கொரோனா வைரஸ் அனர்த்தத்தின் பின்னர் அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்தீப் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் அனர்த்தத்தின் பின்னர் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு சட்ட காலங்களில் மனித உரிமை தொடர்பிலான அறிக்கை எவ்வாறு அமைந்துள்ளது என வியாழக்கிழமை(14) மாலை ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய தகவலில் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக மகளிர் அமைப்புகள் மனித உரிமை ஆணையத்திற்கு முறைப்பாட்டினை வழங்கியுள்ளனர்.அதேபோன்று சிறுவர் துஸ்பிரயோகங்கள் குறித்த முறைப்பாடுகள் பொத்துவில் அட்டாளைச்சேனை சாய்ந்தமருது பிரதேசங்களில் இருந்து கிடைக்கப்பெற்றது.அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக பால்நிலை அடிப்படையிலான வன்முறை அதிகரித்து காணப்படுகிறது என்றே கூறலாம்.இது தவிர அரசாங்கத்தின் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் விடயத்தில் பயனாளிகள் தெரிவில் குளறுபடிகள் உள்ளதாக பிரதேச செயலகங்கள் மீது குற்றஞ்சாட்டி முறைப்பாடுகள் உள்ளன.காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் சமூகப் பொருளாதார நிலைமைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உடல் எரிப்பு சம்பந்தமாக முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்ற அதே வேளை மத தலங்களில் வணக்க வழிபாடுகளை மேற்கொள்ள அரசாங்கம் வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற மனநிலை தற்போது மக்களிடையே பரவலாக காணப்படுகிறது.ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலங்களில் பாதுகாப்பு தரப்பினரால் அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள்உள்ளன. குறிப்பாக காவல்துறை அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொண்டனர் என முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று இருக்கின்றன
இதில் கல்முனை சம்மாந்துறை சவளக்கடை போன்ற பகுதிகளில் பாரபட்சமாக காவல்துறையினர் மனித உரிமைகளை மீறி செயற்பட்டுள்ளதாக உள்ளன. கிடைத்திருக்கும் முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றோம்.இந்த ஊரடங்கு காலத்தில் சமூக விரோத செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுகிறது சட்டவிரோத மதுபான உற்பத்தி அக்கரைப்பற்று திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிலும் இருந்து அதிகமாக கிடைக்கப்பெற்றுள்ளன என்றார். #அம்பாறை #சிறுவர்துஸ்பிரயோகம் #வீட்டுவன்முறை #கொரோனா