214
யாழ்.வடமராட்சி கிழக்கு பகுதியில் நடைபெற்ற வெடிப்பு சம்பவத்திற்கு உள்ளூர் தயாரிப்பு வெடிபொருள் ஒன்றே பயன்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த வெடிபொருள் நீர் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்ரிக் குழாய் , அதற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்ரிக் மூடி (என் கப்) சி.4 ரக வெடிமருந்து சைக்கிள் போல்ஸ் , டெட்னேட்டர் மற்றும் பற்றரி ஆகியவற்றை பயன்படுத்தி உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடிபொருளே வெடித்துள்ளது. என ஆரம்ப கட்ட விசாரணைகளின் அடிப்படையில் காவல்துறைதகவல்கள் ஊடாக அறிய முடிகிறது.
குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பின்னர் அவ்விடத்திற்கு சென்ற காவல்துறை விசேட அதிரடி படையினரின் வெடிகுண்டு அகற்றும் பிரிவினர் வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பகுதிகளை சூழவுள்ள பகுதிகளிலும் வெடிபொருட்கள் உள்ளனவா என தேடுதல்களை நடத்தியதுடன் , வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பகுதிகளிலும் சேதனைகளை முன்னெடுத்தனர். அதேவேளை காவல்துறை தடயவியல் பிரிவினர் சம்பவ இடத்திலிருந்து தடயங்களை சேகரித்துக்கொண்டனர்.
குறித்த வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மந்திகை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிசை பெற்று வருகின்றனர். அதேவேளை வெடிப்பு சம்பவத்தினை அடுத்து அவ்விடத்தில் பெருமளவான காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடும் நபர்களே காவல்துறையினரை இலக்கு வைத்து குறித்த வெடிப்பு சம்பவத்தினை ஏற்படுத்தி இருக்கலாம் எனும் கோணத்தில் இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். #உள்ளூர் # வெடிபொருள் #வடமராட்சி
Spread the love