இயல்பற்ற ஒரு சூழலுக்குள் மற்றொரு நினைவுகூர்தல் வந்திருக்கிறது. கடந்த ஆண்டும் ஈஸ்டர் குண்டு வெடிப்பு காரணமாக நினைவு கூர்தலை முழு அளவிற்கு ஒழுங்குபடுத்த முடியவில்லை. தாயகத்தை பொறுத்தவரை நிலைமைகள் இறுக்கமாக இருந்தன. பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகரித்தன. அது அதன் இயல்பான வளர்ச்சிப்போக்கில் நினைவுகூர்தலை நெருக்கடிக்கு உள்ளாக்கியது.
இந்த ஆண்டும் அப்படித்தான் கோவிட்-19 கொண்டு வந்திருக்கும் நெருக்கடி நிலைமை காரணமாக நாடு இன்னமும் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இது காரணமாக ஒன்று கூடுதல் கூட்டமாய் சேர்தல் போன்றன தொடர்ந்தும் தடுக்கப்படுகின்றன. இப்படி ஒரு காலகட்டத்தில் பெருந் கூட்டமாக மக்களை திரட்டி மே 18ஐ நினைவு கூர்வது சாத்தியமா ?
கோவிட்-19 ஐ ஒரு சாட்டாக காட்டியே அரசாங்கம் நினைவு கூர்தலை முடக்கக் கூடும் கோவிட்- 19 கொண்டு வந்திருக்கும் இயல்பற்ற சூழல் இலங்கைக்கு மட்டுமல்ல முழு உலகத்துக்கும் பொருந்தும். இப்படிப்பட்டதொரு இயல்பற்ற சமூக பொருளாதார அரசியல் சூழலுக்குள் நினைவுகூர்தல் எப்படி வடிவமைப்பது?
கடந்த மாதம் 22ஆம் திகதி யூதர்கள் இனப்படுகொலையை நினைவு கூர்ந்தார்கள். அந்த நாட்டின் அரசாங்கப் பிரதானிகள் சிலர் கோவிட்- 19 தொற்றுக்கு இலக்காகி தனிமைப்படுத்தலில் இருந்த ஒரு சூழலில் அங்கு நினைவுகூர்தல் எனப்படுவது முழுக்க முழுக்க பெருமளவுக்கு வேர்ச்சுவல் ஆக மாற்றப்பட்டது. நாட்டின் பிரதமரின் உரையும் பெருமளவுக்கு வேர்ச்சுவலாகவே பரப்பப்பட்டது. இனப்படுகொலையில் தப்பிப் பிழைத்தவர்கள் தமது அனுபவங்களை வேர்ச்சுவல் ஆகவே பகிர்ந்துகொண்டார்கள்.
இந்த உதாரணத்தை தமிழ் மக்களும் பின்பற்றலாம். குறிப்பாக இணையத்தள வசதிகளை அதிகம் உடைய புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வேர்ச்சுவல் ஆகவே நினைவு கூர்தலில் ஒன்றிணைய முடியும். மே 18ஆம் திகதி தாயகத்தில் ஒரு பெருங்கூட்டத்தை திரட்ட முடியாத ஒரு சூழலே பெரும்பாலும் இருக்கும். அரசாங்கம் கோவிட் -19இன் பேரால் ஒன்றுகூடல்களைத் தடுக்க முடியும் .எனவே ஈழத்தமிழர்கள் நினைவு கூர்தலுக்கான மாற்று வழிகளைச் சிந்திப்பது நல்லது.
இது தாயகத்துக்கு மட்டுமல்ல டயஸ்போறாவுக்கும் பொருந்தும். தமிழகத்திற்கும் பொருந்தும்; ஏனெனில் வைரஸ் ஆபத்து உலகப் பொதுவானது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது புலம் பெயர்ந்த தமிழர்கள்தான். தமிழகத்திலும் ஒரு சுமுகமான சூழல் ஒரு வாரத்துக்குள் ஏற்பட்டுவிடும் என்று எடுத்துக்கொள்ள முடியாது. மொத்தத்தில் பெருந்தமிழ் பரப்பில் பெரும் கூட்டங்களைத் திரட்டி மே18ஐ நினைவுகூர முடியாமலிருக்கும்.
எனவே தமிழ் மக்கள் பௌதீக ஒன்றுகூடல்களுக்குப் பதிலாக வேர்ச்சுவல் ஒன்று கூடல்களைப் பற்றி சிந்திக்கலாம். குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் அவ்வாறு சிந்திக்க வேண்டிய ஒரு சூழலில்தான் வாழ்கிறார்கள். அவர்களுக்கு இறுக்கமான இணைய வலையமைப்பு உண்டு. எனவே ஒன்று கூடலையும் நினைவு கூர்தலையும் கூடிய பட்சம் வேர்ச்சுவல் ஆக அவர்கள் சிந்திக்கலாம். அதேசமயம் இலத்திரனியல் நினைவு கூர்த்தலோடு சேர்த்து வேறு எந்த வழிகளில் பெருந்தமிழ் பரப்பை ஓர் உணர்ச்சி புள்ளியில் ஒருங்கிணைப்பது என்றும் சிந்திக்க வேண்டும்.
நினைவுகள் எப்பொழுதும் காட்சிகளோடு தொடர்புடையவை. ஓசையோடு தொடர்புடையவை. சுவைகளோடு தொடர்புடையவை.எனவே குறியீட்டுக் காட்சிகள் மூலம் நினைவுகளை தூண்டலாம். நினைவுகளை கடத்தலாம். நினைவுகளை திரட்டலாம். நினைவுகளை ஒன்றுகூட்டலாம். அப்படிப்பட்ட குறியீடுகளைக் குறித்து ஈழத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.; இனப்படுகொலையை எப்படி இலத்திரனியல் வடிவில் காட்சிப்படுத்தலாம் ஆவணப்படுத்தலாம் என்று சிந்திக்க வேண்டும.; குறிப்பாக ஒரு வேர்ச்சுவல் மியூசியத்தைப் பற்றி யோசிக்கலாம்.
அடுத்தது ஓசைகள் நினைவுகளை மீட்கும.; நினைவுகளை ஒருங்கிணைக்கும். ஒரு பாடல் அல்லது இசை வடிவம் ஒரு சமூகத்தையே ஒன்று திரட்டும். உலகத்தையே ஒன்று திரட்டும்.மே 18இற்குரிய இசை வடிவங்களை அல்லது பாடல்களை உருவாக்க வேண்டும். முழுத் தமிழ்ப் பரப்பிலிருந்து இதற்குரிய படைப்புருவாக்க மற்றும் நிபுணத்துவ உதவிகளைப் பெறலாம். ஒரு பாடல் இலகுவாக பெருந்தமிழ் பரப்பை இணைத்துவிடும். பௌதீக ரீதியாக நினைவு கூர முடியாத ஒரு சமூகத்தை அது மானசீகமாகத் தேசமாக இணைக்கும். இசை உணர்ச்சிகளைத் திரட்டும.; எனவே ஏதோ ஒரு உணர்ச்சி புள்ளியில் அது சமூகத்தை திரட்டும். பெருந்தமிழ் பரப்பு முழுவதையும் திரட்டும். எனவே நினைவு கூர்தலுக்கான ஒரு பொதுப் பாட்டை ஈழத்தமிழர்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
மற்றது சுவை. சுவையை எப்படி நினைவு கூருதலுக்கான ஒரு கருவியாக மாற்றுவது என்று ஏற்கனவே தமிழ் சிவில் சமூக அமையம் பரிசோதித்து விட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நினைவுகூர்தலில் அவர்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியை அறிமுகப்படுத்தினார்கள். ஒரு கிறிஸ்த்தவ மதகுரு யூதர்கள் மத்தியில் உள்ள ‘பாஸ் ஓவர்’ ஏன்ற ஒரு பொது நிகழ்வை ஞாபகப்படுத்தினார். புனித பைபிளில் காணப்படும் உதாரணங்களை சுட்டிக்காட்டி யூதர்கள் தமது பேரிடப்பெயர்வின் போது அருந்திய ஓர் உணவை இப்பொழுதும் அருந்துவதைப் போல ஈழத்தமிழர்களும் ஏதாவது ஒரு உணவை அதற்கு பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறினார்.
இறுதிக்கட்ட போரில் சாப்பாட்டுக்கு வழியற்றிருந்த மக்களுக்கு புலிகள் இயக்கத்தின் கட்டமைப்புகளால் சமைத்துக் கொடுக்கப்பட்ட கஞ்சியை அப்படி நினைவு கூர்தலுக்கு பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் கஞ்சியும் வாய்பனும் அதிகமாக உண்ணப்பட்டன கடைசிக் கட்டப் போரின் கடைசி நாளிலும் சனங்கள் படையினரின் கட்டுப்பாட்டை நோக்கி போய்க்கொண்டிருந்த கடைசிக் கணத்திலும் அங்கே வாய்பன்கள் விற்கப்பட்டன. எனவே கஞ்சியை அல்லது வாய்ப்பனை நினைவு கூர்தலுக்கான ஒரு உணவாக பயன்படுத்தலாம். கஞ்சி ஒரு எளிமையான உணவு. அதை ஒரு ஊழித் துயரத்தின் குறியீடாக்கலாம்.கடைசிக்கட்டப் போரில் பாலிருக்கவில்லை எனவே பாலாற்ற கஞ்சியை தயாரிக்கலாம். உப்பையும் தவிர்க்கலாம். கஞ்சியின் சுவையின்மையே ஊழித் துயரத்தின் குறியீடாக இருக்கும்.
தமிழ் சிவில் சமூக அமையம் ஏற்கனவே கஞ்சியை அவ்வாறு பயன்படுத்த தொடங்கிவிட்டது. உணவு ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்ட ஒரு யுத்தத்தில் ஒரு உணவையே நினைவு கூருதலுக்கான கருவியாகவும் பயன்படுத்தலாம் என்று தமிழ் சிவில் சமூக அமையம் கருதுகின்றது. இந்தமுறையும் பௌதீக ஒன்றுகூடல்கள் தடுக்கப் படுமாக இருந்தால் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வீடுகளில் சுட்டிகளை கொளுத்தி நினைவு கூரலாம் என்றும் தமிழ் சிவில் சமூகம் சிந்திக்கிறது.
கோவிட்-19க்கு முன்னரே நினைவுகளை மக்கள் மயப்படுத்த வேண்டிய தேவைகள் இருந்தன. ஏனெனில் நினைவுகூர்தலை ஒரு கிராமத்துக்கோ அல்லது ஒரு மாவட்டத்துக்கோ அல்லது ஒரு நாளுக்கோ மட்டும் சுருக்கக்கூடாது. அவ்வாறு சுருக்கினால் அது கோவில் திருவிழாக்களில் ஒருநாள் திருவிழாவை தன்னுடையதாக்கும் உபயகாரர்களை உருவாக்கிவிடும்.; இவ்வாறு உபயகாரர்கள் ஒருநாள் நினைவு கூர்தலை தம் வசப்படுத்தினால் நினைவு கூர்தலின் ஆன்மா பொலிவிழந்து விடும்.
எனவே நினைவு கூர்தலை ஆகக் கூடிய பட்சம் மக்கள் மயப்படுத்த வேண்டும். அதை ஓரு பொதுமக்கள் நிகழ்வாக மாற்ற வேண்டும். ஒரு குழுவோ அல்லது கட்சியோ மட்டும் அதற்கு உரிமை கோர முடியாது. முள்ளிவாய்க்கால் எனப்படுவது ஒரு மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் மட்டும் அல்ல. அது ஒரு புவியியல் பதம் அல்ல. அது ஓர் அரசியல் பதம். அது முழுத் தமிழ் மக்களுக்கும் உரியதொன்று. அதை முழுப் பெருந் தமிழ்ப் பரப்புக்கும் உரியதாக அனுஷ்டிக்க வேண்டும்.
எனவே நினைவு கூர்தலை ஆகக் கூடிய பட்சம் எப்படி மக்கள் மயப்படுத்தலாம் என்று சிந்திக்க வேண்டும். குறிப்பாக ஒரு வைரஸ் தொற்றுக் காலத்தில் சமூக முடக்கத்தின் மத்தியில் அதை எப்படி மக்கள் மயப்படுத்துவது என்று யோசிக்க வேண்டும்.;
தமிழ் சிவில் சமூக அமையம் ஒவ்வொரு தமிழ் வீட்டிலும் ஒரு சுட்டியை ஏற்றுமாறு கூறுகிறது. தாயகத்தில் இப்போதுள்ள பயச் சூழலைப் பொறுத்தவரை அதை சாதாரண தமிழ் மக்கள் எப்படி பின்பற்றுவார்கள் என்று தெரியவில்லை. மத அமைப்புகளும் சிவில் அமைப்புகளும் மாணவ அமைப்புகளான யாழ் பல்கலைக்கழகம் போன்றவையும் ஏனைய செயற்பாட்டு அமைப்புகளும் முக்கியமாக கட்சிகளும் முதலில் அதைச் செய்யலாம். பொது அமைப்புகளும் கட்சிகளும் அதை முதலில் செய்தால் சாதாரண சனங்கள் துணிந்து முன் வருவார்கள்.
இன்னுமொன்றைச் செய்யலாம். எல்லா கோவில்களிலும் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் மே 18ஆம் திகதி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சில நிமிடங்களுக்கு குறைந்தது மூன்று அல்லது ஐந்து நிமிடங்களுக்கு ஆலயமணி மணிகளை தொடர்ச்சியாக ஒலிக்கலாம். ஒரே நேரத்தில் கேட்கும் மணியோசை தமிழ் மக்கள் நினைவு கூர்தலில் ஒன்றாக நிற்பதை உணர்த்தும். அது நீதிக்கான தமிழ் மக்களின் அழைப்பாகவும் இருக்கும்.
தாயகமும் தமிழகமும் அதை ஒரே நேரத்தில் செய்யலாம். அது குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முன்பு அறிவிக்கப்பட்டது ஏழு மணிக்கு என்று. இப்பொழுது அந்த நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது. கிறிஸ்தவ தேவாலயங்களில் ஆறு மணிக்கு தேவதைகளுக்கு என்று மணி அடித்தபின் வேறு மணி அடிக்கும் மரபு இல்லை என்று கூறப்படுகிறது. அதுபோல இந்தக் குருமாரும் ஆறுமணிப் பூசை முடிந்ததும் ஆறு பதினைந்திற்கு மணியோசையை எழுப்பலாம் என்று கேட்டுக் கொண்டதன் பிரகாரம் எல்லா வழிபாட்டிடங்களிலும் ஆறு பதினைந்திற்கு மணியோசையை எழுப்புவது என்று யாழ். சர்வமதப் பேரவை தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது.
ஆறு பதினைந்திற்கு அவ்வாறு மணியோசை ஏழுப்பப்பட்டால் அது நினைவு கூர்தலை இயன்ற அளவுக்கு மக்கள் மயப்படுத்தும். இதற்கு ஆகப் பிந்திய ஓர் உதாரணத்தை இங்கு காட்டலாம். ஐரோப்பிய அமெரிக்கக் கண்டங்களில் கோவிட்-19க்கு எதிரான போரில் முன்னணியில் நின்ற சுகாதார சேவை பணியாளர்களை கௌரவிப்பதற்காக ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு சமூகமும் வௌ;வேறு வழிமுறைகளை கடைப்பிடித்தன. மருத்துவப் பணியாளர்களை ஒவ்வொரு நாடும் தன் பாணியில் பாராட்டியது; கௌரவித்தது.
சில நாடுகள் தமது வாகனங்களின் ஹோர்ன் ஒலியை தொடர்ச்சியாக இசைத்தன. சில நாடுகளில் வாகனங்களின் ஹெட்லைட் தொடர்ச்சியாக ஒளிர விடப்பட்டது. சில நாடுகள் இலத்திரனியல் பதாதைகளை உயர்ந்த கட்டடங்களில் கட்டிவிட்டன. சில நாடுகள் மருத்துவத் தொண்டர்களை போற்றி பாட்டுக்களை இசைத்தன. சில நாடுகள் குறிப்பிட்ட நேரத்தில் ஒலியை எழுப்பி அல்லது விளக்குகளை ஒளிரச் செய்து தமது பாராட்டுக்களை தெரிவித்தன.
இந்த ஆகப்பிந்திய உதாரணத்தை தமிழ்மக்கள் பின்பற்றலாம். இவை எல்லாவற்றினுடையதும் சாராம்சம் ஒன்றுதான். நினைவுகூர்தலை மக்கள் மயப்படுத்துவது. அதை ஆகக்கூடிய பட்சம் சமூக மயப்படுத்துவது.
ஏற்கனவே ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின் கடந்த ஆண்டு நினைவுகூர்தல் நெருக்கடிக்கு உள்ளானது. பௌதீக ரீதியாக மக்களைத் திரட்ட முடியாத ஓர் அரசியல் சூழலில் நினைவு கூர்தலை எப்படி மக்கள் மயப்படுத்துவது என்று கடந்த ஆண்டிலேயே சிந்திக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு சிந்திக்கப்படாத ஒரு வெற்றிடத்தில் இந்த ஆண்டு ஒரு புதிய சவாலாக கோவிட-19 வந்திருக்கிறது. மக்கள் மயப்பட்ட ஒரு நிகழ்வு அது பௌதீக ரீதியாகத் தடுக்கப்பட்டாலும் மானசீகமாக அனுஸ்டிக்கப்படு;ம். இந்தமுறையும் பௌதீக ரீதியாக ஒன்றுகூடலுக்கான வாய்ப்புக்கள் குறைவு. ஒன்றில் வேர்ச்சுவலாக ஒன்றுகூடலாம். அல்லது வேறு வழிகளில் எப்படி வீடுகளில் இருந்தபடியே நினைவுகளை ஒன்றிணைப்பது என்று சிந்திக்கலாம். #கொரோனா #நினைவுகூர்தல் #இனப்படுகொலை