்று மேடை உற்பத்தியாளர்களிடம் உரிய பணத்தைச் செலுத்தி எமக்கு அறியத் தந்தால் நாம் அவர்களிடம் இருந்து மரக் கன்றுகளை பெற்றுக் கொண்டு விநியோகிப்போம். எமது மாவட்ட ரீதியான இணைப்பாளர்களுடன் நீங்கள் தொடர்பு கொள்ளலாம். அவர்களின் பெயர்களும் தொலைபேசி இலக்கங்களும் விரைவில் வெளியிடப்படும். அதே வேளை, யாழ்ப்பாணத்தில் உள்ள எமது காரியாலயத்துடன் தொடர்பு கொண்டும் தேவையான விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். எங்கள் தொலைபேசி எண் – 021-2214295.
எமக்கு ஊடாகத் தான் இந்தச் செயற்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று இல்லை. பொது மக்கள் தமது வீடுகளிலும் தமக்கு அண்மையில் உள்ள பொது இடங்களிலும் இந்த மர நடுகை நடவடிக்கைகளில் ஈடுபடலாம். பொது மக்கள் தமக்கு வசதியான வகையில் வகை வகையான பயன்தரு மரங்களையும் நாட்டலாம்.
மரங்களை வெறுமனே நாட்டிவிட்டால் போதுமானது என்று இராமல் அவற்றைக் குறைந்தது 6 மாதங்களுக்காகவேனும் நீர் ஊற்றிப் பராமரிக்கும் செயற்பாடுகளையும் நாம் முன்னெடுக்க வேண்டி இருக்கின்றது.
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக முள்ளிவாய்க்காலில் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த மக்களை நாம் வெறுமனே அஞ்சலி நிகழ்வுகளின் மூலம் நினைவுபடுத்திக் கொள்வதுடன் நின்றுவிடாமல், வளமான ஒரு தேசமாக வடக்கு கிழக்கை கட்டி எழுப்பும் அவர்களின் கனவை நனவாக்குவதற்கு சிறிய ஒரு பங்களிப்பாக இம் மரநடுகை கைங்கரியத்தை அன்றைய நாளில் செய்வதற்கு நாம் அனைவரும் பற்றுறுதி கொள்வோம். முன்னர் எப்போதையும் விட கொரோனா தாக்கத்துக்கு பின்னர் தற்சார்பு பொருளாதாரத்தின் அவசியம் முக்கியமாக உணரப்பட்டு வரும் இந்தத் தருணத்தில் இந்த செயற்திட்டத்தை வெற்றிகரமாக அமுல்படுத்த உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பை வேண்டிநிற்கின்றோம்.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
செயலாளர் நாயகம், தமிழ் மக்கள் கூட்டணி