இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமானவர்கள் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களில் மாதங்களில் மாத்திரம் டெங்கு காய்ச்சல் காரணமாக குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தக் காலப் பகுதியில் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட 19, 474 பேர் பதிவாகியுள்ளனர். எவ்வாறாயினும் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 10 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத்தின் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
சுகாதார மற்றும் சுதேச அமைச்சர் பவித்ரா வன்னிஆராய்ச்சி மற்றும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் பங்கேற்ற விசேட கலந்துரையாடலில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இந்தக் கலந்துரையாடல் கடந்த மே மாதம் 28 ஆம் திகதி சுகாதார அமைச்சில் இடம்பெற்றுள்ளதாக அரசத் தகவல் திணைக்களம் கூறியுள்ளது.
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 105,049 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள அதேவேளை 150 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளமை இந்த கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது. மழையுடனான காலநிலையுடன் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், கோவிட் 19 உடன் ஏனைய நோய்களையும் முறையாக நிர்வகிப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும் நாட்டில் டெங்கு காய்ச்சல் மற்றும் எலிக்காய்ச்சல் ஆகியன இலங்கையின் சுகாதார துறை மீதான அழுத்தத்தை அதிகரித்துவருவது தொடர்பில் இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கடந்த ஏப்ரல் மாதமே அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
தமது ஆய்வுப் பிரிவின் அறிக்கையின் பிரகாரம் டெங்கு காய்ச்சல் மற்றும் எலிக்காய்ச்சல் ஆகியன இலங்கையின் சுகாதாரத்துறை மற்றும் சமூகத்தின் மீதான அழுத்தத்தை அதிகரித்து வருவதாக கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் எம்.ஜி.யூ.ரோஹணவின் கையொப்பத்துடன் வெளியான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. #கொரோனா #டெங்கு #சுகாதாரதுறை #எலிக்காய்ச்சல்