உத்தரப்பிரதேசத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட வீதி விபத்தில் 24 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் நோக்கி நடை பயணமாகவோ அல்லது அவ்வழியே செல்லும் பாரவூர்தி உள்ளிட்ட வாகனங்களில் செல்ல முயல்கின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலையில் உத்தரப் பிரதேசத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்த பாரவூர்தி விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியாகியுள்ளனர்.
ராஜஸ்தானிலிருந்து, பிகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 50 தொழிலாளர்களுடன் சென்று கொண்டிருந்த பாரவூர்தி இன்று அதிகாலை ; உத்தரப் பிரதேச மாநிலம், அவுரையா பகுதியில் வந்து கொண்டிருந்த போது, எதிரே டெல்லியிலிருந்து வந்து கொண்டிருந்த வானுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திலேயே 24 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 22 பேர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 15 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 8ஆம் திகதி மகாராஷ்டிராவில் தண்டவாளத்தில் தூங்கிக்கொண்டிருந்த 16 தொழிலாளர்கள் புகையிரதம் மோதி உயிரிழந்திருந்தனர்.
மே 9ஆம் திகதி மத்தியப் பிரதேசத்தின் நர்சிங்பூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்திருந்தனர். இதுதவிர உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்களில் நடைபெற்ற வீதிவிபத்துகளில் 15 புலம்பெயர் தொழிலாளர்கள் இந்த வாரத்தில் மட்டும் உயிரிழந்திருந்தனா என்பது குறிப்பிடத்தக்கது. #விபத்து #புலம்பெயர்தொழிலாளர்கள் #உயிரிழப்பு