உலகமெங்கும் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தாக்கி உள்ளதாகவும் 2-வது அலை தாக்கும் எனவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகமெங்கும் பரவி வருகிறது. ஊரடங்கு, பொதுமக்கள் முடக்கம், முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை அடிக்கடி கழுவுதல் என பல கட்டுப்பாட்டு வழிகளை கையாண்டும் கொரோனா பரவுவது அதிகரித்தவண்ணமுள்ளது.
உலகமெங்கும் 50 லட்சத்துக்கும் அதிகமானோரை கொரோனா பாதித்து உள்ளதுடன் 3¼ லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 1,400-க்கும் மேற்பட்டோரை கொரோனா தாக்கி இருப்பது பதிவாகி உள்ளதாகவும் இதுவரை இல்லாத வகையில் ஒரு நாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இது எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 49 லட்சத்தை கடந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்த பேரிலும் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகம் எனவும், குறைவான பரிசோதனைகளே உலகமெங்கும் நடந்துவருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொடர்ந்து உலகளவில் அதிக பாதிப்பை சந்தித்து வருகிற நாடாக அமெரிக்கா முதல் இடத்திலும் . அதற்கு அடுத்த நிலையில் ரஸ்யா, பிரேசில், பிரித்தானியா ஆகிய நாடுகள் உள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வருவதற்கு இன்னும் நீண்ட தூரம் சென்றாக வேண்டும் என எச்சரித்துள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் இது குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளை குறி வைத்து தாக்குவது பற்றி கவலையும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் மெலிடா வுஜ்னோவிக் வழங்கிய நேர்காணல் ஒன்றில் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் அச்சுறுத்தலாகத்தான் தொடர்கிறது. இதை மக்கள் புரிந்து கொள்வது அவசியம். கொரோனா வைரஸ் தொற்று முதல்முறையாக ஏற்பட்ட எல்லா இடங்களிலும், 2-வது அலையாக வந்து தாக்கும் வாய்ப்பு இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் கடந்த டிசம்பர் 1ம் திகதி தோன்றியதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் சுமார் 100 நாட்களுக்கு பின்னர்தான் உலக சுகாதார நிறுவனம், கொரோனா வைரஸ் தொற்றை உலகளாவிய தொற்றுநோயாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. #கொரோனா #உலகசுகாதாரநிறுவனம்