கோவிட் 19 வைரஸ் தொற்றினால் பீடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் வீட்டிற்குள் சட்டவிரோதமான பிரவேசித்து, குடும்ப உறுப்பினர்களுக்கு மிகுந்த மன உளச்சலை ஏற்படுத்தியதன் மூலம் ஊடக நெறிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டப்பட்ட ஹிரு மற்றும் அத தெரண தொலைக்காட்சிகளின் செயற்பாடு காரணமாக ஏனைய ஊடகவியலாளர்களுக்கு வெலிகம நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் செய்தி அறிக்கையிட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஹிரு மற்றும் அத தெரண தொலைக்காட்சிகளின் அலைவரிசைப் பிரதானிகளுக்கு கடிதங்களை அனுப்பியுள்ள வெலிகம நகர சபையின் தலைவர், தமது நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதியில் கோவிட் 19 வைரஸ் தொற்றினால் பீடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் தனியுரிமையை மீறி ஹிரு மற்றும் அத தெரண தொலைக்காட்சிகள் செயற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிறுவனங்களுக்காக பணியாற்றும் ஒருவர் வெலிகம புதிய வீதியில் வசிக்கும் கோவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டிற்குள் பிரவேசித்து நிழற்படம் மற்றும் காணொளிகளை அனுமதியின்றி பிரவேசித்து பெற்றுக்கொண்டதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய ஊடகவியலாளர்களுக்கு தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகரசபைத் தலைவர் கூறியுள்ளார்.
1987(255) ஆம் ஆண்டின் நகர சபை சட்டத்தின் 4 ஆம் சரத்திற்கு அமைய தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய அனைத்து ஊடகவியலாளர்களுக்கு தடைவிதிக்க தீர்மானித்துள்ளதாக வெலிகம நகர சபை மேயர் ரொஹான் டி.டபிள்யூ. ஜயவிக்ரம ஹிரு மற்றும் அத தெரண தொலைக்காட்சிகளின் அலைவரிசைப் பிரதானிகளுக்கு எழுதியுள்ள கடிதங்களில் கூறியுள்ளார்.
இந்த எச்சரிக்கைக்கு அமைய செயற்படாவிடின், ஹிரு மற்றும் அத தெரண தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது மாத்திரமல்லாமல், தமக்கு கீழ் இயங்கும் பொது சுகாதார பரிசோதகர்களின் பணிகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் தனியான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த சந்தேகநபரான நோயாளிக்கு கோவிட் 19 தொற்று ஏற்படாவிட்டாலும் குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுக்கு சமூக ரீதியான இழுக்கு அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்படும் எனவும் அந்தக் கடிதங்களில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நபர் மற்றும் நோயாளி ஆகியோரை புகைப்படம் மற்றும் காணொளியை பதிவுசெய்யும் போது அவர்களின் அனுமதியை பெறாமல், ஒளிபரப்படக் கூடாது என கோவிட் 19 தொற்று தொடர்பிலான அறிக்கையிடலின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பான பரிந்துரைகளில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை உட்பட உலகம் முழுவதும் தொற்று நோய் காரணமாக துரதிஷ்டவசமான சூழ்நிலையில் பயணித்துக்கொண்டிருக்கும் தறுவாயில் இலங்கையில் மாத்திரம் நோயாளர்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப்படுவதை தாம் அவதானித்துள்ளதாக மேயர் ரொஹான் டி.டபிள்யூ.ஜயவிக்ரமவினால் கடந்த 8 ஆம் திகதி அனுப்பிய கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஹிரு மற்றும் அத தெரண தொலைக்காட்சி நிறுவனங்களினதும் ஏனைய நிறுவனங்களினதும் ஊடகவியலாளர்களும் சந்தேகத்திற்கு இடமான நோயாளர்களின் உரிமைகளை மீறுவதுடன், அவர்களின் தனிப்பட்ட இடங்களுக்குள் பிரவேசிப்பது மற்றும் சில வேளைகளில் தம்மை விளம்பரப்படுத்த அவர்கள் விரும்பாத விடயங்கள் ஆகியன இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தது என தாம் நம்புவதாகவும் மேயர் கூறியுள்ளார்.
நாடு பூராகவும் இதுபோன்ற சம்பவங்களை பார்க்க வேண்டியிருந்தாலும் வெலிகம நகர சபையின் தலைவர் என்ற அடிப்படையில், வெலிகம நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுவதற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் ஹிரு மற்றும் அத தெரண தொலைக்காட்சிகளின் அலைவரிசை பிரதானிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொலைக்காட்சி அலைவரிசைகள், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் கட்டுப்படுத்தப்படும் பொதுச் சொத்து எனவும் ஹிரு மற்றும் அத தெரண தொலைக்காட்சி நிறுவனத்திற்கு நினைவுபடுத்தியுள்ள வெலிகம நகர சபைத் தலைவர், கடிதத்தின் பிரதிகளை கோவிட் 19 தடுப்புக்கான செயற்பாட்டு மையத்தின் தலைவர் லெப்ரினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர்கள் அனில் ஜாசிங்க ஆகியோருக்கும் அனுப்பியுள்ளார்.