இலங்கை பிரதான செய்திகள்

மஹிந்தானந்தவின் குவைத் குண்டுக் கதைக்கு தேரர்கள் எதிர்ப்பு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு நாடு திரும்பிய இலங்கை தொழிலாளர்களை “மனித குண்டுகள்“ என முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விமர்சித்தமைக்கு பௌத்த அமைப்பு ஒன்று கண்டனம் வெளியிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த மே 25ஆம் திகதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் ஒன்றில், கூட்டத்தில், ”மிகத் தெளிவாக அந்த நாட்டில் உள்ள எங்கள் கொரோனா நோயாளர்களை இங்கு அனுப்பியுள்ளனர். எங்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவே எமக்கு புலப்படுகிறமு.” என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள,”ஹெல பொது சவிய” அமைப்பின் தலைவர் புதுகல ஜனவங்ச தேரர், இவ்வாறான கருத்தை வெளியிடும் அமைச்சர் ஒருவர் இருக்கும் நாட்டில் வாழ்வது குறித்து கவலையடைவதாக குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட பல நாடுகள் கொரோனா தொற்றை புறக்கணித்து, தங்கள் தொழிலாளர்களை மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மீள அழைக்கின்ற நிலையில், குவைத் எமது நாட்டிற்கு வெடி குண்டை அனுப்பியுள்ளதாக, அவமானகரமான கருத்தை வெளியிடுவதை வன்மையாக கண்டிப்பதாக புதுகல ஜனவங்ச தேரர் வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மஹிந்தானந்த அளுத்கமகே கொரோனா தொற்றுடன் முஸ்லீம்களை தொடர்படுத்தி வெளியிட்ட வெறுக்கத்தக்க கருத்திற்கு எதிர்ப்புகள் வெளியிடப்பட்டிருந்த விடயத்தையும் அந்தக் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள மத்திய கிழக்கு தொழிலாளர்களை புறக்கணிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ள, புதுகல ஜனவங்ச தேரர், வெளிநாடுகளுக்கு தொழில் நிமித்தம் சென்றுள்ள பலர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

தொற்று பரவ ஆரம்பித்த நாட்களில் மத்திய கிழக்கில் உள்ள இலங்கை தொழிலாளர்களை நாட்டிற்கு மீள அழைப்பது தொடர்பில் அந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள் பலமுறை கோரியதாகவும், எனினும் அரச அதிகாரிகள் கடந்த காலங்களில் ஐரோப்பா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற பிற நாடுகளிலிருந்து தங்கள் நண்பர்களையும் அறிமுகமானவர்களையும் திருப்பியழைக்க நடவடிக்கை எடுத்ததாகவும்   ஜனவங்ச தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.

சீஷெல்ஸில் இருந்து நோயாளிகளை அழைத்துவந்து சிகிச்சையளிக்கின்ற நிலையில், மத்திய கிழக்கில் அடிப்படை வசதிகளேனும் இன்றி தவிக்கும் தாய்நாட்டு பிரஜைகளை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டுடுமெனவும் அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

விமானத்தின் ஊடாக அவர்களை நாட்டிற்கு அழைத்துவருவது கடினமான செயலாக காணப்படும் பட்சத்தில், அவர்களை கடல் மார்க்கமாகவேனும் அழைத்துவர முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வருடாந்தம் சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியை நாட்டிற்கு பெற்றுத்தரும், கொரோனா தொற்றுநோயால் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள மத்திய கிழக்கு தொழிலாளர்கள் தொடர்பில் அமைச்சர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் எனவும், தற்போது இலங்கையில் வாழும் அவர்களது குடும்பத்தினர் தொடர்பிலும் அரசு அவதானம் செலுத்த வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றுநோய் பரவலால் சிக்கித் தவிக்கும் அல்லது சிரமங்களை எதிர்கொள்ளும் வெளிநாடு வாழ் இலங்கையரை மீள அழைப்பது தொடர்பில்  புதிய திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.

எவ்வாறெனினும் 20 நாடுகளில் இருந்து 5,485 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அரசு அறிவித்திருந்தது. மேலும், துபாயில் இருந்து நாட்டை வந்தடைந்த பெரும்பாலானோர்  கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. #மஹிந்தானந்தஅளுத்கமகே   #குவைத்  #தேரர்கள் #எதிர்ப்பு   #கொரோனா

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.