10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தி சோதிக்கும் திட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு , மக்கள் முடக்கம் , முககவசம் , தனிமனித இடைவெளியை பின்பற்றல். போன்ற பல்வேறு கட்டுப்பாட்டுமுறைகளைப் பின்பற்றிய போதிலும் தினமும் உலகெங்கும் கொரோனா வைரஸினால் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றனர்.
மேலும் இதுவரை 3 லட்சத்து 36 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் இதற்கான தடுப்பு மருந்தினை கண்டுபிடிப்பதில் பல நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில் இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி மனிதர்களுக்கு செலுத்துவதில் மிகவும் தீவிரமாக உள்ளனர்.
ஏற்கனவே 1000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு கொரோனா தடுப்பூசியை போடும் பணியில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்போது தடுப்பூசியின் பாதுகாப்புத்தன்மை ஆராயப்படும்.
இந்தநிலையில் அடுத்த கட்டமாக 10 ஆயிரத்து 260 பேருக்கு தடுப்பூசியை செலுத்தி சோதிக்கும் திட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நேற்று அறிவித்துள்ளனர்.
முதியோர், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் இந்த தடுப்பூசி போடப்படும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
கொரோனாவுக்கான தடுப்பூசி தொடர்பான மருத்துவ ஆய்வுகள் மிகச்சிறப்பாக முன்னேறி வருவதாகவும் இப்போது இந்த தடுப்பூசி முதியோருக்கு எவ்வாறு வேலை செய்கிறது என்பதை மதிப்பிடப்போவதாகவும் ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி குழுவின் தலைவர் ஆண்ட்ரூ பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.
மேலும் பெரிய அளவிலான மக்கள் கூட்டத்துக்கு இந்த தடுப்பூசி பாதுகாப்பு அளிக்குமா என்பதை சோதிப்பதற்கான ஆய்வுகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வார தொடக்கத்தில் இங்கிலாந்தின் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு உருவாக்கியுள்ள தடுப்பூசியின் 40 கோடி ‘டோஸ்’களுக்கான ஒப்பந்தங்கள் கிடைத்திருப்பதாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி திட்டத்திற்கு அமெரிக்கா 1 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது. அவர்களின் இந்த தேர்வு தோல்வியுற்றால், பெரும் இழப்பை சந்திக்க வேண்டும் என்பதுடன் வெற்றி பெற்றால் சில மாதங்களிலேயே தடுப்பூசி வெகுஜன பயன்பாட்டுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது #கொரோனா #தடுப்பூசி #இங்கிலாந்து #விஞ்ஞானிகள்