149
யாழ்.பல்கலை கழகத்தின் மாணவர்கள் உட்செல்லும் வாயிலில் காவல்துறையினர் ஒரு மணி நேரமாக காத்திருக்க , பல்கலைகழக பிரதான வாயிலில் மாணவர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு , பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலை கழக பிரதான வாயிலில் இன்று வியாழக்கிழமை இரவு 7மணிக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செயப்பட்டிருந்தது. இந்நிலையில் மாலை 6 மணிமுதல் யாழ்.பல்கலை கழக மாணவர்கள் உட்செல்லும் வாயில் முன்பாக கோப்பாய் மற்றும் யாழ்ப்பாண காவல்துறையினர் காத்திருந்தனர்.
காவல்துறையினர் அங்கு காத்திருக்க மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் திட்டமிட்டபடி இரவு 7 மணிக்கு பிரதான வாயில் முன்பாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். மாணவர்கள் அஞ்சலி செலுத்தி முடியும் தருவாயில் , பிரதான வாயிலில் நிகழ்வுகள் நடைபெறுவதனை அறிந்து கொண்ட காவல்துறையினர் அவ்விடத்திற்கு விரைந்து நிகழ்வினை தடுக்க முயன்றனர்.
அப்போது மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் மூவர் தாம் நிகழ்வு முடிந்து திரும்புகிறோம் என கூறி செல்ல முற்பட்ட வேளை அவர்களை புகைப்படம் எடுத்த காவல்துறையினர் அவர்களின் அடையாள அட்டைகளை வாங்கி விபரங்களை குறிப்பெடுத்து கொண்டனர்.
அத்துடன் ” இவ்வாறான நினைவஞ்சலி நிகழ்வுகளை நடாத்துவது சட்டவிரோதமானது , மாணவர்களாக இருப்பதனால் உங்களை கைது செய்யவில்லை. இல்லை எனில் உங்களை கைது செய்து மூன்று மாத காலம் வரையில் தடுத்து வைக்க கூடிய அதிகாரம் எமக்குண்டு ” என கடுமையாக மாணவர்களை காவல்துறையினர் மிரட்டி அனுப்பினர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெறும் இடங்களுக்கு செல்லும் காவல்துறையினர் சுகாதார அறிவுறுத்தல்கள் காரணம் காட்டி நிகழ்வுகளை குழப்பவுதற்கு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். நேற்றைய தினம் செம்மணியில் நடைபெற்ற நிகழ்வு மற்றும் இன்றைய தினம் நவாலி , பல்கலை கழகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை காவல்துறையினர் குழப்ப முற்பட்ட போதிலும், நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தாம் சுகாதார அறிவுறுத்தல்களின் அடிப்படையிலையே நிகழ்வுகளை முன்னெடுக்கிறோம் என நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #பல்கலைமாணவர்கள் #அஞ்சலி #முள்ளிவாய்க்கால்
Spread the love